9 மணி நேர ட்ராஃபிக் ஜாம்

 வயநாட்டுக்குத் தாமரசேரியில் இருந்து ஏறுவது என்றைக்குமே சலிக்காத விஷயம் ....அதுவும் மழைப்பொழுதுகள் என்றால் அந்தப் பயணம் அதியற்புதமாக இருக்கும். 60 நிமிடங்கள் எடுக்கும் 30 கிலோமீட்டர் நீளம் உள்ள மலைச்சாலை முழுவதுமே பேரழகு நிரம்பி வழியும்.

 மாலை 3:30 மணிக்குத் தாமரசேரியிலிருந்து வலப்புறம் வயநாட்டை நோக்கித் திரும்பியாயிற்று . கருக்கல் கட்டிக் கொண்டிருந்த மேகம் மழையாக இறங்கத் தொடங்கியிருந்தது . ஜோரான தொடக்கம் என முழுமையாக மகிழ்ந்து முடியும் முன் நமக்கு முன்பாக வாகனங்கள் தேங்க ஆரம்பித்து அப்படியே நிற்கத் துவங்கின. ஒன்றிரண்டு காவலர்கள் தென்பட்டதும் ஏதோ டிராஃபிக் ஜாம் போல, பத்து நிமிடங்களில் சரியாகிவிடும் என நான் நினைக்கக் கடவுள் வேற ஒன்றை நினைத்திருந்தார். நம்புங்கள்... ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய அந்த மலைச்சாலையை நாங்கள் கடக்க 9 மணிநேரம் பிடித்தது. 

விரைவில்‌ சரியாகி‌விடும் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே இரண்டு மூன்று கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து இருக்கும்போது மணி ஏழாகிவிட்டிருந்தது .

திரிசங்கு நிலை.... இப்படியும் போக முடியவில்லை அப்படியும் போக முடியவில்லை... இரவு 9 மணிக்கு மெல்ல ஜெர்க் ஆக ஆரம்பித்திருந்தது. இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்ததாலும் அவ்வப்பொழுது பெய்த மழையால் கட்டாயம் ஏசி போட்டாக வேண்டியிருந்ததாலும் காரில் பெட்ரோல் வேறு வேகமாகக் காலியாகக் கொண்டிருந்தது . கழுத்து உயர அண்ணாந்து பார்த்தாலும், கீழே பார்த்தாலும் வளைந்து நெளிந்து கிடக்கும் மலைச்சாலை முழுவதும் வெளிச்சப் புள்ளிகளாக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நிற்பது தெரிந்தது .பசி வேறு ஆரம்பித்து இருந்தது. 

 ஒரு வழியாக ஒன்பதரை மணிக்கு இடப்புறமாக ஒரு சிறிய பேக்கரி கம் ஹோட்டல் தென்பட்டது. பட்டென ஓரம் கட்டி நிறுத்திய பின்பு தான் தெரிந்தது, மொத்தக் கூட்டமும் கடையைக் கபளீகரம் செய்ததில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை என்று கை விரித்தார் கடைக்காரர். இதை முன்பே கணித்து நிறைய ஸ்டாக் வைத்திருந்தால் ஓவர் நைட்டில் ஒபாமாஆகி இருப்பார் .

தொடர்ந்து மேலேற அடுத்து இரண்டு கிலோ மீட்டரில் ரெஸ்டாரன்ட் என்று ஒரு போர்டு பளிச்சிட்டு கொண்டு இருந்தபோது மணி 11 :30 ஆகியிருந்தது . அப்படியே ஓரங்கட்டி இறங்கிப் போனோம். ஐந்து வெங்காய வடைகளும் நான்கு அவித்த முட்டைகளும் இருந்தன. ஆயிரம் ரூபாய் சொன்னாலும் வாங்கத் தயாராக இருந்தோம். சிக்கன் கிரேவி வைத்திருந்த பாத்திரம் ஒன்று இருந்தது. கையை விட்டு ஓரத்தில் ஒட்டி இருந்த துளிகளை வழித்தெடுத்து முட்டைகளின் மீது ஊற்றிக் கொண்டிருந்தபோது நார்த் ஈஸ்டில் இருந்து வந்த சமையலறையில் பணிபுரிந்து கொண்டிருந்த அந்த நபர் அந்தத் தகவலைச் சொன்னார் . கீழே இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு இரவு உணவு வந்து கொண்டிருக்கிறது, புக் செய்தவர்கள் வந்து சேராததால் கொஞ்சம் மீதி இருக்கிறது வேண்டுமா என்றார். எதிர்பார்க்கவே இல்லை.... நான்கு கிண்ணங்களில் நெய்ச் சோறும் மீன் மசாலாவும் கிடைத்தன. ஏற்கனவே வடைகளும் முட்டைகளும் உள்ளே போயிருந்தாலும் வெறி அடங்கத் தின்று முடித்தோம் . கால் கிண்ணம் நெய்ச் சோறும் கொஞ்சம் குழம்பும் மீதம் இருந்தன. பதிவு செய்துவிட்டு நெஞ்சார்ந்த நன்றி நவின்று காரை நகர்த்தி டிராஃபிக்கில் ஐக்கியமாக, எங்களுக்கு உணவு வழங்கிய உணவகப் பணியாளர் அந்தக் கால் கிண்ணம் நெய்ச்சோறை உண்டு கொண்டிருந்தார். அவருக்கு அன்று அவ்வளவுதான் உணவு....!

முதலிலேயே தெரிந்திருந்தால் முழுக்கிண்ணத்தையும் மீன் குழம்புடன் அப்படியே கொடுத்திருந்திருப்போம். 

நாங்கள் பார்ப்பதை அறிந்து புன்னகையுடன் கையசைத்தார். வயிறு நிரம்பி இருந்தாலும் மனதை என்னவோ செய்தது. எங்கள் முகக்குறிப்பை அறிந்த அவர்," இது போதும் ....நோ ப்ராப்ளம்... காலையில் பார்த்துக்கொள்ளலாம்....!" என்பது போலச் சைகையால் எங்களைச் சமாதானப் படுத்தினார். ஒவ்வொரு நாளும் உலகில் இருக்கும் அத்தனை உயிர்களும் பசியாறித் தூங்கும் வரம் வேண்டும் இறைவா....!

வயநாடு மாவட்டம் ஒருபுறம் கர்நாடக மாநிலத்தையும் , மறுபுறம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட அட்டகாசமான லொகேஷன்களுடன் இருக்கும் ஓர் அழகு மிகு மலை மாவட்டம்‌ . தசராக் கொண்டாட்டங்களுக்காக பத்து நாள் விடுமுறையிலிருந்த கர்நாடகாவிலிருந்து மொத்தக் கூட்டமும் வயநாட்டில் இறங்கி இருக்கிறது .

அதுபோகத் தமிழ்நாட்டிலிருந்தும் கேரளாவிலிருந்தும் ஒரு பெருங்கூட்டம் ...

அதுபோக ,கோழிக்கோட்டையும் மைசூரையும் இணைக்கும் அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் லோடுகளை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கிலான கணக்கான லாரிகள் ....

அதுபோக, பெங்களூருவில் இருந்தும் மைசூருவில் இருந்தும் வயநாட்டின் மானந்தவாடி, கல்பேட்ட, சுல்தான் பத்தேரி போன்ற ஊர்களில் இருந்து கோழிக்கோடு ,கொச்சி, திருவனந்தபுரம் ,திருச்சூர், ஆலப்புழா ,பத்தனம்திட்ட, கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அணியணியாகச் செல்லும் கேரள ,கர்நாடகா அரசுப் பேருந்துகள் மற்றும் ஆம்னிப் பேருந்துகள்...

மூச்சுத் திணற வைக்கும் போக்குவரத்து நெரிசல் வெளிச்சத்திலேயே ஏறி விடுவோம் ,ஏகப்பட்ட வியூ பாயிண்ட்களில் வீடியோக்களையும் செல்ஃபிக்களையும் எடுக்கலாம் என்ற நமது திட்டம் மொத்தத்திலும் மண்ணள்ளிப் போட்டது.

கல்பேட்டயில் ஹோம்‌ஸ்டே ஒன்றை புக் செய்திருந்தோம் .இரவு ஒரு மணி ஆகிவிட்டதால் வர மாட்டார்கள் என எங்களது அறையை வேறொரு குரூப்புக்குக் கொடுத்து இருந்தார்கள். ஓனர் இடையில் எங்களைத் தொடர்பு கொண்டாரா எனத் தெரியவில்லை. சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கலாம் .அவரது எண்ணை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை .தன்னுடைய வீட்டிலேயே தன்னுடைய பெட்ரூமில் தங்கச் சொன்னார் .

இரண்டு நாள் கழித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கோவைப் பதிப்பில் கூட இந்த டிராஃபிக் ஜாம் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள் . மாநில மனித உரிமை மையம் கூடக் கண்டனம் தெரிவித்திருந்தது. பேருந்துகளில் வந்தவர்கள் ,சாப்பிடாமல் வந்தவர்கள், பாத்ரூம் போக முடியாமல் தவித்தவர்கள், குழந்தைகள் எனப் பலரும் சிரமத்த்துக்கு உள்ளாகியிருப்பார்கள். உச்சகட்டக் கொடுமை என்னவெனில் ,கார்களில் வந்தவர்கள் கூட அவ்வப்போது ஓரங்கட்டி இறங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது, பேருந்து ஓட்டுநர்களின் நிலைமைதான் வெகு பரிதாபம் .

இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஸ்டார் ஹோட்டல்களைக் கொண்ட மாநிலமான கேரளாவில் ஒவ்வோராண்டும் வரும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை கோடியைத் தாண்டும் என்கிறார்கள். கட்டுக்கடங்காத சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் எனக் கேரளாவில் விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன என வலைத்தளங்களில் படித்தேன் .

வயநாட்டில் இப்போதே செம்பாற சிகரத்துக்கு ( Chembra Peak -ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் பார்த்திருப்போமே, ஓர் இதய வடிவ ஏரி,அதுதான்....ஐந்து மணிநேர மலையேற்றம்) ஒரு நாளைக்கு 200 பேருக்குத் தான் அனுமதி எனக் கொண்டு வந்து விட்டார்கள். இடையில் நான்கைந்து ஆண்டுகள் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தார்கள் சூழலியல் காரணமாக.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நாளைக்கு மிக லிமிடெட் ஆக 200 பேருக்கு மட்டும் இப்பொழுது அனுமதி வழங்கு கிறார்கள். இங்கு மட்டும் ஆன்லைன் புக்கிங் இல்லை. சீசன்களில் நள்ளிரவு முதலே காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். 

சுற்றுலா முதன்மைத் தொழிலாக இருக்கும் மாநிலத்தில் வருமானத்தைப் பார்க்கப் போகிறார்களா, சூழலியலைப் பார்க்கப் போகிறார்களா எனத் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?