கடுப்பேத்திட்டாரு மை லார்ட்

 மாலை 3 மணிக்கு செல்ஃபோனில்  அழைத்து  ”ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சுக்கோங்க… ஷார்ப்பா ஈவினிங் செவன் ஓ க்ளாக் வீட்டில் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்…!” என்றார் நண்பர்.   

“என்ன விசேஷம் …எங்கே போறோம்..?” எனக் கேட்க,  “ சும்மா ஒரு ரோட்-ட்ரிப் போகலாம்…மிட்-நைட்ல  மூணார் ஹில்ஸ் போயிட்டு அப்படியே மறுநாள் அந்தப் பக்கமா அடிமாலி வழியா இறங்கிடலாம்..!”  என்றார்.

 கேட்ட அடுத்த நொடியே ப்ளான் பிடித்துப் போனது. டிராவல் பேகை எடுத்து பேக் செய்து 7 மணி எப்பொழுது வரும் எனக் குறுகுறுப்புடன் அமர்ந்திருக்க ,சரியாக 7.05 உக்கு வாசலில் கார் வந்து நின்றது. 

 

 மிகப்பெரிய சர்ப்ரைஸ். புத்தம் புது காம்பாக்ட் செடான் கார்.   நண்பர் முதலில் ஒரு என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் வைத்திருந்தார் .அதில்தான் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் .பிராண்ட் நியூ செடானைப்  பார்த்ததும் ஸ்வீட் ஷாக்கிங்காக  இருந்தது .

சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷத்தில்  நண்பர்  ”கமான்… கெட் இன்.. லெட்ஸ்  ஸ்டார்ட்  அவர் ரோட்-ட்ரிப்  ..."!என்றார்  உற்சாகமாக.  வீட்டில் ஒரு காஃபியை விழுங்கிவிட்டுக் கிளம்ப, கார் மிக ஸ்மூத்தாக வழுக்கிக் கொண்டு சென்றது .


”என்ன இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துட்டீரு....ஃபோன்ல கூட ஒரு வார்த்தை சொல்லலையே…!”  என்று நான் கேட்க  நண்பரின் உதடுகளில் ஒரு மந்தகாசப் புன்னகை  பூத்துக்  கிடந்தது .

ஏதேதோ  பேசிச் சிரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கையில் ,சிரிப்பினூடே  பேச்சோடு பேச்சாக ,  “அப்புறம்… வீட்ல என்ன சொல்லிட்டு வந்தீரு…?. திடீர்னு கிளம்பினதுமே ஷாக் ஆகிருப்பாங்களே…!” என்றார் நண்பர் .

நானும் சிரிப்பு மாறாமல் , “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு ட்ரீட்மென்ட்டுக்காகக்  கேரளா போறோம்னு சொல்லிட்டு வந்தேன்…”! என்றேன்.    அவரது புன்னகை அப்படியே ஃப்ரீஸானது.” என்னது….! ”என்றார் அதிர்ச்சியாக.

“ உங்களுக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்காகக் கேரளா போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..!” என்றேன்.  “என்ன சொல்றீங்க…?”  என்று கேட்ட நண்பரின் குரலில் பதற்றம் கலந்திருந்தது. 


“ ஆமாங்க… திடீர்னு கிளம்பறதால என்ன சொல்றதுன்னு தெரியல அதனால டக்குனு இப்படியொரு  ஐடியா தோணுச்சு…. சொல்லிட்டேன்… எப்பூடி …?” என என்னை நானே மெச்சிக்கொள்வது போலச் சொன்னேன். 


அவரிடம் இருந்த மொத்த உற்சாகமும் வடிந்து விட்டிருந்தது. ”நெசமாத்தான் சொல்றீரா..?”  எனச் சந்தேகத்துடன் கேட்டார். “ இல்லை…”  என்ற  ஆறுதலான பதிலை எதிர்பார்த்த நண்பரிடம் , “ஆமாங்க… உமக்கு ஒரு மாசமாவே கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ட்ரீட்மெண்ட்டுக்குப் போயே ஆகணும்னு சொல்லிட்டேன் ...!" என்றதும் மேலும் அதிர்ச்சியானார்.  


 "ஒரு மாசமா....?  என்ன கண்றாவி இது....!  எதுக்கு இப்படித் சொல்லி தொலைச்சீரு....!"  என்று கடுப்பாக ஆரம்பித்தவரை இடைமறித்து , "நரம்புத் தளர்ச்சினு சொல்லி வச்சிருக்கேன் ... எதாவது மாத்தி உளறி வச்சிடாதீரும்...!"  என்றேன் .

 

காரை ஸ்லோ செய்து யோசித்தவர் , "சும்மா அடிச்சு விடாதீரும். நாம கிளம்பும்போது அவங்க ஒண்ணுமே இதப் பத்திக் கேட்கவே இல்லியே.....!  என்று பாயிண்டைப் பிடித்த மகிழ்ச்சியில் திரும்பிப் பார்த்தார். 


" அதெப்படிக் கேட்பாங்க.. அவரு சங்கடப்படுவாரு... அதனால தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்க வேணாம்னு சொல்லி வச்சிருந்தோம்ல .....!" என்றேன் .


அவ்வளவுதான்.... அவரது முகம் அஷ்ட கோணலானது . இதற்கு மேல் இதை மெயின்டெயின் செய்தால் நடுவழியில் நிறுத்தி இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என என் உள் மனதில் அலாரம் அடிக்க ஆரம்பிக்க,  " ஜஸ்ட் ஃபார் ஃபன்.... சும்மா சொன்னேன் ....நோ டென்ஷன் ...!" என்று உண்மையைப் போட்டு உடைத்ததும்தான் நண்பர் ரிலாக்ஸ் ஆனார் .


"ஸோஜா ஸோஜா"  என ஏ.ஆர்.ரஹ்மானின் மயக்கும் இசையில் சாஷா திருப்பதி தனது வசீகரக் குரலில் கிறங்கடித்துக் கொண்டிருக்க, சின்னார் வனத்துறை சோதனைச்சாவடியில் கார் என்டர் ஆகிக்கொண்டிருந்தது. 

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி