கருப்பு -கறுப்பு எது சரி ?

அண்மையில் சகோதரி ஒருவர் இவ் ஐயத்தை எழுப்பி இருந்தார். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் விவாதங்களுள் ஒன்று இது.  சற்று விரிவாகப் பார்ப்போம்....!

 கரிய நிறம் என்று குறிப்பிடுவதால் கருப்பு என்பதே சரி என்பர் சிலர்.
 
 கருவிழி
 கருங்கூந்தல் 
 கருந்தேள் 
 கார்மேகம் 
 காரிருள் 
 கன்னங்கரிய
 கரிய நிறம் 
 கருங்குழலி 
 கார்வண்ணன் 
 இச்சொற்களை எல்லாம் பார்த்தால் கருப்பு என்ற சொல்லிலிருந்து தோன்றியவை இவை எனப் புரியும்.
 
 'கருகரு' என வளர்ந்த கூந்தல் என்பதிலும் கருப்பு என்பதிலிருந்தே கருகரு என்ற அடுக்குத்தொடர் பிறந்திருக்க முடியும்.
 
 கருப்பு என்பதிலிருந்து அதன் பண்பைக் கொண்ட கரி என்னும் சொல் வந்திருக்கலாம்.
  அடுப்புக்கரி 
  நிலக்கரி என்று எழுதுகிறோம். அடுப்புக்கறி
  நிலக்கறி என்று எழுதுவதில்லை.
  
 "துங்கக்  கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
  சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று  யானை முகத்தோனிடம்  முத்தமிழையும்    ஔவையார் கேட்கிறார்.
  
 இப்பாடலில் கரி என்பது யானையைக் குறிக்கும்.  யானை கருமை நிறம் கொண்டது  என்பதால் கரி என்றும் அதற்குப் பெயர்.  
 
"வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங்கண்ணி காண்வரிக்கோலம்"
எனச்  சிலப்பதிகார வேனிற்காதையில் மாதவியைக் கருநெடுங்கண்ணி என்கிறார் இளங்கோவடிகள்.

" செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி" என விசுவாமித்திரர் தசரதனிடம் கேட்பதாகக்  கம்பர் எழுதுகிறார் .
கறுப்பு என்பதற்கு வெறுப்பு, சினம் என்பதே பொருள். கறுகறு என்று முகம் கறுத்தல் என்றால் வெறுப்பாலோ சினத்தாலோ முகம் கருப்பாவதைக் குறிக்கிறோம்.

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்"  என்பது தொல்காப்பியக்  கூற்று. (தொல்காப்பியம் -855).

 தொல்காப்பியத்தின் 756 வது நூற்பா "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப" எனக் கூறுகிறது. 
 
" வானம் மாமலை வாழ் சூழ்பு கறுப்ப"  என்று குறிஞ்சிப்பாட்டிலும் "கவ்வை கறுப்பு" என அகநானூற்றிலும் வருவதெல்லாம் சீற்றத்தால், கோபத்தால், கடினத்தால், சினம் முற்றிக் கறுத்தல் எனும் பொருளில் வருவதால் அது நிறத்து உரு  வேறுபடல் எனும் பொருளைக் கொண்டது .

"கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்"
என்ற குறட்பாவிலும் கறுத்து இன்னா செய்தல் என்பதைச் சினத்தால் தீங்கு செய்தவர் என்ற பொருளிலேயே திருவள்ளுவரும் எடுத்தாள்கிறார்.

  எனவே கரிய- கரி- கருமை- கார் என்ற சொற்களின் அடிப்படையில் கருப்பு என்பதே சரி என்பது ஒரு வகை.
  
 மற்றொரு தரப்பைப் பார்ப்போம்.
 
 காரிருள் என்பதை, கருமை + இருள் எனப் பிரிக்கும் பொழுது கருமை என்பது கறுப்பு என்பதன் பெயர் பண்புப் பெயர்தானே தவிர ,கருப்பு என்றால் பஞ்சம், வறுமையான காலகட்டம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
கறுப்புதான் நிறத்தின் பெயர் என்றால் , அதன் பண்புப் பெயரைக் 
 கறுமை என்று சொல்வதில்லையே ,கருமை என்றுதானே சொல்கிறோம்.....எனவே கருப்புதானே சரி என்று கேட்டால், வெறுப்பு என்பதன் பண்புப்பெயர்  வெறுமை என்றோ ,  மறுப்புக்குப் பண்புப்பெயர்  மறுமை  என்றோ  வருவதில்லையே , அவை வேறு வேறு சொற்கள் ...அதுபோலக் 
  கறுப்பு என்பதற்குக்  கருமை என்ற பண்புப் பெயர் ஏன் வரக்கூடாது....?
   
 இரும்புப் பாதையை இருப்புப் பாதை என்பது போல கரும்பு என்பதன் போலி கருப்பு என்று கூறுவாரும் உண்டு.
 
" கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள், நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப" என்கிற தொல்காப்பியத்தை நாம் இப்படியும் பொருள் கொள்ளலாம். கறுப்பும் சிவப்பும் சினத்தைக் குறித்தாலும் நிறத்திற்கும் பயன்படுத்தலாம் என எடுத்துக் கொள்ளலாம் .
"பயிலாதவற்றைப் பயின்றவை சாத்தி தத்தம் மரபு சென்று நிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் "என்பதும் தொல்காப்பிய நூற்பா.
 'மேகம் கருத்து விட்டது' என்று சொல்வதில்லை .'கருத்து' என்றால் எண்ணம், உளப்பொருள் என்று பொருள்.
  'மேகம் கறுத்து விட்டது' என்றே எழுதுகிறோம்.  இங்கு மேகம் முற்றிவிட்டது எனப் பொருள்கொள்ளாமல் கறுப்பு நிறம் ஆகிவிட்டது என்றே பொருள் கொள்ள வேண்டும். 
   எனவே கறுப்பு என்பதே சரி என்பது மற்றொரு வகை .
  
 இவற்றில் எதைத்தான் தேர்வது.....?
 
 தமிழில் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், மரபு, பண்பாடு ,தொல் வழக்கம் என எவற்றுக்குமே பொருந்தாத,  எத்தனையோ  சொற்களை மொழியறிவும், மொழி உணர்வுமின்றி நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தூய தமிழ்ச் சொற்களான கருப்பு- கறுப்பு இரண்டுமே சரிதான் என முடித்துக் கொள்ளலாம்.
மீண்டும் சந்திப்போம்....!

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?