பேக்கரிகள்
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பயணித்திருப்பவர்கள் கோயம்புத்தூர் -திருப்பூர்ப் பகுதிகளில் மட்டும் அளவுக்கதிகமான பேக்கரிகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் , அத்தனையிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்பதையும் கவனித்திருக்கக் கூடும்.
இரவும் பகலுமாக லைட் டீ, மீடியம் டீ, சுக்கு காஃபி, சுக்குப் பால், லெமன் டீ, பாதாம்பால் ஹாட் & கூல், பால்,பூஸ்ட் ,இஞ்சி டீ எனக் குடித்தும், வடை, போண்டா, பஜ்ஜி, பஃப்ஸ், சமோசா, சுண்டல், சால்ட் பிஸ்கட், சாட் வகையறாக்கள் ,தேங்காய்பன் எனத் தின்றும் தள்ளுகிறார்கள்.
போகையிலும் வருகையிலும் பேக்கரியில் தனியாகவோ , நண்பர்களுடனோ குறைந்தபட்சம் ஒரு குவளைத் தேநீராவது அருந்துவதென்பது பலவித சௌகர்யங்களைத் தருகிறது. வாகனத்தை நிறுத்தி ஃபோன்கால்கள் பேச, டாய்லெட் பயன்படுத்த, யாரையேனும் சந்திக்க , ட்ரைவிங்கின் போது சற்று ரிலாக்ஸ் செய்ய, ஓய்வெடுக்க என பேக்கரிகள் மல்டி பர்பஸ் பாயின்ட்டுகளாக மாறிவிட்டிருக்கின்றன.
பேக்கரிகள் இல்லாத சாலைப் பயணங்களைக் கற்பனை செய்ய இயலவில்லை.
என் வீடிருக்கும் பகுதியில் ஏற்கெனவே விதவிதமான பேக்கரிகள் நிறைந்திருந்தாலும் கடந்த ஒரு மாதகாலத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிதாக ஆறு பேக்கரிகள் முளைத்திருக்கின்றன. இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டிய ஒரு செய்தி என்னவெனில், இந்தப் பதிவுகூட அந்த ஆறு பேக்கரிகளுள் ஒன்றில் அமர்ந்தபடிதான் எழுதப்படுகிறது.
அதிலும் சில பேக்கரிகளில் நாள்தோறும் ஏதாவது சிம்பிளான கேக் கட்டிங் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நள்ளிரவுகளில் நடந்துகொண்டே இருக்கின்றன. இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி, பாலி டெக்னிக், நர்சிங் காலேஜ், ஸ்கூல் ஆஃப் பிசினஸ் , பல்நோக்கு மருத்துவமனைகள், பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி, மருந்தியல் கல்லூரி எனக் குறைந்த பட்சம் இருபது நிறுவனங்களாவது இருப்பதோடு, ஏகப்பட்ட தொழில் முனையங்களும் இருப்பதால் இரவு பத்து மணிக்குப் பிறகும் பேக்கரிகள் பரபரப்பாக, கலகலப்பாக இருக்கின்றன. Black Forest, Blue Berry cake , Shawarma, Alfaham, Thandoori அயிட்டங்கள் விற்றுத் தீர்கின்றன.
இரண்டு நாள்களுக்கு முன்பு பேரூரிலிருந்து மதுக்கரை வரும்பொழுது கோவைப்புதூர் பைபாஸ் சந்திப்பிலிருந்து கோயம்புத்தூர் -பாலக்காடு சாலைச் சந்திப்பு வரை ஏறத்தாழ நான்கரை கிலோமீட்டர் தொலைவுக்கும் சாலையின் இருமருங்கிலும் என்னால் கிட்டத்தட்ட 35 -40 பேக்கரிகளையும் , கஃபேக்களையும் எண்ண முடிந்தது. அதாவது சராசரியாக நூறு மீட்டருக்கு ஒன்று. இவைதவிர கோவைப்புதூரின் உள்ளே இன்னமும் உண்டு.
கடைசியாக பெனாலிமிலும் , மஞ்சேஷ்வரிலும் Kunafa சாப்பிட்டதுதான் . இன்று கோவைப்புதூர்ப் பகுதியில் ட்ரை பன்ணலாமென முடிவெடுத்துச் சில eatery shop களில் கேட்டபோது இல்லையென்று சில இடங்களில் சொன்னார்கள். பெரும்பாலான இடங்களில் அந்த உன்னத உணவை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வந்து கொண்டிருந்த போது ஒரு கஃபேயில் Kunafa இருக்கா என்று கேட்டதற்கு , அந்த வெயிட்டர் , " அப்படீன்னா என்ன ?" என்று கேட்டிருந்தாலும் பரவாயில்லை, " அவன் இப்பத்தான் ரூமுக்குப் போனான் சார் !" என்றார்.
அதற்குப் பிறகு வேறெங்கும் கேட்கவில்லை. நேரே வீடு வந்து விட்டேன் .
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!