கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

 


கடைசி வரை இதைப் படிப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் கடைசியில் ஒரு பன்ச் இருக்கிறது.



கூகுள் மேப்ஸ்..... அன்றாட வாழ்வின் அங்கம்......


 இதை நம்ப முடியாது என்ற குறைகளும் காமெடிகளும் தாண்டி நமக்குப் பேருதவி புரிந்து வருகிறது என்பது முற்றிலும் உண்மை.


 கூகுள் மேப்ஸில் LOCAL GUIDE  என்ற ஒன்று உண்டு .கூகுள் மேப்ஸ் பயனீட்டாளர் ஒவ்வொருவருமே அதில் பங்களிக்க முடியும் .நாம் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் ,வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ,மருத்துவமனைகள் சேவைத்தளங்கள், கல்வி நிறுவனங்கள் ,சுற்றுலாத்தலங்கள், வீடுகள், புதிய சாலைகள் உள்ளிட்ட எதையும் நாம் கூகுள் மேப்ஸில் சேர்க்கவோ, நீக்கவோ திருத்தவோ கூகுளுக்குப் பரிந்துரைக்க முடியும் .


மேலும் இவ்வகையான இடங்களின் ஃபோட்டோக்கள் மற்றும் விடியோக்களையும் பதிவேற்ற முடியும்.  ரேட்டிங் மற்றும் ரிவ்யூசும் தர முடியும். இவை எல்லாவற்றுக்குமே கூகுள் நமக்கு பாயின்ட்ஸ் தருகிறது. பலவித BADGEகளும் தருகிறது .


நாம்  பெறும் புள்ளிகளின் அடிப்படையில் லெவல் 1-இல் தொடங்கிப் 10 வரை செல்ல முடியும். இதனால் என்ன பயன் என்றால், நாம் பதிவேற்றும் ஃபோட்டோக்களையும் விடியோக்களையும் வைத்து அந்த இடத்தைப் பற்றி எவரொருவருமே நன்கு அறிந்து கொள்ள முடியும் .


சான்றுக்கு, நாம் ஓர் உணவகத்தில் உணவருந்தி விட்டு அங்கு எடுத்த ஃபோட்டோக்களையும் விடியோக்களையும் கூகுள் மேப்ஸில் பதிவேற்றுகிறோம் என்று வைத்துக் கொண்டால், அதற்கு அடுத்த நாட்களில் வேறு யாரேனும் அந்த உணவகத்தை கூகுள் மேப்ஸில் பார்க்கும் போது அந்த இடத்தின் அமைப்பை, தன்மையை, பார்க்கிங்  ஸ்பேஸை ,பல அம்சங்களை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.


 நாம் கொடுக்கும் Reviews  மூலம் அந்த ஹோட்டலின் செயல்பாட்டையும் தரத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அந்தப் பின்னூட்டங்களுக்கு நிறுவன உரிமையாளர் தரும் மறு மொழிகளின் மூலம் அதன் தரத்தைப் புரிந்து கொள்ள முடியும் .


பெரும்பாலும் தவறான பின்னூட்டங்களை யாரும் தந்து நான் பார்த்ததில்லை .

கோழிக்கோட்டில் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கிய அனைவரின் பின்னூட்டங்களும் மிக மோசமான அனுபவம் என்று குறிப்பிட்டு இருந்தன .குறிப்பாக செக்கின் அனுபவம் ....!


அதையும் மீறி நாம் ஒருமுறை அங்கு தங்க நேர்ந்தபோது வாடிக்கையாளர்களின் Reviews களில் என்ன குறைகள் இருந்தனவோ அந்தக் குறைகள் அப்படியே அங்கு இருந்தன. 


 Local Guide இல் அடுத்தடுத்த லெவல் செல்லும் போது கூகுள் மேப்ஸ் நம்மிடம் நிறையக் கேள்விகள் கேட்கும். நாம் சென்று வந்த இடத்தின் அனைத்து அம்சங்களையும் விசாரித்துத் தரவுகளைப் பெற்று கூகுள் நிறுவனமான்து  Maps ஐ மேம்படுத்திக் கொள்ளும்.


 நாம் ஒருமுறை கொடுத்த ரிவ்யூவை மீண்டும் அதே இடத்துக்கு மறுமுறை செல்லும் பொழுது அப்டேட் செய்ய வேண்டுமா என்றும் கேட்கும்.  இதன் மூலம் நமக்குப் பெரும்பயன் கிடைக்கிறது. எப்படி எனில் ,நாம் புதிதாக ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தால் ,அவ்விடத்தைப் பற்றி விசாரிக்க விரும்பினால் மேப்ஸில் கேள்வி பதில் பகுதியில் கேட்கலாம்.


 சான்றுக்கு, நாம் அதிரப்பள்ளி அருவியைப் பார்க்க செல்லத் திட்டமிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கு தண்ணீர் வரத்து எப்படி இருக்கிறது, காலநிலை எப்படி இருக்கிறது, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறதா, இந்த நாளில் ஆற்றில் குளிக்க அனுமதி உண்டா என்பன போன்ற கேள்விகளுக்கு ரியல் டைமில் பதில்களைப் பெறலாம் .


இவை ஒவ்வொன்றுக்குமே பாய்ன்ட்டுகளும் கிடைக்கும் .


லோக்கல் கைட் லெவல் அடுத்த கட்டங்களுக்குச் செல்லும் போது நமக்குச் சில பணப் பயன்களும் உண்டு.

 Air ticket , Hotel Booking போன்றவற்றில் 50 சதவீதம் வரை ஆஃபர் கிடைக்கக்கூடிய கூப்பன்கள் ,வவுச்சர்கள் போன்றவை கிடைக்கும் .


பலவித Badges  மட்டுமின்றி ஒரு லட்சம் பாயின்ட் எடுக்கும் பொழுது பத்து லெவல்களையும் முடித்துப் பத்து ஸ்டார்கள் வாங்கி இருப்போம். இதுதான் உச்சபட்சம் .


கடந்த பத்தாண்டுகளாக Local Guide ஆக இருக்கும் நான் நேற்றுப் பத்தாவது லெவலை வெற்றிகரமாக முடித்து பத்து ஸ்டார்களையும் வாங்கி இருக்கிறேன். ஒரு கோடிப் பார்வைகளையும் எனது பங்களிப்புகள் கடந்து இருக்கின்றன. 


 நன்றி கூகுள்....!

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?