இளையோர் சூடா வளையோர் கொய்யார்.
ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப் பேராட்சியும், நடிப்பு அரக்கன் விக்ரமின் பேராற்றலும், மணிரத்னத்தின்என்றும் அலுக்காத திரை மொழியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொன்னியின் செல்வன் II இரவுக்காட்சிக்கு புக் செய்ய வைத்தன.
இளையோர் சூடார் பாடலைக் கேட்கும்பொழுது உடன் வந்திருந்த நண்பர், "இது திரைப்பாடல் போலத் தெரியவில்லையே....! செய்யுள் பாடத்தில் படித்தது போலத் தெரிகிறது....!" என்று டவுட் கேட்டார்.
அங்கேயே ஆற்ற ஆரம்பித்தால் அருகில் அமர்ந்திருப்போர் அடிக்க வந்து விடுவார்கள் என்பதால் முகநூலிலும் வலைப்பூவிலும் பதிவிடுகிறேன், படித்துக் கொள்ளுங்கள் பிறருக்கும் பயன்படும் என நான் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெயம் ரவி மேல் மாடத்திலிருந்து பாய்ந்து பாண்டிய ஆபத்துதவிகளைத் துரத்தத் தொடங்கி இருந்தார்.
சோழ நாட்டில் குடவாயில் என்னும் ஊரைச் சேர்ந்த கீரத்தனார் எழுதிப் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கும் ஒரே பாடல் அது .
"இளையோர் சூடார் வளையோர் கொய்யார்....!"
புதுக்கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒலியமங்கலம்தான் அன்றைய நாளில் ஒல்லையூர் என்பது அறிஞர் தெளிவு.
ஒல்லையூர் நாடு என்று என்று புகழப்பட்ட ஒல்லையூரில் வாழ்ந்த ,வீரமும் கொடையும் மிகுந்த பெருஞ்சாத்தன் என்னும் தலைவன் இறந்த பொழுது குடவாயில் கீரத்தனார் பாடிய கையறுநிலைப் பாடல் அது.
ஒல்லையூரில் பூத்திருந்த முல்லைப் பூவைப் பார்த்து, " தலைவனே இறந்து விட்டான் ....இந்த நேரம் பார்த்துப் பூத்திருக்கிறாயே உன்னை யார் பறிப்பார்கள்....யார் சூடுவார்கள் ...?" என்று என்று கேட்பது போல இந்தப் பாடல் அமைந்துள்ளது.
துயரம் வழியும் இப்பாடல் கீரத்தனாரின் புலமைக்குப் பெருஞ்சான்று.
"இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார்;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?"
பொருள்: முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!