RUSKIN BOND

 கொல்கத்தாவில் இருந்து டேராடூனுக்கு இரண்டு இரவுகள் ரயிலில் பயணித்துக் காலையில் வந்து இறங்கிய சிறுவன் ரஸ்டிக்கு அவனது பாட்டி  தயார் செய்து வைத்திருந்த கஞ்சி, வாட்டப்பட்ட ரொட்டி, முட்டை ஊத்தப்பம், தக்காளியுடன் வறுத்த பன்றி இறைச்சி, வாட்டப்பட்ட ரொட்டிக்கானபழப்பாகு, இனிப்பான பால் விடப்பட்ட தேநீர் ஆகியவற்றைக்  கொண்ட காலை உணவுடன் தான் ரஸ்கின் பாண்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். 

தற்செயலாக ரஸ்டியின் வீர தீரங்கள் என்று தலைப்பிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் ஒன்று கைக்குக் கிடைத்தது.  அதன் முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியிலேயே மேற்கண்ட அசத்தலான எழுத்தின் மூலம் Ruskin Bond  என்னை வெகுவாகக் கவர்ந்தார். 

 சந்திப்பிழைகள் மலிந்து கிடப்பதாலும் அப்படி ஒன்று இருக்கிற உணர்வு கூட இல்லாமல் இப்பொழுது பலரும் எழுதுவதாலும் தமிழ் நூல்களாக இருந்தால் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தவிர்த்து விடுவதும் , பிழைகளற்று இருந்தால்  எடுத்துக் கொள்வதும் எனது வாடிக்கையாகி விட்டிருக்கிறது.  கே பாலச்சந்திரன் என்பவரது தமிழாக்கத்தில் பிழைகளற்ற தெளிந்த நூலாக‌ ரஸ்டியின் வீரதீரங்கள் என்ற புத்தகம்  கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே Ruskin Bond  மனதுக்கு நெருக்கமாகிவிட்டார் . 

 மொழிபெயர்ப்பிலேயே  முழுவதுமாக ஈர்த்துவிடுகிறார் எனில் மூல நூலில் இன்னும் ஈர்ப்பார் என அடுத்து வந்த புத்தகத் திருவிழாவில் ரஸ்கின் பான்ட் கலெக்ஷன்ஸ்  ஏகப்பட்டதை அள்ளி வந்து விட்டேன்.

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் இதுபோல யாராவது ஒருவர் அமைந்து விடுகிறார்கள் ,அவர்களுடைய மொத்தப் படைப்புகளையும் வாங்க!

  வைரமுத்து, சுஜாதா, ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, Ruskin Bond, Chetan Bhagth , க.சீ. சிவகுமார் எனப் பட்டியலிடலாம் .

 Ruskin Bond இன் The Night Train At Deoli என்ற சிறுகதையைத்தான் நான் முதன்முதலாகப் படிக்கிறேன்.   1940களின் பிற்பகுதியில் இருந்த இமயமலைச் சூழலை ரஸ்கின் வெளிப்படுத்தி இருக்கும் விதம் அலாதியானது. 

 சொக்க வைக்கும் எளிய நடையில் சுற்றுப்புறத்தை அவர் Detailing செய்வதும் ,வருணிப்பதும் வாசிக்கs சுகமாக இருக்கும் . அருந்ததி ராய் தனது The God Of Small Things நாவலில்  ஒரு லெவல் கிராஸிங்கை  விவரிப்பார்.... அவ்வளவு நுணுக்கமாக இருக்கும் .அதுபோலவே இவரும் . 

 இரவு உறங்கும் முன்பு ரஸ்கினின் எழுத்துக்களைப் படித்த பிறகு உறங்கினோம் என்றால் காலையில் நாம் எழும்போது  டேராடூனில் விழிப்பது போல நமக்குத் தோன்றும் அளவு இருக்கும் அவரது எழுத்துக்களின் ஈர்ப்பு விசை .

 கல்யாண்ஜியை நினைவூட்டும் மென்மையான, இதமான பார்வை அவருடையது. இரவு நேர ரெயில் பயணம் மேற்கொள்ளும் கதையின்நாயகன் அதிகாலையில் ஒரு சிறு ஸ்டேஷனில் ரெயில் நிற்கும் அந்த இரண்டு நிமிடங்களில் சிறு கூடைகள் விற்கும் இளம்பெண் ஒருத்தியைப் பார்ப்பதும், அடுத்த முறை திரும்பும் போது அவளைச் சந்தித்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளுடன் பேசுவதும் ,அதற்கு அடுத்து அவளைத் தேடி வரும்போது அவள் இல்லாமல் இருப்பதைக் கண்டு ஏமாந்து போவதும்தான் கதை.நுண்ணிய உணவுகளை ஆழமாகக் கடத்துவதன் மூலம் அழுத்தம் திருத்தமாக நமக்குள் அமர்ந்து கொள்கிறார் Ruskin. 

அவருடைய Crazy Times With Uncle Ken  போன்ற கதைகள் மூலம் சிறார்களுக்கு வாசிப்பு உலகத்தை அறிமுகப்படுத்த முடியும் . சிறார்களுக்கான படைப்புகளில் ரஸ்கின் பாண்டின் பங்கு மிகப் பெரியது .

இவ்வாண்டு கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த நண்பர் மல்லிகார்ச்சுனன் தனது மகனுக்காக ரஸ்கின் பாண்ட் நூல்களை வாங்க விரும்பிய போது நான்கைந்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்‌ . இளம் தலைமுறையினர் வாசிப்பென்னும் மாயாஜால உலகுக்குள் நுழைய இப்புத்தகங்கள் திறவுகோல்களாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

 ஆங்காங்கு மெல்லிய நகைச்சுவையை இழைய விடும் ரஸ்கின்  ஒரு புத்தகக் கடையில் இருக்கும் பொழுது அங்கு நடக்கும் சம்பவங்களை விவரித்திருக்கும் விதம் அவருக்குள் நகைச்சுவை எவ்வளவு தூரம் ஆழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும்  .

   முதன்முதலில் தன்னுடைய நாவல் தொடர்கதையாக தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வந்த போது அதிகாலையிலேயே கடைக்குச் சென்று காத்திருந்து இதழை வாங்கி தனது படைப்பை அதில் பார்த்துப் பரவசம் அடையும் காட்சி உன்னதமானது .அதிக நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்கள் முதன்முதலில் தனது படைப்பு பத்திரிகையில் வெளிவந்தபோது அவிநாசி சாலையில் அந்தப் பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டு நான் தான் அந்த ராஜேஷ்குமார் எனக் கத்த வேண்டும் போல் இருந்தது என்று ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார்.   விகடன் ப்ளஸ்ஸில் எனது பயணத்தொடர்  துவங்கிய முதல் வாரம் இந்தச் சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போயின . 1980 களின் தொடக்கத்தில் தூர்தர்ஷன் நாடகங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த எனது சித்தப்பா டைட்டில் கார்டில் அவரது பெயரைப் பார்த்தபோது அடைந்த பரவசத்தை 20 ஆண்டுகள் கழித்து ஒரு கோடை கால மாலை நேர வாக்கிங்கில்  விவரித்த விதம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

கவிதைகளையும் Bond  விட்டு வைக்கவில்லை. Lone Fox Dancing என்ற அவரது குறுங்கவிதை எனது ஆல் டைம் ஃபேவரைட் . 

 படைப்புலகம் தனக்குள் வருபவர்களை இழுத்து அரவணைத்துக் கொள்கிறது. அதன் கதகதப்பினை ரஸ்கின் பான்ட் போன்றவர்கள் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி