அஞ்சே ரூபால பாங்காக்

 'அஞ்சே ரூபா' என வட்டமாக எழுத்தால் விலை குறிப்பிட்டு விகடன் குழுமத்திலிருந்து ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து கொண்டிருந்த வார இதழ் 'டைம்பாஸ்....'

நக்கலும் நையாண்டியும், கிண்டலும் கேலியும், ஜோக்குகளும் காமெடியுமாக முழுவதும் நகைச்சுவைக்கான வார இதழான டைம் பாஸ் செம ஜாலியாக இருக்கும்.

  அதில் பாங்காக் ட்ரிப்பிற்கான போட்டி ஒன்றை அறிவித்தார்கள்.  உங்கள் வாழ்வில் நடந்த செல்போன் தொடர்பான நகைச்சுவைச் சம்பவம் ஒன்றைச் சிறு காமெடியாக எழுதி அனுப்புங்கள்... சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் நகைச்சுவைக்குத்  தாய்லாந்துப் பயணம் பரிசு என அறிவித்திருந்தார்கள். நான் எழுதி அனுப்பிய நகைச்சுவைத் துணுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டதாக அடுத்த வாரமே அலைபேசியில் அழைத்தார்கள். பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்றேன். பத்து நாள்களுக்குள் எடுக்க முடியுமா என்றார்கள். வாய்ப்பே இல்லை என்றேன்.  சாரி சொல்லிவிட்டு அடுத்த இடம் பெற்றவரைத் தாய்லாந்து அழைத்துச் சென்றார்கள் .  அழகிய ரிஸ்ட்வாட்ச் ஒன்றை ஆறுதல் பரிசாக எனக்கு அன்பளித்தார்கள்.  விகடன் ஆல்வேஸ் கிரேட்...... நான் எழுதிய செல்போன் சம்பவத்தைக் கீழே பகிர்கிறேன். 

நம்ம நண்பர் கொஞ்சம் அப்படி இப்டிப் பார்ட்டி....! கன்னா பின்னான்னு கமிட்மென்ட் குடுத்துட்டுக் கடைசில கண்டபடி முழிப்பாரு.... ஒரு நாள் இப்படித்தான் ஏதோ ஒரு பஞ்சாயத்துக்கு வாலன்டியரா இவரு போயி பிரச்சனைய நான் பேசி முடிக்கறேன் பேர்வழினு ஒரு குரூப் கிட்ட பீலாவுட்டு ரெண்டு மூணு நாளு ஆப்போசிட் பார்ட்டிகிட்டப் பேசிக்கிட்டு இருக்கறா மாதிரி பில்டப் குடுத்துட்டே இருந்தாரு, ஆனாலும் பிரச்சனை முடிஞ்ச பாடில்லை. திடீர்னு மூணாவது நாளு நைட்டு அவங்க வீட்டுக்கே வந்துட்டாங்க. இப்பவே நீங்க ஃபோன்ல பேசுங்கனு அடம் பிடிக்கவும் இவரும் வேற வழியில்லாம அந்த எதிர் குரூப்புல ஒருத்தருக்கு ஃபோனப் போட்டாரு " நீங்கள் டயல் செய்த எண் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது " என்று கம்பூட்டர் வாய்ஸ் கதறுவது சுற்றியுள்ள எங்கள் எல்லோரது காதுகளிலும் தேனாகப் பாய்வது கூடத் தெரியாமல் சைலன்ட் மோடில் இருக்கிற செல்லைக் காதுல வச்சிக்கிட்டு முழுசாப் பதினஞ்சு நிமிஷம் ' பஞ்சாயத்துப்  பேசினாரு. வந்திருந்த யாருக்கும் மூஞ்சில ஈயாடல....!

அவரோட மனைவி கைகளாலும், கண்களாலும் சமிக்ஞை கொடுத்தும், " என்னாங்க ஒரு நிமிஷம் ...." எனக் கூப்பிட்டுப் பார்த்தும் அசராமல் பேசி முடித்துவிட்டு,   "முக்கியமான விஷயம் பேசும் போது இடையில என்னாடி டிஸ்டர்ப் பண்ற ....!" என அவர் போட்ட அதட்டல்தான் இதுல உச்சக்கட்டக் காமெடி !!!


Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?