கிறுக்கு முற்றியது
கிறுக்கு முற்றியது
(தாழிசை)
கண்ணழகுக்கு இவ்வுலகில்
என்னவிலையும் கொடுக்கலாம்;
கண்ணசைவுக் கட்டளையில்
காலன்கூட மயங்கலாம்!
உதிர்க்கும் வார்த்தை ஒன்றுக்காக
உலகத்தையே துறக்கலாம்;
உதட்டு வார்த்தை உத்தரவில்
சொர்க்கம்கூடத் திறக்கலாம்!
பக்குவமாய்ப் படைத்தசாமிக்குப்
படையல் ஒன்று போடலாம்;
முக்தியடைய அடுத்த பிறவியிலுன்
முகப்பருவாய்ப் பிறக்கலாம்!
என்னவளே உன்னழகை
என்ணியெண்ணி வியக்கலாம்;
கன்னியுன்றன் முகத்தைகாட்டிக்
கல்லைக்கூட மயக்கலாம்!
கன்ணேஉன் கனிமொழியைக்
காலம்முழுதும் கேட்கலாம்;
புண்ணியமாய்ப் போகுமொரு
புன்னகை செய் தேவலாம்!
கண்மணியின் காலடியில்
காலம் முழுதும் கிடக்கலாம்; - உன்
கால்கள்பட்ட இடத்திலெனக்குக்
கல்லறையே கட்டலாம்!
உன்விழியின் ஒளியதனை
உலகுமுழுதும் பரப்பலாம்;
இரவுபகல் வேறுபாடே
இல்லையென்று சொல்லலாம்!
கூந்தலிழை ஒன்றுபோதும்
குவலயத்தை ஆளலாம்;
ஏந்திழையின் எண்ணங்களை
எழுத்துவடிவில் தீட்டலாம்!
பாதம் துடைக்க வானிலிருந்து
மேகத்துணி கிழிக்கலாம்;
பாதம் அழகா? மேகம் அழகா?
பட்டிமன்றம் வைக்கலாம்!
தலையில் தவழ நிலவும்கூடத்
தாவிக்குதிக்கப் பார்க்கலாம்;
தவறிவிழுந்த தலைமுடியைத்
தத்தெடுத்து வளர்க்கலாம்!
கைதவறித் தரையில் விழுந்த
கைக்குட்டையை எடுக்கலாம்;
காதலுலகின் சின்னமதைக்
கம்பத்திலே ஏற்றலாம்!
கூந்தல்கண்ட பூவெடுத்துக்
கொஞ்சிக்கதை பேசலாம்;
தேனில்நனைத்து ஊறவைத்துத்
திவ்வியமாய்ப் புசிக்கலாம்!
பூவிதழில் தேந்தடவிப்
புதையல்ஒன்று செய்யலாம்;
தேவியுன்றன் கன்னக்குழி
தேடியதை நிரப்பலாம்!
பாதம்பட்ட துளிநீரைப்
பத்திரமாய் வைக்கலாம்;
பட்டமரம் துளிர்க்குமதைப்
பக்குவமாய்த் தெளிக்கலாம்!
வெட்டியெறிந்த நகப்பிசிறை
விண்ணுலகு அனுப்பலாம்;
கட்டழகின் மாதிரியாய்க்
காட்டிப்பெருமை அடிக்கலாம்!
கால்பதித்த மண்ணெடுத்துக்
கோயிலொன்று கட்டலாம்;
தேவதையே நீயேதான்
தெய்வமென்று வணங்கலாம்!
கொலுசுமணியின் தினுசுகண்டு
கொள்ளையடித்துப் போகலாம்;
கொஞ்சம்சுரண்டி நெஞ்சில் தடவிக்
காதல்நோயைத் தணிக்கலாம்!
பனிவிரல்கள் என்மீது
பட்டுவிட நேரலாம்;
இனியுமென்ன உலகிலெனக்கு
இந்நொடியே சாகலாம்!
(ஈரடியா ணென்சீர் கொண்டமைவனவெல்லாந் தாழிசை யாம்.)
(எனது "சூரல் பம்பிய சிறுகான் யாறு" நூலிலிருந்து....!)
ரசித்தேன்...
ReplyDelete
ReplyDeleteகாதல் வசப்பட்டால் கவிதையும் வசப்படுமோ.?
than q
ReplyDeleteபட்டி மன்ற தலைப்பு அருமை.....
ReplyDeleteஅழகுக்கவிதை
ReplyDeleteவணக்கம் கவிஞரே...
ReplyDeleteகவிதை மிக மிக அருமை.
இரசித்துச் சுவைத்தேன்.
இது என்ன இலக்கணம் என்று சொல்லுங்களேன்... நானும் எழுதிப் பார்க்கிறேன்.
நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஆனாலும் ஒரே பெண்ணை வர்ணிக்காமல்... இத்தனையையும் தனித்தனியாக வர்ணித்து... வீட்டில் திட்டு கிடைக்காதா...?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்ககளின் சூரல் பம்பிய சிறுகான் யாறு நூலை எங்கு வாங்கலாம்.