முன்னாள் தலைவர்- முந்நாள் தலைவர் ... எது சரி....?
அடிக்கடி வரும் குழப்பங்களுள் இதுவும் ஒன்று. இரண்டில் எது சரி என்றால் இரண்டுமே சரிதான்....! பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து.....!
முந்நாள் - மூன்று நாள்
முன்னாள்- முன்பிருந்த நாள் , முந்தைய நாள்
முந்நாள் தலைவர் என்று சொன்னால் மூன்று நாட்களுக்குத் தலைவராக இருந்தவர் ,இருப்பவர், அல்லது இருக்கப் போகிறவர் என்று பொருள்.
முன்னாள் தலைவர் என்றால் இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் எனப் பொருள்.
முன்னால் என்றால் முன்பாக என்பதில் பெரும்பாலும் யாருக்கும் குழப்பம் இல்லை .
அதேபோல முந்நூறு , முன்னூறு என்பதிலும் பலருக்கும் குழப்பம் வரும் .
மூன்று + நூறு = முந்நூறு
முன் + நூறு = முன்னூறு (இதற்கு முன்பு நூறு எனப் பொருள்).
மூன்று + நூறு என்பதில் நன்னூல் இலக்கண விதிப்படி மூன்று என்பதில் 'று' மறைந்து ' மூன் ' என்றாகி , ,' மூன் ' என்பதில் ' மூ' என்பது 'மு' எனக் குறுகி, 'ன்' என்பது வருமொழிக்கு ஏற்ப 'ந்' எனத் திரிந்து முந்நூறு எனப் புணர்கிறது.
இலக்கண விதிகளை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் என்னுடைய வலைதளத்துக்கு வரலாம்.
இது தொடர்பான சுவையான கதை ஒன்றைக் கீழே தருகிறேன்.
செல்வந்தர் ஒருவரின் தோட்டத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றை அறுக்க வேண்டி அவர் தச்சர் ஒருவரை வரவழைத்து இருந்தார் .தமிழ்ப் புலமை மிக்க தச்சர் அவர்.
அறுத்த பிறகு 100 ரூபாய் தருவதாகத் தச்சரிடம் செல்வந்தர் கூறினார். மரத்தை அறுத்து முடித்த பிறகு தச்சர் செல்வந்தரிடம் வந்து பணம் கேட்ட பொழுது அவர் தச்சரிடம் சற்று விளையாட எண்ணி," நான் எப்பொழுது உங்களுக்குப் பணம் தருவதாகச் சொன்னேன் ?" என்று கேட்டார்.
சற்றுத் திடுக்கிட்ட தச்சர் ஒரு நொடி யோசித்து, செல்வந்தர் தன்னிடம் விளையாட விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, செல்வந்தரிடம் ," இருநூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே.....?" என்று கேட்டார்.
இப்பொழுது செல்வந்தர் திடுக்கிட்டார்
" நான் எப்பொழுது 200 ரூபாய் தருவதாகச் சொன்னேன்....?" என்று கேட்டார் . அதற்குத் தச்சர் சிரித்துக்கொண்டே ," முன்னூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே....?" என்றார் .
செல்வந்தர் திகைத்துப் போனார்.
"முந்நூறு ரூபாய் தருவதாக நான் சொல்லவே இல்லையே...!" என்றார்.
இப்பொழுது தச்சர், " நானூறு ரூபாய் தருவதாக அல்லவா சொன்னீர்கள்....!" என்று செல்வந்தரைப் பார்த்துக் கேட்டார்.
செல்வந்தர் மேலும் அதிர்ச்சியானார் .
" இப்படி எல்லாம் பொய் சொல்லுகிறீர்களே....!" என்று தச்சரைப் பார்த்து அவர் கேட்டார்.
அதற்குத் தச்சரோ, " இல்லை ஐயா நீங்கள் அறநூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள் அல்லவா....?" என்றார்.
" தச்சரே .... பொய் மேல் பொய் சொல்லாதீர்கள்....!" என்று செல்வந்தர் சற்றுக் கடிந்து கொண்டார்.தச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் "எழுநூறு ரூபாய் தருவதாக நீங்கள் என்னிடம் முன்பே சொன்னீர்கள் ...இப்பொழுது பேச்சு மாறாதீர்கள்....!" என்று செல்வந்தரைப் பார்த்துக் கூறினார். செல்வந்தருக்குப் பேச்சே வரவில்லை . அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து "இல்லை இல்லை நீங்கள் எண்ணூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்....!" என்று தச்சர் சொன்னதும் செல்வந்தருக்குச் சினம் தலைக்கேறிவிட்டது.
"தச்சரே.... நீங்கள் செய்வது கொஞ்சம் கூட நன்றாக இல்லை ...!" எனக் கத்தினார் .
தச்சர் ," பொறுங்கள் ஐயா.... நான் சொல்வதை முழுவதும் கேளுங்கள்.... முதலில் இரு .....நூறு ரூபாய் தருகிறேன் என்று என்னை இருக்கச் சொன்னீர்கள் . அதைத்தான் இருநூறு என்றேன். நான் அறுப்பதற்கு முன் 100 ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள் .அதைத்தான் முந்நூறு என்று சொன்னேன் . நான் நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள் . அதைத்தான் நானூறு ரூபாய் என்றேன். மரத்தை அறு....நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள் . அதைத்தான் அறுநூறு ரூபாய் என்று நான் சொன்னேன்.
எழு, 100 ரூபாய் தருகிறேன் என்று நீங்கள் சொன்னதை 700 ரூபாய் என்றேன். அறுத்த கூலியாக என்னுடைய நூறு ரூபாயான என் நூறு என்பதை எண்ணூறு ரூபாய் என்று சொன்னேன்!" என்றதும் செல்வந்தர் அசந்து போய்விட்டார் .
தச்சரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த அவர் 800, 700, 600, 400, 300 ,200 ரூபாய்களுடன் அவர் தருவதாகச் சொன்ன நூறு ரூபாயையுயும் சேர்த்து 3100 ரூபாயாகக் கொடுத்துத் தச்சரின் தமிழ்ப் புலமைக்குத் தலை வணங்கினார்.
சரியாக கூறினார் கள் புலவரே
ReplyDeleteFantastic sir....keep rocking 👍
ReplyDelete