உரும்பிக்கர நாங்க நினைச்சதை விடவும் ரொம்பவே அட்டகாசமான ஸ்பாட்.....

 3500 அடி உயரத்தில் மொத்த அழகையும் ஊற்றிப் பொழிந்து கொண்டிருக்கும் உரும்பிக்கரப் பயணம் திரும்பி வந்த பிறகும் ஒரு கனவு போலவே இருக்கிறது .

 மயக்கும் எழிலும், பிரமிக்க வைக்கும் பேரழகும், மலைக்க வைக்கும் வனப்புமாகத்தான் உரும்பிக்கர எங்களை வரவேற்றது . ரெகுலர் டூரிசத்தின் எந்த வரையறைக்குள்ளும் வராத உரும்பிக்கரயின் மலைமுகடுகளில் அப்படி என்ன மாயமந்திரம் இருக்கிறது எனத் தெரியவில்லை... மொத்த மனதையும் கட்டிப்போட்டு விடுகிறது.

 கோவையிலிருந்து ஆறு மணி நேரத்தில் அடைந்து விடக்கூடிய இடம் ஏந்தயார். இதுதான் உரும்பிக்கரயின் ஸ்டார்ட்டிங் பாயின்ட். பாலக்காடு, திருச்சூர், அங்கமாலி, மூவாற்றுப்புழ ,தொடுபுழ ஈரோட்டுப்பேட்ட என ஓர் அழகான சாலைப் பயணத்தின் முடிவில் ஏந்தயாரை அடையலாம் . ஏந்தயார் ஈரோட்டுப்பேட்டயில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது என்றாலும் அவ்வளவு எளிதில் அங்கு சென்று விட முடியாது . மலைத்தொடர்களின் வழியாக ஏந்தையாருக்கு மூன்று ரூட்டுகள் இருக்கின்றன. Google மேப்பும் அவற்றைக் காட்டும் ;அங்குள்ள மக்களும் அதே ரூட்டுகளைக் காட்டுகிறார்கள்; நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகைகளும் கைகாட்டிகளும் அப்படியே காட்டுகின்றன. ஆனால் ஐந்து ஆறு கிலோ மீட்டருக்குப் பிறகு இந்த வழித்தடங்கள் அத்தனையும் வாகனங்கள் செல்லக்கூடியவையாக இல்லாமலிருந்தன . அண்மையில் பெய்திருந்த பெருமழை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருப்பது கண்கூடாகத் தெரிந்தது. ஏந்தையாரிலிருந்து உரும்பிக்கர செல்வதற்கு ஒரு ஜீப்பை முதல் நாளே புக் செய்து வைத்திருந்தோம். அந்த டிரைவர் ஈராட்டுப்பேட்ட வந்ததும் போன் செய்யச் சொல்லி இருந்தார்.

   ஈராட்டுப்பேட்ட வரை நமக்கு ரூட் அத்துபடி என்பதால் சட சடவென ஒரே மூச்சில் வந்து சேர்ந்து விட்டோம். அவருக்கு ஃபோன் செய்யும் முன்பே ஏந்தையார் 15 கிலோமீட்டர் என்றொரு போர்டைப் பார்த்து விட்டதால் நமக்கு அப்பொழுது விஷயம் தெரியாமல் அதிலேயே ஜிவ்வென்று பறந்தோம். சற்றுத் தொலைவிலேயே பாதை முடிந்து பாறைகள் பல்லிளிக்கத் தொடங்கின . பெரிய ஃபோர்வீல் டிரைவ் எஸ்யூவிகள், டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் வேண்டுமானால் செல்லலாம். திரும்பி வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து, கூகுள் மேப் பார்த்துக் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அதற்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தோம். ஜீப் டிரைவர் மனோஜ் செல்போனிலேயே வழி சொல்ல அங்கு உள்ள ஆட்டோ டிரைவர்கள், மக்களிடம் ஃபோனைக் கொடுத்துப் பேச வைத்து அவர்களும் கைடு செய்ய, அவ்வப்போது சிக்னலும் கட்டாகி விட , செங்குத்தாகக் கீழே இறங்கும் மலைப்பாதையில் சட் சட்டென அடுத்தடுத்துத் திரும்பும் U வடிவ வளைவுகளில் சில இடங்களில் ஓட்டும் பொழுது எனக்கு லேசாக வியர்த்தது உண்மை.

   அங்கிருந்த மக்களிடமே செல்போனை வாங்கி மனோஜ்க்கு டயல் பண்ணிப் பேசி ஒரு வழியாகிவிட்டோம். எனது மொத்த அனுபவத்திலும் இஃதொரு ஆகப்பெரும் சவாலாக இருந்தது. இறுதியில் பூஞ்சார் சாலையைப் பிடித்து இளங்காடு எனும் இடத்தில் ஏந்தையார் மெயின் ரோட்டைப் பிடித்தோம். சற்றுச் சுற்றிச் செல்வதாக இருந்தாலும் ஈரோட்டுப்பேட்டயில் இருந்து காஞ்ஞிரப்பள்ளி, முண்டக்காயம் வழியே ஏந்தையார் செல்வதுதான் பாதுகாப்பான வழி. கிட்டத்தட்டப் 10 பேரிடம் வழி விசாரித்து இருப்போம் . பெண்கள் உட்பட அனைவருமே மிகப் பொறுமையாக மிகுந்த அக்கறையுடன் வழிகாட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. 

 இரண்டு நாட்கள் இருந்து பார்க்க வேண்டிய இடம் உரும்பிக்கர. ஏந்தையாரில் நமது வாகனத்தை பார்க் செய்துவிட்டு அங்கிருந்து ஃபோர்வீல் டிரைவ் ஜீப்பில் செல்ல வேண்டும். நமக்காக ஜீப்புடன் காத்துக் கொண்டிருந்த டிரைவர் மனோஜ் மிகுந்த ஆர்வத்துடன் நம்மை வரவேற்று முதலில் லஞ்ச் சாப்பிட வைத்தார் . பிறகு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஸ்நாக்ஸ் கடையில் நிறுத்திக் குடிநீர், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அடுத்த 7 - 8 மணி நேரம் வெளியுலகத் தொடர்பே இருக்காது, செல்போன்களும் ரீச் ஆகாது என்பதைக் கூறினார் . அருவியில் குளிக்க விரும்பினால் துண்டு, ஷார்ட்ஸ் போன்றவற்றை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.  

 ஜீப்பில் தாவி ஏறிக் கொண்டோம். அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல ஃபீல் ஆனது உண்மை. ஜீப் சடாரென மெயின் ரோட்டிலிருந்து திரும்பியது. பக்கவாட்டில் 

கோட்டயம் மாவட்டத்தையும், இடுக்கி மாவட்டத்தையும் பிரிக்கும் மணிமலயாறு உற்சாகமாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்து இடுக்கி மாவட்டத்துக்குள் நுழைந்து ஜீப் கொஞ்சம் கொஞ்சமாக மேலேற ஆரம்பித்தது. தார்ச்சாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மண்சாலையாகிப் பிறகு கரடு முரடான சாலையாகி மலை மீது ஏற ஆரம்பித்து. வளைந்து வளைந்து சட்டென்று ஓரிடத்தில் பெரிய பெரிய கற்கள் கொட்டிக் கிடக்கும் கற்சாலையாக மாறியது . ஒரு மணி நேரம் பயணித்ததில் வெளியலகத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டிருப்பது புரிந்தது.

 சுற்றிலும் காட்சி தருகின்ற மலைத்தொடர்கள் அழகை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அடுத்த ஒன்றரை மணி நேரம் கற்கள் குவிந்திருந்த சாலையில் ஆங்காங்கே எல்லோரும் இறங்கி கற்களை அகற்றிப் பாதையை சரி செய்த பிறகு தொடர்ந்து பயணிக்கும் வகையில் சாலை இருந்தது‌ மிகச்சிறந்த டிரைவர் மனோஜ்....... அந்தச் சாலையில் ஜீப்பை ஓட்டுவதற்குத் தனி திறன் வேண்டும். அவர் வெகு லாவகமாக ஜீப்பைக் கையாண்டு கொண்டிருந்தார்.  

 இரண்டு பைக்குகளில் காசர்கோட்டிலிருந்து வந்திருந்த இளைஞர்கள் டாப் வியூ பாயிண்ட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அங்கு கண்ட கற்பாறைகளுக்கு இடையே பைக் ஓட்டுவதற்கு அசாத்தியத் துணிச்சலும் திறமையும் வேண்டும். அதுவும் 2 மணி 2:30 மணி நேரம் ஓட்டியாக வேண்டும். அவர்கள் அப்படியொரு எக்ஸைட்மென்ட்டில் இருந்தார்கள்.

குளிர் கூடிக்கொண்டே வந்தது. பனிப்புகை சூழத் தொடங்கியிருந்தது. மலைப்பாதை நீண்டு கொண்டே சென்றது. ஜீப் சளைக்காமல் மேலே ஏறிக் கொண்டிருந்தது. இறுதியில் அந்த அற்புதமான கணமும் வந்தது.

உரும்பிக்கர டாப் வியூ பாயிண்ட்டில் நாங்கள் இறங்கியபோது வேறொரு உலகத்தில் வந்து இறங்கியது போல இருந்தது . இத்தனை தொலைவு பயணத்தை இவ்வளவு ரிஸ்க் எடுத்துக் காடும் மலையும் கரடு முரடான சாலைகளையும் கடந்து வந்தது அத்தனையும் வொர்த் என நாம் நிற்கும் இடம் உரத்துக் கூறியது.

 " இதிலேயே திருப்தி ஆயிடாதீங்க.... இன்னும் இருக்கு ....!" என மனோஜ் மலை முகட்டை நோக்கி ஏற ஆரம்பித்தார். ஒரு மிகப்பெரிய பாறை மேல் நின்று கொண்டு எங்களை ஒவ்வொருவராக மேலே கைப்பிடித்துத் தூக்கி விட்டார். முதலில் ஒருவர் ஏறியதும், அவருடைய சப்போர்ட்டும் சேர்ந்து கிடைக்க ஒருவர் பாறையை பிடித்துக் கொள்ள, கைகளைக் கோத்து ஒவ்வொருவராக ஏறிப் பார்க்கும்போது இந்த உரும்பிக்கர எத்தனை ஆச்சரியங்களைத் தான் வைத்திருக்கிறது என மெய்ம்மறந்து எவ்வளவு நேரம் அங்கு நின்று கொண்டிருந்தோம் எனத் தெரியவில்லை.

 அந்த முகட்டிலிருந்து கீழே இறங்கும் போது மனோஜ் தனது தோளில் சுமந்து எங்களைக் கீழே பாதுகாப்பாக இறக்கி விட்டதை மறக்கவே முடியாது. அடுத்த மலை உச்சிக்குச் செல்ல இருந்த பாதையின் குறுக்கே ஓடும் ஆற்றின் பாலம் உடைந்து விட்டிருந்ததால் நடந்தே ஆற்றைக் கடந்து மலையுச்சியை அடைந்தோம் . அதற்குள் நான்கடி தொலைவில் இருப்பவர் கூடத் தெரியாத அளவு பனி சூழ்ந்து கொண்டு விட்டது. மலை உச்சியில் தட்டையாக இருந்த பெரிய பரப்பில் சாவகாசமாக அமர்ந்து கொண்டோம். பனியுடன் காலமும் இங்கு உறைந்து விட்டது போலத் தோன்றியது. யாரும் ஒரு சொல்லும் நீண்ட நேரம் பேசிக்கொள்ளவில்லை. ஆழ்ந்த தியான நிலையில் அந்த மாய உலகில் இருந்து விடுபட்டுக் கிளம்பத் தொடங்கினோம்.

  வழியில் முதலில் பாப்பானி என்ற அருவியைக் கண்டு ஆனந்தித்தோம். அதற்கடுத்து வடக்கேமலை என்ற மாபெரும் அருவியின் முன் ஜீப்பை நிறுத்தினார். கழுத்து வலிக்க, அண்ணாந்து நிமிர்ந்து பார்க்க வேண்டிய உயரத்திலிருந்து பெரும் முழக்கத்துடன் அருவி கொட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகள் கூடக் குளித்து மகிழ்வதற்கு ஏதுவான பாதுகாப்பான இடம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. ஆசை தீரக் குளித்துத் தீர்க்கலாம் . அப்படி ஒரு அழகுமிகு அருவியது .

  அடுத்ததாகப் 15 நிமிடத்தில் வெம்ப்ளி அருவிக்கு எங்களை அழைத்துப் போனார். அடங்காத ஆர்ப்பரிப்புடன் கொட்டிக் கொண்டிருந்தது வெம்ப்ளி அருவி. அருவியில் இருந்து பாயும் நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாதியில் இடிந்து தொங்கிக் கொண்டிருந்தது குறுகிய நடைபாலம் ஒன்று. இரண்டடி அகலத்தில் ஆக்ரோஷமான நீரோட்டத்தின் மேல் நடக்கையில் அட்ரினலின் ஓவர்டைம் வொர்க் செய்தது .

அருவியை நோக்கிப் பாறைகள் அடர்ந்த மரங்கள் ஊடாக நடந்து செல்வது அலாதியான அனுபவம். அருவியை நெருங்க நெருங்கச் சில்லென்று தெறிக்கும் சாரல் சுகமாக இருந்தது. ஆளரவம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் முரட்டுத்தனமான அருவியில் முரட்டுத்தனமான குளியல். இப்பொழுது நினைத்தாலும் சற்று திகிலாகத்தான். இருக்கிறது.

அடுத்து வெள்ளைப்பாற என்று ஒரு அறிவிக்கு அழைத்துச் சென்றார் மனோஜ். இது அடுத்த லெவலில் இருந்தது. ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மிரட்டும் முரட்டுத்தனத்துடனேயே இருக்கின்றன . திகட்டத் திகட்ட பிரும்மாண்டமான அருவிகளைப் பார்த்துவிட்டு மணிமலயாற்றின் கரையைப் பிடித்து சடசடவெனக் கொட்டும் மழையில் திரும்பி ஏந்தயார் வந்து சேர்ந்தோம். 

 முற்றிலும் வேறான அனுபவமாக இருந்தது உரும்பிக்கரப் பயணம். திரும்பி வரும்போது எந்த ரிஸ்க்கும் வேண்டாம் என முண்டக்காயம், காஞ்ஞிரப்பள்ளி ஈராட்டுப்பேட்ட என மெயின் ரோட்டைத் தேர்ந்தெடுத்துக் கோவை வந்து சேர்ந்தோம். வீடுவரும் வரையில் கூடவே எங்களுடன் வந்து கொண்டிருந்த மழை இன்னமும் எங்கள் மனதுக்குள் பெய்து கொண்டுதான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?