அணிலாடும் முன்றில்
கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழாவுக்கு இரண்டாவது நாளில் சென்றிருந்தேன். இம்முறையும் எல்லா ஸ்டால்களிலும் மக்கள் புத்தகங்கள் வாங்குவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இளம் தலைமுறையினர் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. சென்ற முறை Food Court இருந்த இடத்தையும் சேர்த்து ஸ்டால்கள் அமைத்திருந்தனர்.
நண்பர் ஆறுமுகம் நா.முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்' கிடைத்தால் வாங்கி வரச் சொல்லியிருந்தார்.
ஏற்கெனவே அணிலாடும் முன்றிலைப் படித்திருந்தாலும் புத்தகத்தை அவரிடம் கொடுப்பதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை படித்து முடித்தேன். 'கிராமம் நகரம் மாநகரம்' கல்கியில் தொடராக வந்த போதுதான் முதன்முதலாக நா.முத்துக்குமாரை வாசிக்கிறேன் . அதன்பிறகு பட்டாம்பூச்சி விற்பவன், வேடிக்கை பார்ப்பவன் உள்ளிட்ட சில.
மனதுக்கு நெருக்கமான , சற்றே ஏக்கமும் நெகிழ்ச்சியும் இழையோடும் மென்னடை அவருடையது.
அணிலாடும் முன்றிலில் அண்ணன் , அக்கா , தம்பி என உறவுமுறைகளைத் தலைப்பாகக் கொண்டு ,அதற்கேற்றவாறு தான் வாசித்த படைப்புகளிலிருந்து சில வரிகளை எடுத்து அதன் பின்னணியில் எழுதியிருப்பார். அதில் ஒரு பகுதியில் ஒரு சிற்றூருக்கு வெயிலும் மழையும் வந்த நாட்களை ஓர் அண்ணனின் பார்வையில் எழுதி இருப்பார். வெம்மை தகிக்கும் பொட்டல் காட்டில் சிறுவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதற்காக வெயில் அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டடத்தின் உச்சியில் வசதியாக அமர்ந்து கொண்டது என்ற வரிகளைப் படிக்கும் பொழுது ,தெருவில் வெயில் ஒரு பூனையைப் போல ஊர்ந்து கொண்டிருந்தது என்கிற எஸ். ராமகிருஷ்ணனின் வரிகள் நினைவுக்கு வந்தன . வெயிலையும் பூனையையும் இணைத்த அந்த வரிகளைப் படிக்கும் பொழுது இது என்னவிதமான உவமானம் என்கிற வியப்பு மேலிட்டாலும் சற்று அந்த வரிகளுக்குள் ஊறிக் கிடந்த பொழுது அதனுடைய பன்முகப் பரிமாணங்கள் புலப்பட ஆரம்பித்தன .
அண்ணன் எனத் தலைப்பிட்ட அந்த அத்தியாயத்தின் முதல் பகுதியில் வெயிலைக் கூட்டி வந்த முத்துக்குமார் இரண்டாம் பாதியில் மழையைக் கூட்டி வருவார். அதுவும் முதிர்ந்த மழை..... நேரடியாக மழையைப் பார்ப்பதை விடச் சுட்டெரிக்கும் வெயிலைச் சில காலம் அனுபவித்து விட்டு மழையைப் பார்ப்பவர்களுக்குத்தான் மழையின் முழு அழகையும் உணர முடியும்.
வாசிப்பு என்னும் சுக உலகத்துக்குள் புக இருப்பவர்களுக்கு முத்துக்குமாரின் நூல்களும் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்; குறிப்பாக அணிலாடும் முன்றில்!
புத்தகத் திருவிழாவிலிருந்து கிளம்பும்போது பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்த நண்பர் ஒருவரை பார்க்கிங்கில் சந்தித்தேன். " உங்களை இங்கு பார்ப்பேன் என்று என் உள் மனது சொன்னது" என்றார். என்னென்ன புத்தகங்கள் வாங்கி இருக்கிறீர்கள் என நான் வாங்கி இருந்த புத்தகங்களை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தவர் Psycho - Cybernetics ஐயும் அணிலாடும் முன்றிலையும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். அணிலாடும் முன்றில் என்பதன் பொருள் என்ன என்று கேட்டார் .அவரிடம் பகிர்ந்து கொண்டதை இங்கு பதிகிறேன்.
பேச்சினூடே சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதைப் போலச் சங்க இலக்கிய வரிகளைப் புத்தக தலைப்பாகவோ, கதை- கவிதைத் தலைப்புகளாவோ வைப்பதை நிறையப் பேர் விரும்புகிறார்கள். நானும் கூட எனது நூலுக்கு, வலைத்தளத்துக்குத் தலைப்புகளைப் பண்டைய இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன் . சுட்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம் .
அணிலாடும் முன்றில் என்பது 41 வது குறுந்தொகைப் பாடலில் வரும் ஒரு சொல்லாட்சி. முன்றில் என்ற சொல்லுக்கு முற்றம் என்று பொருள். முன்றில் என்பது இல்முன் என்பதன் இலக்கணப் போலியாகும்.
நகர்ப்புறம் -புறநகர்
கால்வாய் -வாய்க்கால்
இல்வாய் - வாயில்
கொம்புநுனி- நுனிக்கொம்பு
கிளைநுனி -நுனிக்கிளை
இவற்றில் எல்லாம் நிலைமொழியும் வருமொழியும் இடம் மாறிப் பொருள் மாறாமல் வழக்காகி வருகின்றன.
அதுபோல இல்முன் - இல்லத்தின் முன் பகுதி- முன் இல் -விதி இன்றி றகரம் தோன்றி முன்றில் என்ற அழகான தமிழ்ச் சொல்லாகி வழங்கி வருகிறது.
மக்கள் யாரும் இல்லாத வீட்டு முற்றத்தின் தனிமையில் அணில் விளையாடுவதைப் போலத் தன்னை விட்டுத் தலைவன் பிரிந்த போது தானும் பொலிவிழந்து காணப்படுவதாகத் தலைவி வருந்துவதை குறுந்தொகையின் 41வது பாடல் நயத்துடன் விளக்குகிறது. தலைவன் தன்னுடன் இருக்கும்போது சிற்றூரில் இருந்தாலும் அதுவே விழாக்காலம் பூண்ட பேரூராகவும் , தலைவன் பிரிந்த பிறகு நீரும் மழையும், உணவும் துணியும் அற்று மக்கள் வெளியேறிய பின் யாருமற்ற வீட்டில் அணில் விளையாடும் முற்றத்தைக் கொண்ட வெற்றூர் ஆகிவிட்ட சிற்றூராகவும் அதே ஊர் அவளுக்குத் தெரிகிறது.
சுவை ததும்பும் அழகிய இப்பாடலை எழுதியவர் யார் என்று தெரியாததால் அவரது பெயரைப் பாடலைக் கொண்டே அணிலாடும் முன்றிலார் என்று தமிழ் இலக்கியம் பதிவு செய்கிறது .
குறுந்தொகைப் பாடல்:
காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே!
மற்றொரு குறுந்தொகைப் பாடலில் மாமலாடனார் இயற்றிய "முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து" என்றோர் அழகிய வரி வருகிறது.
சுருங்கக் கூறின், தன்னைப் பிரிந்து சென்ற தலைவன் இருக்கின்ற நாட்டிலும் முற்றத்தில் தானியங்களைக் கொத்தித் தின்று கூடடையும் குருவிகளைக் கொண்ட மாலைப் பொழுதும் தனிமையும் இருக்கும் அல்லவா எனத் தலைவி பிரிவுத் துயரால் தோழியிடம் வருந்துகிறாள்.
Atrium என்று எளிதாக ஆங்கிலத்தில் நாம் கடந்து செல்லும் முற்றம் தமிழர் வாழ்வு முறையின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது .
"வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்...
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும் " என்ற திரைப்பாடலில் பி.சுசீலா அவர்கள் வசீகரக் குரலில்தான் முற்றம் என்ற சொல் பள்ளி வயதில் முதன்முதலில் மனதில் பதிந்தது. உயர்நிலை வகுப்பில் தமிழ் இலக்கணப் பாடத்தில் முன்றில் அறிமுகமானது.
நிலாமுற்றம் என்பது வீட்டின் மாடியில் நிலவொளியை ரசிப்பதற்காகக் கட்டப்படும் திறந்த மாடம்.
இதற்கு நிலாமாடம், மேன்மாடம், அரமியம், சந்திரசாலை என்றும் பெயர்களுண்டு.
"நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்"
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி வரிகள் இவை .
"ஆங்கது கேட்டோ ரரமிய மேறித்
தாங்காது வீழுந்து தாரைசா வுற்றதூஉம்"
மணிமேகலைப் பாடலிது. தாரை அரமியம் ஏறி வீழ்ந்த நிகழ்வைக் கூறும் வரிகள் இவை.
முற்றத்தில் அமர்ந்தவாறே முடிக்கின்றேன்.
முற்றும்.....!
Excellent write up about one the very best books Anna 🤩 🙏🏿
ReplyDelete