தமிழ் கொஞ்சம் வாழட்டும்

  நாளும் செல்லும் இடங்கள் தோறும் பிழைகள் மலிந்த பெயர்ப் பலகைகள்  கண்ணில் போடுவது இப்பொழுதெல்லாம் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எங்காவது ஓரிரு இடங்களில் அரிய நிகழ்வாகத்தான்  ஏதாவது  பிழையில்லாத் தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிலவாவது  கண்ணுக்குத் தென்படும்.  இன்னும் சில காலங்களுக்குத் தமிழின் ஆயுளைத் தள்ளிப் போட முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கும்.

  நேற்று நண்பகல் கண்ணில் பட்ட ஒன்று.....

  "இங்கு கண்டிப்பாக குப்பைகளை கொட்ட கூடாது....!"

 முதலில் வழக்கம் போல ஒற்றுப்பிழை. 

 " இங்கு கண்டிப்பாகக் குப்பைகளைக் கொட்டக் கூடாது" என்று வரவேண்டிய இடத்தில் மூன்று  'க்' குகளை வெட்டி அதற்கான  அச்சு மற்றும் வண்ணக் கலவைச் செலவை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.  ஆண்டுக்கு இதுபோலப் பத்தாயிரம் பலகைகள், 20,000 எழுத்துக்கள் , பல ஆயிரம் ரூபாய்கள் மிச்சம் என்ற கணக்கீடு ஒரு வேளை இருக்குமோ என்னவோ......!

  சரி போகட்டும்...... அதென்ன 'கண்டிப்பாக’ என்று புரியவில்லை. 

    கண்டித்தல் என்ற பொருளுக்கும் குப்பைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை‌.   கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல் கண்டித்தலுக்கும் கண்டனத்துக்கும் உரியதன்று . அது தண்டித்தலுக்கு உரியது. 

    இங்கு மட்டும் இல்லை,  கண்டிப்பாக என்ற சொல் இப்பொழுதெல்லாம் நமது உரையாடல்களில் பெரும்பங்கு வகிக்கிறது. ' உறுதியாக'  என்று சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் 'கண்டிப்பாக' என்ற சொல் எப்படி இடம் பிடித்தது எனத் தெரியவில்லை.  

  "அடுத்த மாதம் கண்டிப்பா நீ ஊருக்கு வரணும்....!"

 "எக்ஸாம் நல்லா எழுதி நிறைய மார்க் வாங்கணும்...!

" கண்டிப்பா சார் .....!"

"நாளைக்கு வந்துடுவியா....?"

" கண்டிப்பா வந்துடுவேன் மேடம்....!"

நிறையச் சொற்களை இதுபோல நாம் கண்டுபிடிக்க முடியும்.  ஆங்கிலம் தான் பாவம். சான்றுக்கு , ' அசால்ட் ' (Assault) என்ற சொல்லின் பொருள்‌ தாக்குதல் என்பதாகும்‌ .  ஆனால் நாம்  கேஷுவல், கேர்லஸ் போன்ற பொருள்களில் பயன்படுத்துகிறோம்.  அதுவும் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுவார்கள் பாருங்கள்.... ஐயோ பாவம்.....!

   டெய்லர் -டைலர் ( டைல் என்றால் ஓடு) 

   Tyre  என்பதை டயர் என்று எழுதித் தொலையாமல் டையர் என்று எழுதி வைத்திருப்பார்கள் . 

  "காளிப்புலவர் சில்லி " என்பதெல்லாம்  'கோபம் வர்ற மாதிரி' காமெடி வகையைச் சாரும் .  

  இதன் உச்சகட்டம் 

  'எஃக் காளான்'

  ' எஃக் நூடுல்ஸ் '

  ஃ போட்டால் ரொம்ப ஸ்டைலாக இருக்கும் என்று யாரோ ஆழ்மனதில் ரொம்ப ஸ்ட்ராங்காகப் பதிய வைத்திருப்பார்கள் போலும்.  ஆனால் ஆஃப் -பாயில் என்று ஃ போடவேண்டிய  இடத்தில் போடாமல் ஆப்பாயில்  என்று எழுதி வைத்திருப்பார்கள் .

  'வறுவல்'  என்று அழகிய தமிழில் வல்லின 'ற' கரத்துடன்  எழுதியதைத்  தவறு என்று ஓரளவு படித்தவர்களே சொல்லும் அளவு பல்லாண்டுகளாக 'வருவல்' என்று எழுதி எழுதிப் பெரும் புரட்சியையே  நிகழ்த்தி விட்டார்கள் . 'வருவள் ' என்று அஃது இன்னும் அடுத்த லெவலுக்குப் போய் விட்டது. 

எழுதுவதை நிறுத்திவிட்டுப் படங்களை மட்டும்  ஒட்டி வைத்து விடுங்கள் தமிழர்களே.... சீனமொழி போலச் சித்திரமொழியாகத் தமிழ் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து கொள்ளட்டும் . 

வருவல் என்று நாராசமாக எழுதுவதற்குப் பதில் வறுவலின் படத்தை ஒட்டி வைத்து விடுங்கள். சாப்பிட   வருபவர்கள்  புரிந்து கொள்வார்கள். பாவம் தமிழ்..... பிழைத்துப் போகட்டும்.....!

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி