இயக்குநர் -இயக்குனர் எது சரி...?

 அண்மையில் சகோதரி ஒருவருக்கு ஏற்பட்ட ஐயம் இது.


 இயக்குநர் -இயக்குனர் எது சரி...?


பலரிடத்தும் இந்தக் கேள்வி இருக்கும்.


சொற்களின் இடையில் 'ந' என்னும் எழுத்து வருவது அரிது என்பதால் இயக்குனர் என்பதே சரி எனப்‌பலரும் எண்ணுவர். ஆனால் இயக்குநர் என்பதே‌ சரி.


இயக்குநர் - இயக்குனர் மட்டுமல்ல,

 ஓட்டுனர் -ஓட்டுநர் 

அனுப்புநர் - அனுப்புனர் 

பெறுநர்- பெறுனர்....

 எனப் பல இடங்களில் இந்த ஐயம் பொதுவாக எல்லோருக்கும் அவ்வப்பொழுது எழுவதுண்டு.


 'நர்' , 'ஞர்', 'னர்'   என்ற மூன்று விகுதிகளும் எங்கெங்கு வரும் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.


'நர்'


 உகரத்தில் முடியும் வினைச்சொல்லை அடுத்து 'நர்' விகுதி வரும்.

 எடுத்துக்காட்டு:


 ஓட்டுநர்

 இயக்குநர் 

அனுப்புநர் 

பெறுநர் 

விடுநர் 


இங்கு ஓட்டு, இயக்கு,அனுப்பு,பெறு,விடு  ஆகிய சொற்கள் யாவும் கட்டளைப்பொருளில் ஏவலாக வரக்கூடிய  உகரத்தில் முடிந்த வினைச்சொற்கள். இவை போன்ற சொற்கள் எங்கு வந்தாலும் அங்கு நாம் 'நர்' விகுதியைப் பயன்படுத்துகிறோம்.


வல்லுநர் ,ஒல்லுநர் போன்ற சொற்களில் ஏவலாக வரக்கூடிய சொற்கள் இல்லையெனினும் உகரத்தில் முடிவது கொண்டு 'நர்' விகுதி ஒட்டுகிறது.


"இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து " என்ற திருக்குறளில் களை என்பது வினைச்சொல்லெனினும் உகரம் சேர்த்து 'நர்' விகுதியால் முடிகிறது. 


 பெயர்ச்சொற்களாக இருந்தால்‌ பின்னொட்டாக 'ஞர்' விகுதி வரும்.


எடுத்துக்காட்டு:

கலைஞர் 

கவிஞர் 

அறிஞர் 

வலைஞர்

உரைஞர்

பொறிஞர்

கைவினைஞர் போன்றவை .


கலை, கவி, அறி,வலை ஆகியவை பெயர்ச்சொற்கள். கலை , அறி,உரை ,பொறி ஆகியவை வினைச்சொற்களாகவும் வரும் . இவ்விடத்துப்‌ பெயர்ச்சொற்கள்.


வழக்குரைஞர் , வழக்கறிஞர் ஆகிய சொற்களை கவனித்துப் பார்க்கலாம்.


'னர்'  விகுதி  எங்கு வரும் ?


பெயர்ச்சொல்லோடு 'இ'வரின்,  அதாவது இன் +அர் என்று வரும்பொழுது 'னர்' விகுதியைச் சேர்ப்போம்.


 சான்று:

உறுப்பினர்

அவையினர் 

அணியினர் 

படையினர் போன்ற இடங்கள்.


உறுப்பு, அவை,‌அணி ,படை ஆகியவற்றுடன் இன் + அர் என்பதுடன் 'னர்' விகுதி சேருகிறது.

உண்மையில் அஃது 'அர்' விகுதி. 


இதற்கான விதிகள் எதுவும் இலக்கண நூல்களில் தரப்படவில்லை எனினும் தொன்று தொட்டுத் தமிழில் இதுவே வழக்கமாக இருந்து வருகிறது .


 திரு .என்.சொக்கன்  அவர்களின் ஆய்வின்படி 38 இடங்களில் 'நர்' விகுதியைக் கம்பர் தனது கம்பராமாயணத்தில்   பயன்படுத்துகிறார். 


செறுநர்

பொருநர்

ஆடுநர்

பாடுநர் எனப் பட்டியல் நீள்கிறது. 


சான்றுக்கு ஒரு பாடல் தருகிறேன்....


"வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்

றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்             

உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்            

வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"  - கம்பராமாயணம் (பாலகாண்டம் - நாட்டுப்படலம்). 


கோசலநாட்டில் வள்ளல்தன்மை இல்லை, உண்மையில்லை, வலிமை இல்லை, வெண்மையில்லை என வஞ்சப் புகழ்ச்சியால் அந்நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் கம்பனின் கவித்திறத்தை வியக்கத்  தனியொரு பதிவு தேவை . பிறகொரு நாளில் அங்கு செல்வோம் .  இப்போதைக்கு இப்பாடலில் வரும் "செறுநர்" என்ற சொல்லை மட்டும் நோக்கிக் கடந்து செல்வோம். 


எள்ளினின்றும் எண்ணெய் எடுபடுவது போல இலக்கியத்தினின்றும் எடுபடுவது  இலக்கணமாகும்.

 எனவே இலக்கியங்களில் எவ்வாறு சொற்கள்‌ எடுத்தாளப்பட்டுள்ளன எனப் பார்த்து நாம்‌ நிறையக் கற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி