தோனி அருவியும் கவத்தீவுகளும்- அழகும் அமைதியும் தழுவுமிடங்கள்


கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே Chill,cool ,Free flowing type தான் தோனி அருவியும். 

பாலக்காட்டு மலைகளுக்கு இடையில், அவ்வளவு எளிதில் யாரும் சென்று பார்த்துவிட முடியாத ஓர் உள்ளடங்கிய பகுதியில் ஒய்யாரமாக ஒளிந்து கொண்டிருக்கிறது இந்தத் தோனி அருவி. உயிரினங்களில் மனித நடமாட்டம் மிகக் குறைவாகவும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள தோனி அருவி த்ரில் விரும்பிகளுக்கும் இயற்கைப் பிரியர்களின் அடங்காத ஆர்வத்திற்கும் தீனி போடக்கூடிய அற்புதமான ஸ்பாட். நிறையக் கட்டுப்பாடுகளுடன் தான் தோனி அருவிக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள்.

 காலை 10 மணிக்கு ஒரு பேட்ச், நண்பகல் ஒரு மணிக்கு ஒரு பேட்ச் என இரண்டு அனுமதிகள் தான் .
 நாங்கள் தேர்வு செய்தது காலை நேரத்தை.
  அதற்கு முன்பாக மலம்புழப் பகுதியில் உள்ள கவத் தீவுகளைக் காலை 7 மணிக்கெல்லாம் பார்த்து விடுவது என வாளையாரில்  ஆளுக்கு ஒரு ப்ளாக் டீயை   மட்டும் உறிஞ்சிவிட்டு நான்கு பேராகக் கவத்தீவுகளை அடைந்துவிட்டோம்.
   மிகப் பெரிய நீர்ப்பரப்பு விரிந்து கிடக்கும் மலையின் பின்பகுதியில் மலைத்தொடரை ஒட்டிச் செல்லும் பாதையிலிருந்து சற்று உள்ளடங்கி நீர்ப்பரப்பின் நடுவில் திட்டுகளாகக் கிடக்கிறது தீவு.

காலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டமே இல்லாமல் ஆழ்ந்த அமைதியுடன்  அப்பகுதி கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அவ்வப்பொழுது  தூறல் போட்டுக் கொண்டிருந்த காலநிலை அங்கிருந்து எங்களை நகர விடவே இல்லை.
 தனித் தீவு என்று சொல்ல முடியாமல் நான்கு புறமும் நீர் சூழாத ஒரு குட்டி நிலப்பரப்பு தான் என்றாலும் அழகும் அமைதியும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் இடம் அது.
கோவை -கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சிக்கோட்டில் வலப்புறம் திரும்பி மலம்புழ  செல்லும் பாதையில் அணைக்குச்  சற்று முன்பாக வலப்புறம் திரும்பி அடர்ந்த காடுகளூடே சென்றால் மலைத்தொடரின் மறுபக்கத்தில்  கவ என்று அழைக்கப்படும் இந்த திட்டுக் கூட்டத்தைப் பார்க்கலாம் .வார இறுதி நாட்களில் ,அதுவும் மாலைப் பொழுதுகளில் ஜேஜே என மக்கள் கூட்டம் அடர்ந்து கிடக்கும் பகுதி இது.


10 மணிக்குள் தோனி அருவியின் டிக்கெட் கவுண்டரை அடைந்து விடவேண்டும், தாமதித்தால் அனுமதிக்கமாட்டார்கள், எங்களுக்கு முன் கூட்டம் நிறைய இருந்தால் எங்களை பிற்பகல் பேட்சில்தான் அனுப்புவார்கள் என்ற பதற்றத்தில் அடித்துப் பிடித்துக் கிளம்பினோம் . 

சரியாகப் பத்து மணிக்கு எங்கள் வாகனம் உள்ளே நுழைந்தது .
பார்க்கிங் ஏரியாவைக் கைகாட்டி நிறுத்தச் சொன்னார்கள்.வேறு எதுவுமில்லை எங்கள் வாகனம் தான் ஃபர்ஸ்ட்... எங்களுடைய எல்லார் முகங்களிலும் வெற்றிப் புன்னகை....! அப்புறம்தான் தெரிந்தது நாங்கள் மட்டும் தான் அன்றைய பார்வையாளர்கள் என்பது....!

உள்ளே நுழைந்ததுமே  பார்க் செய்வதற்கு முன்பாகக் காரைவிட்டு இறங்கிக் கியூவில் முந்திக்கொள்ள வேண்டும் என வேகமாக டிக்கெட் கவுண்டருக்கு போயிருந்த கணேசன் அவர்கள் ஆயிரம் பேய்கள் அறைந்தது  போன்ற முகபாவத்துடன் எங்களிடம் வந்தார் .
'என்ன ஆச்சு...?" என்றேன்.
" நீயே போய்க் கேளு.....! என்றார்.

 டிக்கெட் கவுண்டரை அடைந்தேன். அவரிடம் வெடித்த அதே குண்டுகளை ஒவ்வொன்றாக என்னிடமும் வெடித்தனர்.
 
   "கடை எதுவும் உள்ளே கிடையாது... தண்ணீர் கிடைக்காது... செல்போன் ரீச் ஆகாது ....நடந்து போய் வர நாலைந்து  மணி நேரம் ஆகும் ...கைடு வருவார்.... விலங்குகளும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்....." என்று கூறிப் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த படிவங்களில் எல்லாரையும் கையெழுத்துப் போடச் சொன்னார் .
 ' எதற்கு..?' எனக் கேட்டதும் 
 "எந்த க்யாரண்டியும் கொடுக்க முடியாது…...  எங்களுடைய சேஃப்டிக்காகக் கையெழுத்து வாங்குகிறோம்..." என்று கூறிய அலுவலர்  வெளிறிப்போயிருந்த எங்கள் முகங்களை பார்த்துவிட்டு உற்சாகப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு "டோன்ட் ஒர்ரி......!இதுவரைக்கும்  புலியோ யானையோ அடிச்சு ஒருத்தருக்குக் கூட உயிர் போனதில்ல ....ஜஸ்ட் பார் ஃபார்மாலிட்டீஸ்..!" என்று சொல்லி இருக்கிற பீஸையும் பிடுங்கி வெளியே எறிந்தார். 
 "அட்டகாசமான டேஸ்ட்.....!" என்று கூறியபடி காலைச் சிற்றுண்டியை ரவுண்டு கட்டி அடித்திருந்த வேல்முருகன் அண்ணன் "சாப்பிட்டது ஏதோ பண்ணுது ....வயிறு கடாமுடான்னு இருக்கு.... நான் இங்கேயே வெயிட் பண்றேன்..... நீங்க வேணாப் போயிட்டு வாங்களேன்....!" என்றார் பெருந்தன்மையாக .
 
மீண்டும் ஒரு முறை வெளியே வந்து அருவிக்குச் செல்லும் பாதையைப் பார்த்தேன். எனக்கு உண்மையிலேயே கடமுடா என்ற சத்தம் வயிற்றுக்குள் கேட்க ஆரம்பித்துவிட்டது. 
நண்பர் கணேசன் அவர்களுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. "ஆமாமா..... டிக்கெட் வாங்கிட்டு இருக்கிறோம்....!" என்று பதில் கூறிக் கொண்டிருந்தார். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. 

என்ன செய்யலாம் என நால்வரும் கூடிக் கலந்து ஆலோசித்து ஆனது ஆகட்டும் எனக் கையெழுத்துப் போட முடிவெடுத்தோம்.  இத்தனை நாட்களாக சிக்கன் பிரியாணி, மீன் வறுவல், நூலப்பம் என்று உணவகங்களில் எழுதப்பட்டிருப்பதை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்த எங்களுக்கு அந்தப் படிவங்களில் பக்கம் பக்கமாக ஜாங்கிரி சுற்றிக்கொண்டிருந்த எழுத்துக்களை கூட்டிப்படித்தால் இரண்டு நாட்கள் ஆகிவிடும் என்பதால் கடவுளை வேண்டிக்கொண்டு கையெழுத்திட்டு விட்டுக் காத்திருந்த கைடுடன் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.
 ஆளுக்கொரு குடிநீர் பாட்டில், சில தாகம் தீர்க்கும் பழங்கள், சில சாக்லெட்டுகள் ,குடை .....அவ்வளவுதான் .
 கைடாக வந்தவர் காற்றிலேயே கால்பதித்து நடக்கிறாரோ எனும் அளவு அதி வேகமாக முன்னால் போய்க் கொண்டிருந்தார் .
 சிறிது தூரத்தில் அச்சம் விலகி த்ரில் கூடிக்கொண்டது... அழகான ஆபத்துதான் ....ஆனால் நாங்கள் அழகை மட்டும் அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம் .
 எதுவுமே பேசாமல் சென்று கொண்டிருந்த கைடு அவ்வப்பொழுது நின்று திரும்பிப் பார்த்து, "இங்குதான் புலி வந்திருந்தது.... இந்த வளைவில்தான் யானையைப் பார்த்தேன் ....இங்குதான் மலைப்பாம்பு வரும் ....."என்று கூறிக்கொண்டிருந்தார். அந்த மனிதர் கொஞ்சம் நேரம் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.
 
  முதல் ஒரு மணி நேரம் நடக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது .நண்பர் சதாசிவம் அவர்கள் கைடை விட வேகமாக இருந்தார். கிடுகிடுவென அவர் ஏறிச்சென்ற வேகம் அசர வைத்தது.
  
   தோணி அருவி இருக்கும் இடம் ஒரு டெட் என்ட். அதற்கு அப்பால் மனிதர்கள் எவ்விதத்திலும் செல்ல முடியாது. மிக உயர்ந்த மலைகளும் காடுகளும் தான் அடுத்து உள்ளன. செட்டில்மென்ட் பகுதி ,பழங்குடியினர் குடியிருப்புகள், வனத்துறை அலுவலகம், செக்போஸ்ட், ரிசார்ட்டுகள், கடைகள் என எதுவுமே இல்லாத மனித நடமாட்டம் கொஞ்சம் கூட இல்லாத பகுதிக்குள் நடந்து கொண்டிருந்தோம்.
    ஒரு வழியாக இரண்டு மணி நேரத்தில் அருவியை அடைந்தோம். மலைப்பகுதியிலிருந்து ஓடிவரும் பல நதிகளும் ஓடைகளும் ஆங்காங்கே இணைந்து தோனி அருவியாகப் பேரிரைச்சலுடன் கொட்டிக்கொண்டிருந்தது.
     குளிக்க வாய்ப்பில்லாத அருவி அது. நீளமாக ஓடி எங்கள் கால்களைத் தாண்டி மீண்டும் ஓரிடத்தில் கொட்டுவதையும் பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தோம் .நான்கு மணி நேர நடையும் எடுத்த ரிஸ்க்கும் வொர்த் எனப் புரிந்தது.
     சிலபல செல்ஃபிகளுடன்  கிளம்பத் தயாரானோம் .
     நாங்கள் கிளம்பியது முதல் எங்களுடன் ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் இருக்கும் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அல்லது கைடு யாராவதுடைய வளர்ப்பு நாயாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மிக அற்புதமாக எங்களை அந்த நாய்தான் வழிநடத்தியது. 5 வருடம் நாம் அதை வளர்த்து இருந்தாலோ அல்லது ஐந்து வருடம் பயிற்சி அளிக்கப்பட்ட நாயாக இருந்தாலோ அது எப்படி நடந்து கொள்ளுமோ அது போல இ மிக ஆச்சரியமாக இருந்தது அதனுடைய ஒவ்வொரு அசைவும் .

சட்டென அந்த நாய் அங்குமிங்கும் ரெஸ்ட்லெஸ்ஸாக ஓடி  எச்சரிக்கைக் குரலில் குரைக்க ஆரம்பித்தது.பார்த்தால் நான் அமர்ந்திருந்த பாறையின் அடியில் இருந்து கிட்டத்தட்ட 8 அடி நீளப் பாம்பு ஒன்று உலக்கைப் பருமனில் கடந்து சென்றது .விலங்குகளின் பேட்டையில் நாம்தான் அத்துமீறி வந்திருக்கிறோம். எனவே அதைப் பார்த்து முறைப்பது, அஞ்சுவது போன்றவை பொருள் அற்ற செயல் என வந்த வழியே திரும்பத் தொடங்கினோம். இம்முறை பாதைகளின் குறுக்காய்ப் பாறைகளின் மீது கால் பதித்து நடந்து தொலைவைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டோம். யானைகளுக்குப் பயிற்சி அளிக்கத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
 டிக்கெட் கவுண்டருக்கு சற்று முன்பாக மிகப்பெரிய தூண்களில் கட்டப்பட்டிருந்த யானைகள் சுவாரசியமாக லன்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன .
 பக்கத்தில் செல்ல அனுமதியில்லை. அவ்வப்பொழுது தின்ற ஸ்டார் பழங்கள் தாகத்தைத் தணித்ததோடு மட்டுமல்லாமல் நடப்பதற்கு ஏதுவாக எளிமையாகவும் இருந்தன. முக்கால் தொலைவு திரும்பி வருகையில் எதிரே நண்பகல் பேட்ச் வந்து கொண்டிருந்தது.அந்தக் குழு பத்து இருபது ஆண்களும் பெண்களுமாகக் கலகலவென இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் என அவர்கள் எங்களைப் பார்த்து கேட்டனர். எங்கள் பொருள் பொதிந்த புன்னகையை புரிந்து கொண்டு உற்சாகமாகக் கையசைத்துச் சென்றனர்.
 
 பார்க்கிங்கில் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு மலம்புழ அணையை நோக்கிக் கிளம்பினோம். காலையில் மழம்புழ ஏரியின் தென் மற்றும் கிழக்குப் பகுதிகளை ஒட்டி ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தொலைவு ஓர் அரைவட்டம் அடித்து இருந்தோம். மாலையில் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியை ஓர் அரைவட்டம் அடிக்கப் புறப்பட்டுப் போகையில் எதிர்ப்பட்ட ராக் கார்டன் உள்ளே புகுந்து வெளியே வந்தோம்.
 
 கற்கள் ,உடைந்த ஓடுகள்,பீங்கான் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட குகை போன்ற அமைப்பு .உள்ளே புகுந்து மறுபக்கம் வெளிவர அரை மணி நேரம் ஆகும். போட்டோ பிரியர்களுக்கும்,குழந்தைகளுக்கும் பொருத்தமான இடம்.

ஏரியின் கரை யோரம் கிட்டத்தட்ட 7 கிலோமீட்டர் டிரைவ் செய்யலாம். சாலையின் இடதுபுறம் காடுகள் அடர்ந்து ஓங்கி உயர்ந்த மலைத்தொடரும் மறுபுறம் சாலையின் விளிம்பைத் தொட்டபடி நீர்நிறைந்த, பரந்து விரிந்த ஏரியின் மறு கரையில்  நீண்ட மலைத்தொடர்களுமாகக் கிட்டத்தட்ட ஓர் ஓவியம் போலத் தெரியும் காட்சி கண்களை விட்டு அவ்வளவு விரைவில் அகலாது. இடை இடை யே  சின்னச் சின்ன ஸ்நாக்ஸ் பாயின்ட்களும், கடைகளும் ரெஃப்ரெஷ்  செய்து கொள்ள வசதியாக இருக்க,ஃபோட்டோ எடுக்க வருபவர்களின் ஃபேவரைட் ப்ளேஸ் இந்தப் பாதை .

மலம்புழா கார்டன் வருபவர்களில் பெரும்பாலானோர்க்கு இப்பாதை தெரிய வாய்ப்பில்லை. கார்டன், மற்றும் கார்டனைச் சுற்றிலுமே ஒரு முழு நாளையும் செலவிட முடியும்,  என்பதால் இந்தப் பகுதிக்கு வருவதற்குப் பெரும்பாலும் நேரமும் இருக்காது. இருள் கவியத் தொடங்கும் போது ஏரிப்பரப்பின் அலைகள்  கண்களுக்கும், காதுகளுக்கும் பெரிய ஃபீஸ்ட்டாக  இருக்கும் .

காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை ஒரு முழுப்பகலையும் இனிமையான நினைவுகளாக கன்வெர்ட் செய்து கொண்டு இரவு 9 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விட்டோம் .

 காலமும் இடமும் கண்முன்னே கட்டற்ற பெருவெளியாய்க் கிடக்கிறது.... காலடியில் கிடக்கும் பாதை முடிவில்லாமல் நீள்கிறது .....

தொடங்கும் இடமும் முடியும் இடமும் தெரியாத  மனித வாழ்வினைப் பார்த்துக் காலமும் இடமும் கண்ணடிக்கும்போது நாமும் பதிலுக்குப் புன்னகைத்து வைப்போம்.....!

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி