வகையுளி

 அண்மையில் நண்பர் மல்லிகார்ச்சுனன் எனது நூலிலுள்ள செய்யுள்கள் ஒன்றிலிருந்து ஓர் ஐயம் கேட்டார்.


" சில அடிகளில் சொற்கள் பாதியாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முன்னுள்ள சொல்லின் பின்னும் மறுபகுதி அடுத்து வரும் சொல்லின் முன்னும் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே.... ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.....?" என்பது அவரது கேள்வி. 


'வகையுளி'யைப்‌ பற்றிக் கேட்கிறார் என்பது புரிந்தது.


 பள்ளி நாட்களில் செய்யுள் பகுதிகளைப் படிக்கும் பொழுது எனக்கும் இக்கேள்வி எழுந்ததுண்டு.  ஒன்பதாம் வகுப்பில் யாப்பிலக்கணம் கற்கும் பொழுது எனக்குத் தெளிவானது.


 இதுகுறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பலரும் கேட்டிருப்பர் .


ஒருவன் கடையின் பெயர்ப் பலகையின் முன்பு நின்று கொண்டு ,

"இங்கு ,      சாப்பா     டுபோ     டப்ப    டும்"  எனப் படித்துக் கொண்டிருந்தான்.


 கூர்ந்து கவனித்த பொழுது  "சாப்பாடு போடப் படும்"  என்பதைத்தான் அவன் அவ்வாறு படித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.


 இதுவே செய்யுளில் வரும்பொழுது வகையுளி எனப்படுகிறது .


சான்று:

" மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்"

-திருக்குறள்.

அதிகாரம் :1

குறள் :3


 இக்குறளில் நீடு வாழ்வார் என்பதற்கு நீண்ட நாள் வாழ்வார் என்பது பொருள். 


அதை, நீடு வாழ்வார் என எழுதாமல்

 நீடுவாழ் வார் என ஏன் இயல்புக்கு மாறாகப் பிரித்து எழுத வேண்டும்....? 


தெரிந்து கொள்வோம்.....!


 திருக்குறட்பாக்கள் அனைத்தும் வெண்பாவால் ஆனவை. வெண்பாவில் குறள் வெண்பா என்ற வகையைச் சேர்ந்தவை.


 'மாமுன் நிரையும், விளமுன் நேரும்' வர வேண்டும் என்பது வெண்பாவின் இலக்கணங்களுள் ஒன்று.


 இங்கு, 'நீடு வாழ்வார்' எனச் சீர்களை அமைத்தால், 

 நீடு - நேர்நேர்- தேமா 

வாழ்வார் - நேர்- நேர் தேமா என அமைந்து, 'மாமுன் நேர்வந்து' வெண்பாவுக்குரிய வெண்டளை கெட்டு, ஆசிரியப்பாவுக்குரிய நேரொன்றாசிரியத்தளையாகி, வெண்பாவுக்குரிய செப்பலோசையும் சிதைந்து விடும்.


 சர்க்கரைப் பொங்கலில் கை நிறைய மிளகுகளையும் ,மிளகாய்வற்றலையும் அள்ளிப்போட்டுச் சமைப்பதற்கு ஒப்பானது இது .


அதுவே 'நீடுவாழ் வார்' எனப் பிரிக்கும்போது, 

நீடுவாழ்- நேர்நிரை- கூவிளம்,

வார்- நேர்- நாள்

என அமைந்து வெண்பாவுக்குரிய விளமுன் நேர் மற்றும் நாள் வாய்பாடு பெற்று சீரிய செப்பலோசையும் சேரும். 

அடுத்து, வெண்பாவின் ஈற்றுச் சீர் (இறுதிச்சீர் )நாள், மலர், காசு ,பிறப்பு எனும் நான்கனில் ஒன்றை மட்டுமே பெற்று வர வேண்டும் என்பதும் விதி. 


வாழ்வார் என்று இறுதிச் சொல் அமைந்தால் நேர் நேர்- தேமா என அமைந்து வெண்பா இலக்கணம் கெடும்.


 வார் எனத் தனியே பிரிக்கும்போது ,நாள் எனும் வாய்ப்பாடு ( வார்- நேர்- நாள்) என அமைந்து வெண்பா முழுமையுறும் .


2+2=4 என்பதைப் போன்றது தான் தமிழ் யாப்பிலக்கண விதிகள்.

 2+2  என்பதற்கு 4 ஐத் தவிர வேறு எதுவும் விடையாக அமையவே முடியாது .அதுபோலவே தான் யாப்பிலக்கணமும்.


மாறினால் ஓசைகெட்டு அலங்கோலமாகிவிடும்.


 வெண்பாவுக்கு இவைபோல இன்னும் சில விதிகளும் அழகுகளும் உண்டு. அது போலவே ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மருட்பா எனப் பலவகைப் பாக்களுக்கும் ,அவற்றின் உள்வகைகளுக்கும் ,பாக்களின் இனங்களுக்கும் அவற்றின் உள் வகைகளுக்கும் இலக்கணங்கள் உண்டு. 


வகையுளி இலக்கண முறைப்படி தேவையானது ;சரியானதும் கூட ...!

ஆனாலும் அதை முடிந்த அளவு தவிர்க்கவே பெருங்கவிகள் விரும்புவர்.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?