கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா -2024

 கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியிருந்தது .வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலுடன் நுழைந்த போது, ஞாயிறு பிற்பகல் என்பதால் திருவிழா களை கட்டியிருந்தது. நுழைவு வாயிலிலேயே நல்லதொரு ஃபீல் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம் துத்தேரிபாளையம் அரசுப் பள்ளியிலிருந்து ஏறத்தாழ 30 மாணவ மாணவியரை ஆசிரியரும், நண்பருமான திரு .வெற்றிவேல் அவர்கள் அழைத்து வந்திருந்தார். வெளியேறிக் கொண்டிருந்த மாணவர்களின் கைகளில் சில புத்தகங்களும் ,பட்டியல்களும் இருந்தன. இந்தப் புள்ளியிலிருந்து அவர்களில் யாரேனும் வாசிப்புலகத்திற்குள் நுழையக் கூடும்.


 இன்றைய உலகின் மிகப் பெரும் டிஜிட்டல் அரக்கர்களான ரீல்ஸ்க்கும் ஷார்ட்ஸ்க்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் பதின்ம வயதினர் வாசிப்பின் பக்கம் திரும்புவதெல்லாம் மிகப் பெரும் அதிசய நிகழ்வாகத்தான் இருக்கும் .பெரியவர்களுமே அதற்குக் கட்டுண்டுதான் கிடக்கிறார்கள் .என்னைப் பொறுத்தவரையிலும் ரீல்ஸ்களும் ஷார்ட்ஸ்களும் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்கள் என்றாலும்  ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் எப்பொழுதாவது தேவைப்படும்போது பார்த்தால் மட்டும் .மற்றபடி அவற்றை ரெஃபரன்ஸ் மெட்டீரியல் எனச் சொல்ல முடியாது. ரீல்ஸ்களில் மூழ்கிக் கிடப்பவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன் ...ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் தீவிரமாக இருங்கள்... ஆனால் பார்வையாளர்களாக இராமல் கிரியேட்டராக இருக்க முயலுங்கள் என்பேன்.


  இவ்வாண்டும் நிறைய இளந்தலைமுறையினரைக் காண முடிந்தது .பள்ளி மாணவர்கள் பலரும் நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர் .பெற்றோர்கள் பலரும் தமது குழந்தைகளுடன் வந்திருந்து, பலவிதமான புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது .


'கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா' என்றே பெயர்ப் பலகைகளில் பார்த்துச் சலிப்பும் அலுப்பும் அடைந்திருந்த கண்களுக்குச் சில இடங்களில் 'கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழா' என்றும் 'கோவைப் புத்தகத் திருவிழா' என்றும் ஒற்றுப் பிழையற்ற பெயர்ப்பலகைகளை ஆங்காங்கே பார்க்க நேர்ந்ததில் புத்துணவு ஏற்பட்டது உண்மை .


இருப்பினும் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் கூட ஓரிரு இடங்களில் 'தமிழ் பல்கலைக்கழகம்' என்று வல்லினம் மிகாமல் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தபோது வெறுப்பும் விரக்தியுமே மேலிட்டன.


 நண்பர் திரு. மல்லிகார்ஜுனன் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார் .சென்ற ஆண்டு அவரது புதல்வனுக்கு ரஸ்கின் பான்ட் எழுதிய நூல்களைப் பரிந்துரைத்த நான் இவ்வாண்டு அவரது வயது கூடி வருவதைக் கருத்தில் கொண்டு Robert Kiyosaki யின் Rich dad Poor dad ஐப் பரிந்துரைத்தேன். 


"Not money but lack of money is the cause of all evils "  என்ற அவரது புகழ்பெற்ற அணுகுமுறை தனிமனிதப் பொருளாதாரச் சுதந்திரத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது .


ஏற்கனவே அவர் கையில்  Joseph Murphy இன் How to unleash the power of subconscious mind என்ற நூலை வைத்திருந்தார்.


 மல்லிகார்ச்சுனனுக்கு இறையுதிர் காட்டைப் பரிந்துரைத்திருந்தேன் .இரண்டு தொகுதிகளையும் உடனே வாங்கியிருந்தார்.


 தேசாந்திரிப் பதிப்பக அரங்கில் வெகு நேரம் வாய்பிளந்து நின்றிருந்தேன். என்ன மனுசனோ இந்த எஸ். ராமகிருஷ்ணன் .....அத்தனை நூறு புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். நமக்கெல்லாம் நாள்தோறும் வாசிப்புக்கென 2 மணி நேரம் ஒதுக்கவே திணற வேண்டி இருக்கிறது .ஆனால் அவரெல்லாம் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது எழுதுவதற்கே செலவிடுவார் எனக் கணிக்கிறேன். அசுரத்தனமான உழைப்பும் வற்றாத சிந்தனையூற்றும் வாய்த்தவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். இதற்குப் பிறகு அடுத்த முறை எங்காவது எழுத்தாளர் என அறிமுகப்படுத்தப்பட நேர்ந்தால் சற்றுக் கூச்சமாகத்தான் இருக்கும் .


எனது பட்டியலில் இருந்தவற்றுள் இரண்டு நூல்கள் மட்டும் கிடைக்கவில்லை. Journey of a civilization: Indus to Vaigai  இன் தமிழ்ப்பதிப்பு மட்டுமே கிடைக்கிறது.  ஆங்கிலப் பதிப்பு அச்சில இல்லை என்றார்கள் . அடுத்த பதிப்பு வெளியாகும் போது சொல்வதாகச் சொன்னார்கள்.  அதேபோல கணியன் பாலனின் சங்ககாலச் சமுதாயமும் செவ்வியல் தமிழும் விரைவில் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.


எனது விருப்பத்துக்குரிய எழுத்தாளர்களுள் ஒருவரும் எனது முதல் நூலுக்கே அணிந்துரை நல்கியவருமான திரு. நாஞ்சில்நாடன் அவர்கள் தலைமையில்

யாவரும் பதிப்பகத்தினர் ஒரே நேரத்தில் 9 எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

இவ்வாண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்ததில் நிறைவேற்பட்டது .மற்றபடி இதமான குளுங்காற்றுடனும், சூடான தேநீருடனும் இவ்வாண்டுப் புத்தகத் திருவிழா இனிதே அமைந்தது.

Comments

  1. அருமை

    ReplyDelete
  2. நன்றிங்க சார் புத்தகங்கள் வாசிக்கிற முறையும் புத்தகங்கள் படிக்கிறதுனால ஏற்படும் நன்மைகளையும் நீங்க தெளிவாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. எனக்கு உங்கள் பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.
    மீண்டும் நீங்கள் எழுத ஆரம்பிக்கலாமே , நாஞ்சில் நாடன்
    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.

    ReplyDelete
  4. புத்தகங்கள் சங்கமமான இடத்தில்,நீ சங்கமமாகி நூல்கள் பெயர், நூலாசிரியர் பெயர்களை அருவிகளாகக் கொட்டி, இங்கிலீஷ் புத்தகத்துக்கு தமிழாக்கம் இல்லை, எனும் உன் குறைபாடு புல்லரிக்க வைத்தது தம்பி ரஜினி! ஏனெனில் ஆங்கிலத்திலேயே புலமை பெற்றவர் நீ..இருந்தும் அன்னை தமிழ் தாய் மொழிக்காக ஏங்கியது ,உனக்கு என் சல்யூட்!! அன்பு பாசம் நேசம் பழக்கம் காதல் பண்பு பிணைப்பு இத்தனையும் வார்த்தைகள் வேறு.அர்த்தம் ஒன்றே! அதுதான் தமிழ்!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படிக்கு
      மகரஜோதி கணேசன் பல்லடம் & திம்மநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

      Delete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?