கோவா

 கோ என்பதால் போ என்கிறாய்...

 வா என்பதால் வா என்கிறாய்....!

 கோவா, ஆனாலும் ஒரு ஸ்வீட் லொகேஷன் .

ஏப்ரல் 28 கடைசி வேலை நாளில் மாலை 6 மணிக்கெல்லாம் கிளம்புவதாகத் திட்டம்.

மங்களூருவில் உள்ள பனம்பூர்க் கடற்கரை, காசர்கோட்டின் கப்பில் கடற்கரை ,கண்ணூரின் கவ்வாயிக் காயல் படகு வீடுகள், வடகரயின் சர்காலயா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் மியூசியம், தலச்சேரிக் கோட்டை....

 மூன்று நாட்கள் பேருந்துப் பயணம் என முடிவு செய்து பாலக்காடு- மங்களூர் ஸ்விஃப்ட் சர்வீஸ் ஏசி பஸ் டிக்கெட் புக் செய்துவிட்டுக் காத்திருந்த அடுத்த நாளில் லியோராஜ் அந்த பவுன்சர் கேள்வியை வீசினார்.

 " மங்களூர் வரைக்கும் போறதுன்னு ஆயிருச்சு... அப்படியே கோவா போயிட்டா என்ன ....?" 

பட் அந்த டீலிங் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சி இருந்துச்சு .

கடைசி நேரத்தில் ட்ரெயின் டிக்கெட் கிடைக்காதே எனத் திருப்பி அவரிடமே கேட்க, " கிரான்ட் விட்டாரா இருக்க, ட்ரெயின் எதற்கு ....?" எனப் பன்ச் அடித்து மூன்று நாள் பயணத்திற்கு முடிவுரை எழுதி, ஐந்து நாள் பயணத்திற்கு அடித்தளமிட்டார்.

அடுத்த நிமிடம் பஸ் புக்கிங் கேன்சல் செய்யப்பட்டது.

 ஏற்கனவே கிராண்ட் விட்டாராவில் ஆயிரமாவது கிலோ மீட்டரை அரபிக் கடலோரம் கேரளாவில் க்ராஸ் செய்த நாம் 2000 மற்றும் 3000 கிலோமீட்டர் மார்க்குகளைக் கர்நாடகாவிலும், கோவாவிலும் க்ராஸ் செய்துவிடலாம் எனப் பயணத்திட்டம் வகுக்கப்பட்டது .

 வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் வண்டியை எடுத்த இருபதாவது நிமிடத்தில் கேரளாவில் வாளையாரில் நமது ஃபேவரைட் ஆன கிரேஸ் ஹோட்டலில் வெங்காயச் சட்னியுடன் வீட்டுத் தோசைகளை விழுங்கி விட்டு , இதோ வந்துட்டோம் என கோவாவை நோக்கிக் கையசைத்தவாறே வண்டியைக் கிளப்பும்போது கோடை மழை தலைக்கு மேலே தயாராக இருந்தது.

கோழிக்கோட்டில் இருந்து கடற்கரைச் சாலையிலேயே கோவா வரை பயணம். கண்ணூரில் அதிகாலை 4 மணிக்கு சின்னதாய் ஒரு பிரேக் . 8 மணிக்கு எல்லாம் எழுந்து குளித்து மாலையில் கோவா போய்ச் சேர்ந்தாயிற்று.

இரண்டு முழு நாள்களும், இரண்டு இரவுகளும், மூன்று மாலைப் பொழுதுகளும் நம் கையில் இருந்தன.

 சவுத் கோவாவில் போலம் பீச் சன் செட் பார்த்துவிட்டு Turquoise Blue வண்ணத்தில் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்த Palolem Beach இல் நைட் ஸ்டே. 

 அநியாயத்துக்குக் குறைந்த விலையில் ரிசார்ட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு நேர உணவை விட ஒரு நாள் தங்குவதற்கு ஆகும் ரிசார்ட் செலவு குறைவு. ரிசார்ட்டுக்கு 700 ரூபாய் கொடுத்தோம், ஆனால் ஆறே பீஸ் கொண்ட இறால் மசாலா 650 ரூபாய் .தன்னந்தனியே தோப்புகளுக்கு நடுவில் Palolem Beach சில்லென நம்முடன்‌ ஒட்டிக்கொள்கிறது.

அங்கிருந்து அரை மணி நேரத்தில் பட்டர்ஃபிளை பீச். இப்படி ஒரு பீச் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. மிக மோசமான மலைச்சாலையில் மிகக் கவனமாக கார் ஓட்ட வேண்டியிருந்தது . இரண்டு மூன்று இடங்களில் காரில் ஏதேனும் ஒரு வீல் அந்தரத்தில் தொங்கியபடியே கடக்க வேண்டியிருந்தது ‌ ஒரு வழியாக பட்டர்ஃபிளை பீச் பார்க்கிங் ஏரியா வந்து சேர்ந்தால் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றார்கள். உச்சிநேரத்துக் 

கொதிக்கின்ற வெயிலும் , சுழன்றடிக்கும் செம்மண் புழுதியும் நம்மை மிரள வைத்தன. என்ன செய்யலாம் எனக் குழம்பி நிற்கையில் ஜீப் சஃபாரி இருக்கிறது , அப் அன்ட் டவுன் 250 ரூபாய் என்று சொல்லி ரஃப் அன்ட் டஃபான ஆஃப் ரோடில் அழைத்துச் சென்று இறக்கி விட்டார்கள் . அங்கிருந்து 300 மீட்டர் மலைச்சரிவில் மரங்களூடே நடந்தால் குறுகிய மலைப்பிளவுகளுக்கு இடையே நீலப் பச்சை நிறத்தில் அரபிக் கடல் நம்மை அப்படியே அள்ளிக் கொள்கிறது .

ஜில்லென்ற நீரில் சுள்ளென்ற சூரியனின் வெம்மை தெரியவே இல்லை .களைப்பு தீரக் குளிக்க முடிவு செய்து குளித்துக் குளித்துக் களைத்துப் போய் நின்ற நம்மை 300 ரூபாய்க்குக் கடலுக்குள் படகு சவாரி கூட்டிப் போகிறார்கள் . அரை மணி நேரம் அட்டகாசமாக இருந்தது.

ஹனிமூன் பீச் என்ற இடத்தில் இறங்கினால் மீண்டும் குளிக்க விரும்புபவர் குளிக்கலாம். பட்டர்ஃபிளை பீச் மிகத் தனிமையான, வேறு எந்த வழியிலும் வர முடியாத ஒரு பீச் .அதிலிருந்தும் உள்ளே இருக்கும் ஹனிமூன் பீச் என்ற இடம் இன்னும் ப்ரைவசியாக இருந்தது. Turtle Rock, Four Fingers Rock என வினோதமான பாறைகளைக் காட்டித் திரும்பிக் கொண்டு வந்து விடுகிறார்கள் . 

மலையடிவாரங்களில்,தென்னந்தோப்புகளுக்கிடையில் மிகத் தனிமையான பீச்சுக்களைக் கொண்ட இடம் சவுத் கோவா என்றால் ஆரவாரமான கடற்கரைகளும், பளபளக்கும் பனாஜி சிட்டியும் ,கோலாகலமான நைட் லைஃபும் ,க்ரூஸ் கப்பல்களும் , கேஸினோக்களுமாக நார்த் கோவா ,சவுத் கோவாவிற்கு நேரெதிராக இருக்கிறது .

 Calngute beach ,Candolim beach ,Baga beach போன்ற இடங்கள் 24 மணி நேரமும் ஜே ஜே என மக்கள் கூட்டத்தால் திமிலாகப்படுகின்றன .

கோவாவின் ப்ரைம்‌ ஸ்பாட்டுகளான இந்த ஜாலியான பீச்சுகளுக்கு நிறைய டவுன் பஸ்கள் பனாஜியிலிருந்து வருகின்றன . ரயில், பஸ், ஃப்ளைட்டுகளில் வருபவர்கள் ஜாலியாக ஊர் சுற்ற நூற்றுக்கணக்கான யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. 

டால்பின் க்ரூஸ் , பார்ட்டி க்ரூஸ், டின்னர் க்ரூஸ், சன்செட் க்ரூஸ், ஐலன்ட் க்ரூஸ், பேக் வாட்டர் க்ரூஸ், சன் டவுன் க்ரூஸ் எனப் பலவித சொகுசுப் படகுச் சவாரி பேக்கேஜ்கள் கிடைக்கின்றன. கோவாவின் மெயின் அட்ரக்ஷன்களுள் இதுவும் ஒன்று.

 DJ, Folk dance , சைட் சீயிங் ஆகியவற்றைக் கொண்டு ஒரு மணி நேர பேக்கேஜில் இருந்து ஆரம்பிக்கும் இந்த க்ரூஸ் கப்பல்களுக்கு 400 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கூட கட்டணம் இருக்கிறது.

பெரும்பாலான க்ரூஸ் கப்பல்கள் கிடைக்கும் மான்டோவி ரிவரில் கேஸினோக்களும் உண்டு. பணத்தை ஆற்றில் எறிந்து விட்டுத்தான் படகில் ஏறுகிறோம் என்ற வகைச் சூதாட்டங்கள் விடிய விடிய உச்சகட்டப் பரபரப்பில் நடக்கின்றன.ஐலன்ட் க்ரூஸ் புக் செய்தால் SCUBA DIVING,Kayaking, Wind Surfing , Skiing , Para Sailing , Rafting என ஏகப்பட்ட வாட்டர் ஸ்போர்ட்ஸ்களை என்ஜாய் செய்யலாம் .

போர்ச்சுக்கீசியர் காலத்துக்‌ கட்டடங்கள் நிரம்பிக் கிடக்கும் பனாஜி அல்ட்ரா மாடல் சிட்டியாக இருக்கிறது . அதிலும் மர்கவாவிலிருந்து பனாஜி வரும் வழியில் உள்ள அந்த நீளமான பாலம் மிகப் பிரம்மாண்டமான எக்ஸ்பீரியன்ஸ் தருகிறது . இரண்டு முறை அதில் போய் வந்து குதூகலப்பட்டுக் கொண்டோம் . இரவு நேரங்களில் பனாஜியின் ரிச்சான கலர்ஃபுல் ரோடுகளில் ரவுண்டு அடிப்பது செம ஃபன்.

ஓல்டு கோவாவில் உள்ள 400 ஆண்டுகால பழமையான சர்ச்சுகளும் மியூசியமும் மிஸ் செய்யக்கூடாதவை .ஐரோப்பியக் கட்டடக்கலை நுணுக்கங்கள் கண்களுக்கு செம ஃபீஸ்ட்.

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர்- தேவநகரி வழி, கோழிக்கோடு- மங்களூர் வழி என இரண்டு வழிகள் கோவாவுக்கு உண்டு . இரண்டிலுமே நான் ஸ்டாப்பாகச் சென்றால் 18 மணி நேரத்தில் கோவா சென்று விடலாம். பெங்களூர் வழி நான்கு வழிச்சாலை. கோழிக்கோடு- மங்களூர் வழியில் சென்றால் மங்களூருக்குப் பிறகு நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கிறது. மங்களூர் வழியை விட நிறைய டோல் கேட்டுகளைக் கொண்ட பெங்களூர் வழி 200 கிலோமீட்டர் அதிகம் என்றாலும் பயண நேரம் இரண்டு வழிகளிலுமே ஒன்றாகத்தான் இருக்கிறது .கடலோரமாகச் செல்லும் கோழிக்கோடு- மங்களூர் வழியை நான் தேர்ந்தெடுத்திருந்தேன் .

தடுக்கி விழுந்தால் கூட ஒரு பேக்கரியில் தான் விழுவோம் எனும் அளவுக்கு பேக்கரிகள் சூழ்ந்த கோவை -திருப்பூர்ப் பகுதிகளுக்கு நேர் எதிராக கர்நாடகாவும் கோவாவும் இருந்தன.

ஒரு வாய் டீ குடிக்கலாம் என்றால் மணிக்கணக்கில் தேட வேண்டி இருக்கிறது . 

மங்களூரு - கார்வார் 4 வழிச்சாலை இரவு நேரங்களில் ஆளரவமற்றுப் பெரும்பாலும் ஓர் அமானுஷ்யத் தன்மையுடன் இருக்கிறது.

ஓல்டு கோவாவில் இருந்து வரும் வழியில் Benaulim Beach இல் Sunset with Kunafa என நான் போட்டிருந்த பிளான் நேரமின்மையால் கேன்சல் ஆகிப்போனது. நமது டேஸ்ட் buds அனைத்தும் Kuanafa Kunafa எனக் கூவத்தொடங்கியிருந்தன .இனி வாய்ப்பே இல்லை என நான் முடிவெடுத்திருந்த நிலையில் மங்களூருக்கும் காசர்கோட்டுக்கும் இடையே கர்நாடக - கேரள பார்டரில் இருக்கும் மஞ்சேஷ்வர் டவுனில் நள்ளிரவு 2 மணிக்கு Kunafa House என்ற Kunafa அவுட்லெட் ஒன்று திறந்திருந்தது.  

 ஹாட் வைப்ரேஷன் மோடுக்கு அடுத்த நொடியே மாறிவிட்டிருந்தோம் . ஆர்டர் செய்த ஐந்தாவது நிமிடம் சூடாக Cream Cheese Kunafa வை ப்ளேட்டில் வைத்து அதன் மீது Syrup ஊற்றுவதற்குள் நண்பர் கணேசன் ஒரு பெரிய பீஸை லபக்கியிருந்தார். நாங்கள் மூவரும் Kunafa வைப் பிய்க்கிற வேகத்தைப் பார்த்து Kunafa மாஸ்டர் இன்னொன்று தரட்டுமா எனக் கேட்டார் என்றால் போட்டி எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் எனப் பார்த்துக் கொள்ளுங்கள் .

வரும் வழியில் சந்திரகிரிக் கோட்டை , கப்பில் பீச் ஆகியவற்றை ஜஸ்ட் ஒரு விஸிட் அடித்து விட்டுக் கவ்வாயிக்காயல் பீச் வந்தடைந்தோம் . அதனைப் போலொரு தனிமையான, அவ்வளவு நீளமான, ஆழ்ந்த அமைதியான, பேரழகு வாய்ந்த இளஞ்சாம்பல் வண்ணம் கலந்த கருநீலக் கடற்கரையை நான் பார்த்ததில்லை.

குமரகம் போன்ற பேக்வாட்டர் ஹவுஸ்போட்டுகளைக் கொண்ட வலியப்பரம்பயில் இருந்து ஹவுஸ் போட்டில் வந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு மனிதத் தலைகூடத் தென்படாத கவ்வாயிக் காயல் கடற்கரையில் இறங்கி யாரும் இல்லாத் தனிமையில் கடற்கரையில் இருக்கும் சிறு குடில் ஒன்றில் பரிமாறப்படும் அக்மார்க் கேரளக் கடலுணவுச் சமையலை ஒருமுறை ருசித்துப் பார்த்தோமானால்,

நமக்குள் நாம் தொலைந்தும் போவோம்....

நம்மை நாமே கண்டும் கொள்வோம்...!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?