எளிய தமிழ் இனிய தமிழ்......!
"நேற்று எங்கள் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்."
மேற்கண்ட சொல் தொடரைக் கவனிப்போம்.
"இதில் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்" என்று எழுதுவதை விட "இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்" என்று எழுதுவது சரியான தொடராக இருக்கும் .
இதனை மேலும் செழுமைப்படுத்தினால் "இதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்" என்பது கிடைக்கும்.
இன்னும் செழுமைப்படுத்த வேண்டுமென்றால் , 'கள்'ளை நீக்கலாம். (கள் எப்போதுமே நீக்கப்பட வேண்டியதுதான்).
"இதில் மாணவர் அனைவரும் கலந்து கொண்டனர்".
மாணவர் எனும் பொழுது மாணவிகளைக் குறிப்பது எவ்வாறு எனும் ஐயம் எழும். மாணவர் என்பது பலர்பால் பெயர்தான். மாணவன் ,மாணவி என அனைவரையும் சேர்த்தே குறிப்பதுதான் மாணவர் என்ற சொல் .
'அர்' விகுதி வந்தால் ஆண்பால் எனப் பொதுவாக நினைப்பதுதான் இக்குழப்பத்துக்குக் காரணம். இருந்தாலும், வேறுபடுத்திக் காட்டியே தான் ஆக வேண்டும் என விரும்பினால், "இதில் மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்" என எழுதலாம்.
இப்பொழுது மீண்டும் படித்துப் பார்ப்போம்.
" இதில் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர் "
"இதில் மாணவர் அனைவரும் கலந்து கொண்டனர்"
வேறுபாடு எளிதில் விளங்கும்.
தமிழ் எளிமையானது மட்டுமன்று ,இனிமையானதும் கூட.
Comments
Post a Comment
நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!