மேகமலை

 நிறைய வான்டர்லஸ்ட்டுகளின் லிஸ்டில் சமீப காலங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு பெயர் 'மேகமலை'.  தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் மேகமலை, "  இந்த முறை ஒரு சேஞ்சுக்கு மேகமலையை  ட்ரை பண்ணிப் பார்ப்போமே...!" எனச்  சுற்றுலா அன்பர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கிறது.  

மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது ....?

ஊட்டி போலப் பரபரப்பான, ஆர்ப்பாட்டமான ஒரு மலைவாழிடமோ,  கொடைக்கானல் போலக் கூட்டம் குவிந்து கிடக்கிற மலை வாழிடமோ,  ஏற்காடு போன்ற ஒரு  சிறுநகரமோ அல்ல இந்த மேகமலை .

 இன்னமும் சொல்லப்போனால் மேகமலையை ஓர் ஊர் என்று கூடச் சொல்ல முடியாது‌  அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரண்டு உணவகங்கள், ரிசார்ட்டுகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள், சில அரசு அலுவலகங்கள் , அலுவலர் குடியிருப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்ற மேகமலையின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அந்த அமைதியும் தனிமையும் கலந்த அழகும், சிலு சிலுவென்று கிளைமேட்டும்தான்.

 நாம் ஏறத் தொடங்கிய நாளில் வெயில் செம காட்டு காட்டிக் கொண்டிருந்தது.  ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வந்திருந்த நமக்கு இது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.  ஏற ஆரம்பித்ததுமே சற்றுத் தொலைவில் எல்லாம் பாறைகளும் புதர்களும் ஆக பசுமையே தென்படாமல் ஒரு ஹில் ஸ்டேஷன் ஃபீலே வரவில்லை.  தவறாக செலக்ட் செய்து விட்டோமோ என்கிற எண்ணம் வர ஆரம்பித்து விட்டிருந்தது . 

 கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்ததும் கிளைமேட் மெல்ல மாறத் தொடங்கியது .அடர்ந்த மரங்களால் ஆன வனப்பகுதி ஆரம்பமாகி இருந்தது .மலைச்சாலையின் ஒவ்வொரு வளைவுகளுக்கும் அழகாகப் பூக்களின் பெயர்களைச் சூட்டி இருந்தார்கள் நல்ல ரசமையான ஐடியா அது. 

மேகமலையில் நுழையும்போதே ஏன் மேகமலை என்று பெயர் வந்திருக்கும் எனப் புரிந்து கொள்ள முடியும்.  மேகங்கள் ஜாலியாக அங்கும் இங்கும் கவிழ்ந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருந்தன . தொடர்ந்து செல்ல முதலில் நம்மை வரவேற்பது ஹைவேவிஸ் அணை.  இங்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை . இந்தப் பகுதியைப் பச்சைக்கூமாச்சி மலை என்று சொல்கிறார்கள். இரவலங்கார்‌ அணை, மணலார் அணை,  வெண்ணியார் என அடுத்தடுத்து அணைகள் இருக்கின்றன .

மேகமலையின் ரியல் க்ளைமேட் அட்டகாசமாக ஆரம்பமாகி இருந்தது .மகாராஜா மெட்டு என்ற வியூ பாயிண்ட்டை மேகமலையின் ஹைலைட் என்று சொல்லலாம்.  மணலாறை ஒட்டியே செல்லும் பாதையில் மணலாறு  எஸ்டேட் வரை நமது வாகனத்தில் சென்று ,அங்கிருந்து மகாராஜா மெட்டு செல்ல ஜீப்புகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். ஆஃப்ரோடு என்பதால்  நமது வாகனங்கள் செல்வது மிகக் கடினமாக இருக்கும். நமது வாகனம் எஸ்யூவியாக இருந்தால் தாராளமாகச் செல்லலாம் .

மணலார் எஸ்டேட் ரோடு வரை செல்லும் பாதை அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது .ஏரி போல விரிந்து கிடக்கும் ஆறு நம் கூடவே வந்து மகாராஜா மெட்டில் கொண்டு வந்து விடுகிறது .அங்கே இருக்கும் லோக்கல் கைடு ஒருவர் நம்முடன் வருகிறார்.  ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் மலையில் ஏற வேண்டும் .தேக்கடி, சுருளி அருவி, கூடலூர் -கம்பம் சமவெளிப் பகுதி என மகாராஜாமெட்டில் இருந்து காணக் கிடைக்கும் காட்சிகள் அவ்வளவு விரைவில் நம் மெமரியில் இருந்து டெலிட் ஆகாது .

இரண்டு மணி நேரம் வரை இங்கு செலவிடலாம்.  நடந்து ஒவ்வொரு வியூவாகத் தேடித் தேடிப் பார்ப்பது வெரி இன்ட்ரஸ்டிங்.  மேலே கடைகள் எதுவும் கிடையாது. தண்ணீர், ஸ்னாக்ஸ் கையோடு கொண்டு போவது பெட்டர்.

பார்க்கப் பார்க்க வானம் இருட்டிக்கொண்டு வந்தது . தூறல் ஆரம்பிக்கும்போது கிளம்பி விட்டிருந்தோம் .பிற்பகல் 2 மணிக்கு மேல் இங்கு வர அனுமதி இல்லை என்றார்கள். ஓட்டமும் நடையுமாக ஜீப்பில் வந்து  ஏறுவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது .

 பேய்மழை புரட்டி எடுத்து விட்டது. அப்படி ஒரு மழையில் ஆஃப்ரோடு ஜீப் சஃபாரி அமைவது அபூர்வம்.

 மேகமலைப் பகுதியில் இருக்கும் இரண்டு மூன்று மெஸ் களில் மொத்தக் கூட்டமும் அடைக்கலமாகி இருந்தது.  மண் மணக்கும் டிரெடிஷனல் சமையல் .

மதிய உணவு முடித்துக் கிளம்பும்போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது .மனமும் லேசாகி இருந்தது.

மேகமலை சில குறிப்புகள்:

 தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்தும் செல்லலாம் , ஆண்டிபட்டியில் இருந்து கண்டமனூர் வழியாகவும் செல்லலாம் .

 பேருந்து வசதி உள்ளது ,ஆனாலும் நமது வாகனத்தில் செல்வதே நல்லது.

கீழேயே எரிபொருள் நிரப்பி கொள்வது நலம்.

 ரிசார்ட்டுகள் வேண்டுமெனில் முதலிலேயே புக் செய்து விட வேண்டும் .

 மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை .

கீழே இறங்கும்போதும் 5 மணிக்கு முன்பாக இறங்கி விட வேண்டும்.

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.