இப்படியும் பஸ் ஓட்டலாமா...?

 தேனியில் இருந்து குமுளிக்கு நான் மேற்கண்ட பேருந்துப் பயணங்கள் எல்லாமே பொறுமையைச் சோதிக்கும் விதத்திலேயே இதுவரை அமைந்திருக்கின்றன.


பெரும்பாலும் உருட்டு உருட்டு என்று உருட்டியபடியே நிறுத்தி நிதானமாக ஆடி அசைந்து குமுளியில் கொண்டு போய் விடுகிறார்கள். 


 மூன்று பக்கமும் பனி மூடிய மேற்குத் தொடர்ச்சி மலைகளும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளுமாகக் கண்களுக்கு இதமாக இருந்தாலும் பேருந்தின் மிக நிதானமான போக்கு ஒருவித அலுப்பைத் தந்துவிடுகிறது.


 சென்ற வாரம் மீண்டும் சென்றிருந்தபோது இம்முறை நமது கட்டத்தைச் சோதித்துக் கொள்ளலாம் எனத் தேனியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது குமுளி என்ற பெயர்ப் பலகையைத் தாங்கியபடி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது.  


தேர் வலம் வருவது போல மிகப் பொறுமையாக வந்து நின்றது. ஆரம்பமே எனக்கு உணர்த்திவிட்டது.


 ஏறி அமர்கையில் ஓட்டுநர் கழிப்பிடம் சென்று திரும்பி வந்து நிதானமாக ஏறிக் கதவடைத்துப் பொறுமையாக வண்டியைக் கிளப்பினார்.


 அடுத்து நிகழ்ந்தவை எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள்.


 பழைய பேருந்து நிலையம் வருவதற்குள்ளாகப் 15 முறை ஹார்ன் அடித்துப் 15 நிமிடங்கள் கழிந்திருந்தன. சரி, நகருக்குள் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓட்டுனர் நிதானமாகப் போகிறார் என நான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவருடைய முழியே சரியில்லை. 


 தேனி நகரை விட்டு வெளியே வந்தாலும் ஹார்னில் இருந்து அவர் கையை எடுக்கவே இல்லை.  ஆக்ஸிலரேட்டர் என நினைத்து ஹார்னை அழுத்திக் கொண்டிருக்கிறாரோ எனக் குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.


 சில இடங்களில் ஹாரன் அடிப்பதைப் பார்த்து ஆர்வம்  தாங்காமல் எழுந்து முன்புறக் கண்ணாடி வழியே பார்த்தேன் . சுமாராக ஒரு 75 மீட்டர் தொலைவில் ஒரே ஒரு டூவீலர் (நம்புங்கள் ....ஒரே ஒரு டூவீலர் மட்டும்) போய்க் கொண்டிருந்தது .அந்த இடத்தில் மருந்துக்குக் கூட  ஹார்ன் அடிக்க வேண்டியதில்லை .ஆனாலும் அடித்துக் கொண்டிருந்தார்.


 சின்னமனூர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்ததும் இம்முறை நடத்துனருக்கு இயற்கையின் அழைப்பு வந்திருந்தது. கழிப்பிடம் சென்று விட்டு வரும் வழியில் எதனையோ வாங்கி வாயிலிட்டுக் கொறித்த படி மெதுவாக வந்து சேர்ந்தார் .



உத்தமபாளையத்துக்குள் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து ஒருவழியாகக்

கம்பம் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கிப் போய் டீயையும் வடையையும் ஒரு கை பார்த்துவிட்டு போனால் போகிறது என்று மீண்டும் வந்து பேருந்தை எடுத்தனர் .


தேனியில் ஏறியதில் இருந்து ஓட்டுனரும் நடத்துனரும் அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை .....பேசிக்கொண்டே வந்தவர்கள் கம்பத்தில் டீ குடிக்கும் போது வெகு தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  இடையில் சின்னமனூரில் நடத்துனர் கழிப்பிடம் சென்று வந்த இடைவெளியில் மட்டும் தான் இருவரும் பேசிக் கொள்ளவில்லை .என்னதான் பேசினாலும் ஹார்னடிப்பதை மட்டும் டிரைவர் மறக்கவில்லை. சாலையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து ஹார்ன் கொடுத்தபடி வந்தவர் கியரை மட்டும் மூன்றில் இருந்து நான்குக்கு மாற்ற வேண்டும் என்பதையே மறந்து தொலைத்திருந்தார்.


 கூடலூர் பேருந்து நிலையத்துக்கு முன்பு எதற்காகப் பத்து நிமிடங்கள் பேருந்தை நிறுத்தி வைத்திருந்தார்கள் என இன்று வரை எனக்குப் புரியவே இல்லை. நாகர்கோவிலில் இருந்து வரும் பேருந்து அது. எனது கணிப்பு சரியாக இருந்தால் நாகர்கோவிலில் இருந்து இவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு புறப்பட்டிருக்க வேண்டும் .அவ்வளவு பொறுமை, நிதானம்.


ஒரு கட்டத்தில் நம்முடன் இன்னும் 40 பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே மறந்து விட்டிருந்தது போலப் பேசிக்கொண்டே வந்தவர்கள் லோயர் கேம்புக்கு முன்பு சாலையோரம் இருந்த ஒரு சிறிய பழக்கடையில் நிறுத்தினார். பப்பாளி ,திராட்சை, வாழைப்பழம் , கொய்யா எனப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்து பேக் செய்து தரச் சொல்லிப் பேரம் பேசிப் பணம் கொடுத்து இளநீர் குடித்து முடித்தார் டிரைவர் ‌. அதன் பிறகு நடத்துனருக்கும் வாங்க வேண்டும் என்று ஆர்வம் பிறந்து மேற்சொன்ன ப்ராசஸ்  மீண்டும் நடந்தது .தேனியில் இருந்து லோயர் கேம்ப்புக்குள் எங்களை ஆறு பேருந்துகள் முந்திச் சென்றிருந்தன.  பேருந்துக்குள் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக காதில் புகை வர ஆரம்பிக்கும் போது திடீரென நினைவு வந்தவர்களாக ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்துக்குள் வந்து ஒரு வழியாக வண்டியைக் கிளப்பினர் .


இவர்கள் இருவரும் ஓர் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பைக்கிலோ காரிலோ ஒரு லாங்-ட்ரைவ்  இதுபோலப் பேசிய படியே சென்று வரலாமே  என எனக்கு ஓர் ஐடியா தோன்றியது. குமுளியில் இறங்கும்போது அவர்களிடம் இந்த ஐடியாவைச் சொல்லிவிடலாம் என நினைத்திருந்தேன்.  


குமுளி வந்து சேர்ந்து எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.  ஐடியாவைச் சொல்லலாம் என  முன்னே நகர்ந்தேன். சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் என்னைத்  திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.


இனிமேல் நடத்துநர் இருக்கை கடைசி வரிசையில் இருக்கும் பேருந்தாகப் பார்த்து ஏற வேண்டும் என முடிவு செய்தபடியே இறங்கித் தொலைத்தேன் .


தேனிக்கு குமுளிக்கும் 66 கிலோ மீட்டர் தொலைவு. ஆட்டோவில் வந்திருந்தால் கூட இரண்டு மணி நேரத்தில் வந்திருப்பேன்.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?