Posts

Showing posts from August, 2022

பொன்னியின் செல்வன் நிகழ்த்தும் மாயாஜாலம்

  கல்கியில் தொடர்கதையாக வந்த போது ஆண்டுக் கணக்கில் ஒவ்வொரு வாரமும்  காத்திருந்து படித்தாயிற்று.    நூலகத்தில் ஒவ்வொரு பாகமாக எடுத்து வந்து  ஒரே மூச்சில் படித்துப் பார்த்தாயிற்று.    பாட்காஸ்டாக ஆடியோ வடிவில் கேட்டாயிற்று.    எஸ் எஸ் இன்டர்நேஷனல் தத்ரூபமாக நாடக வடிவில் அரங்கேற்றியதைப் பார்த்து அனுபவித்தாயிற்று .   மீண்டும் சிலர் வசன வடிவில் மேடையில் நிகழ்த்திக் காட்டியதையும் பார்த்தாயிற்று.    வீரநாராயண ஏரி முதல் கோடியக்கரை வரை பொன்னியின் செல்வன் மாந்தர்கள் உலவிய பல இடங்களை நேரிலும்  கண்டு மகிழ்ந்தாயிற்று.   பொன்னியின் செல்வனின் முன் கதை, பின் கதைகளையும்  படித்தாயிற்று.    BYNGE  ஆப் மூலமாக தொடுதிரைக் கருவியிலும் படித்து உணர்ந்தாயிற்று.  பொன்னியின் செல்வனின் ரசிகப் பெருமக்கள் பலருடன் மணிக் கணக்கில் நேரிலும் ,ஆனலைனிலும் கதைத்துத் தீர்த்தாயிற்று.   நேற்று மாலை கூட நண்பர் ரகுநாதன் அவர்களுடன் பொன்னியின் செல்வனை  அலசி ஆராய்ந்து பார்த்தாயிற்று. நாவலுக்கான பல்வேறு பின்னூட்டங்களை பலவித இ...

உப்பொ-உன்னம்

 எழுத்து வடிவில் பார்க்கும்பொழுது சில சொற்கள் வேறு மொழிச் சொற்கள் போலத் தோன்றும் . ஆனால் பேச்சுத் தமிழில் வட்டார அளவில் வழங்கப்படும் சொற்கள்தாம் அவை . இப்பொழுது என்ற சொல்தான் கொங்கு வட்டாரப்  பேச்சு வழக்கில் "உப்பொ" எனப்படுகிறது. " உப்போ வந்துட்டேன்"  "உப்பவே வந்துட்டேன்"   " உப்ப வந்துட்டேன்"  உப்ப வரேன் என்றால் உப்புவதற்கு வருகிறேன் எனப் பொருள் கொள்ள வேண்டியது இல்லை. உப்ப என்பது உப்புதல் ( பெருத்தல்) என்பதன் வினையெச்சம்.   அதுவே போல உன்னம், உன்னும் ,உன்னூ, உன்னா என்பது இன்னும் என்பதன் திரிபாக இருக்கிறது.  இன்னும், இன்னும் - உன்னம், உன்னம்  இன்னும் வரவில்லை-  உன்னும் வருல, உன்னு(ம்) வரல.  அதுவே நீண்ட நேரத்தைக் குறிக்கையில் உன்னா  என இழுத்து உச்சரிக்கப்படுகிறது.   "இன்னும் வரவில்லையா..?"-  "உன்னா வருலியா ..?"   அங்கே என்பதும் நீண்ட தொலைவில் உள்ளதைச் சுட்டிக்காட்டும் போது "அங்கா"  என இழுக்கப்படுகிறது. "அது எதுக்குப்பா அங்கா போய் வர்றது....?" நுணுக்கமான இந்த ஒலிப்புகளை அடுத்த முறை,   குறிப்பாக வட்டார...

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.

 இளந்தூறலுடனான இரவு .  11:30 மணிக்குக் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சியை நோக்கிப் புறப்பட்ட பேருந்து ஒன்றில் ஏறிய போது பயணிகளால் அது நிறைந்திருந்தது.   முக்கால்வாசிப்  பேர் ஆழ்துயிலிலும் அரைத் துயிலிலும் லயித்திருக்க, சிலரிடமிருந்து வந்த மது வாசனை பேருந்து முழுக்கச் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது .   பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவில்பாளையம், சுந்தராபுரம், ஈச்சனாரி என ஒவ்வொருவரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தனர். " டிக்கெட் ...டிக்கெட்"  எனக் கூறியபடி வந்து கொண்டிருந்த  கண்டக்டர் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒருவரை எழுப்பினார்.   அவர் சட்டென விழித்துப் பார்த்து " எனக்கு வேண்டாம் " என்றார் பெருந்தன்மையாக.   நடத்துனர் கடுப்பாகி,  "வேண்டாம்னா இறங்கிக்க"  என்றார் .அந்தப் பயணியோ," இல்ல சார்... நான் டிக்கெட் வாங்கிட்டேன்"  என்றார்.   " எப்பய்யா வாங்கினே....? நான் இப்பத் தானே இங்க வரேன்....!"  என்றார் நடத்துனர் .  "இல்ல சார் ...நான் கவுண்டம்பாளையத்திலேயே வாங்கிட்டேன்..."  என்று அவர் கூலாகக் க...

நிலம்பூர்ப் பயணம்-நீங்கா நினைவுகள்

 ச்ச்சும்ம்ம்மா ஒரு ரவுண்டு அடித்து வரலாம் எனச் சனிக்கிழமை நாளொன்றின் காலையில் நண்பர் கணேசனை மட்டும் காரில்  ஏற்றிக் கொண்டு வாளையாரில் கேரள நிலத்தை மிதித்தாயிற்று ....அதாவது கார் டயர் மலையாள மண்ணில் உருள ஆரம்பித்தாயிற்று.. பாலக்காட்டைத் தொடுவதற்குள் அடுத்து எங்கே போவது எனப் பல்வேறு சாய்ஸ்களை அலசிப் பார்த்து விட்டு  நிலம்பூரை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்து கோழிக்கோட்டுச் சாலையில் வண்டியைத் திருப்பி ஆக்ஸிலேட்டரை அழுத்தத் தொடங்கினேன். மலப்புரம் மாவட்டத்தில் மலைகளுக்கிடையில் சுகமாகப் பொதிந்து கிடக்கும் நிலம்பூர் ரோட் -ட்ரிப்புக்கு அட்டகாசமான ஸ்பாட்...     மன்னார்க்காட்டில் ஃப்ரூட்ஸ் நிறைந்த லைட்டான பிரெக்ஃபாஸ்ட் சுகமாக முடிந்த பிறகு  சில்லென்ற காலை வெயிலில் மேலாற்றூரையும் பாண்டிக்காட்டையும்  வண்டூரையும்   கடந்து நிலம்பூரை நெருங்கும்போது காலை 10 மணி ஆகிவிட்டிருந்தது. சாலியாற்றின் கரையில் கிடக்கும் அழகான டவுனான நிலம்பூரில் CONNOLY'S PLOT தான் நாம் விஸிட் செய்யப் போகும் ஃபர்ஸ்ட் ஸ்பாட்.  19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக...

தண்ணீர் சேந்துதல்

  கிணற்றிலிருந்து நீர் எடுப்பதைக் கொங்கு வட்டார வழக்கில் தண்ணீர் சேந்துதல் என்பார்கள். குடிநீருக்குப் பயன்படும் நீருள்ள கிணற்றைச் ’சேந்துகிணறு’ என்பார்கள். கிணற்றிலிருந்து நீரை எடுப்பதைப் பொதுவாக நீர் இறைத்தல் என்பது வழக்கம். ஏதேனும் ஒரு நீர் நிலையிலிருந்து குடத்திலோ அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்திலோ எடுத்து வருவதை மொண்டு வருதல் என்பதும், மொண்டல் என்பதும், மொள்ளல் என்பதும், முகத்தல் என்பதும் தமிழ் மொழி வழக்கம். " கொஞ்சம் நீர்மொண்டு வருகிறேன்..." "சிறிது நீர் முகந்து வருகிறேன்.." " நான் ஆற்றில் தண்ணீர் மொள்ள வில்லை..." என்பன சான்றுகள். அளத்தலை முகத்தல் அளவை என்றுதான் குறிப்பிடுகிறோம். மொண்டு வருதலை வட்டார வழக்கில் "மோந்து வருதல்" என்பர். " கொஞ்சம் தண்ணி மோந்துவா.." என்பது வழக்கம். முகந்து வருதல் என்பதன் பேச்சு வழக்கு மோந்து வருவதாகும் . முகந்து வருதல் வேறு முகர்ந்து வருதல் வேறு. முகர்ந்து வருதல் என்றால் மூக்கால், மூச்சால் உணருதலைக் குறிக்கும் .இதையும் 'மோந்து பார்த்தல்' என்று கூறுவது பேச்சு வழக்காகும். மோப்ப...