Posts

Showing posts from June, 2022

அழகுத் தமிழ்ப் பெயர் சூடிய எழில் கொஞ்சும் இடங்கள் ....

பாலொழுகும் பாற: கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கோட்டயம் மாவட்ட எல்லையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான வாகமனில் உள்ள ஓர் அருவி தான் பாலொழுகும் பாறை. பெயருக்கேற்றவாறு பால்போல நீர் ஒழுகும் இவ்வருவிக்குச் செல்லும் சாலையே மனதை மயக்கும் வண்ணம் இருக்கும். மலைச்சரிவுகளில் கொட்டிக் கொண்டிருக்கும் இவ்வருவியில் குளிக்க முடியாது. தொலைவிலிருந்து கண்டுகளிக்கலாம். பால் ஒழுகும் பாறை என்றாலும் பால் பொழியும் பாறை என்று சொல்வதுதான் பொருத்தமென்பது போல வெண்ணிறத்தில் பிரும்மாண்டமாய் நிற்கிறது இந்த அருவி. பெருந்தேனருவி : பத்தனம்திட்ட மாவட்டத்தில் சபரிமலைப் பகுதியிலுள்ள எழில் வாய்ந்த ஓர் அருவி பெருந்தேனருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அழகுற வீற்றிருக்கும் பெருந்தேனருவியில் இருந்து கொட்டும் நீர் பம்பை ஆற்றில் கலக்கிறது. இலவீழாப்பூஞ்சிற: கோட்டையம் மாவட்டத்தில் உள்ள இச் சுற்றுலாத்தலம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் உன்னதமான அழகு மிகுந்த இடமாகும். இலைகள் விழாத, பூக்களால் ஆன ஏரி அல்லது அணை என்பது இதன் பொருளாகும். மிக உயரமான மலைப்பகுதியிலுள்ள இவ்வணையைச் சுற்றியுள்ள மரங்களிலிருந்து வீழும் இலைக...

ஏன் நள்ளென் கங்குல்....!

எனது வலைப்பூவுக்கு நள்ளென் கங்குல் என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்தது பற்றி நண்பர்கள் சிலர் அவ்வப்பொழுது கேட்பார்கள். "நள்ளென் கங்குல்" என்ற சொற்றொடர்ப் பயன்பாடு சங்க இலக்கியங்களில் , குறிப்பாக எட்டுத்தொகை நூல்களில் அதிகமாகக் காணப்படும். நள்ளென் யாமம் என்ற தொடரையும் அதிகம் காணலாம். இரண்டுமே ஒரே பொருள் தருபவை தாம். எளிமையாகச் சொல்வதென்றால் நள்ளிரவு என்பது இவற்றின் பொருள். நள்ளென் யாமம் என்ற தலைப்பை ஏற்கனவே எனது ஆதர்ச எழுத்தாளர் சிவக்குமார்‌ 'நள்ளெண் யாமம்' எனச் சற்றே மாற்றி எடுத்துக் கொண்டு விட்டதால் 'நள்ளென் கங்குல்' என்ற சொற்களை நான் எடுத்துக்கொண்டேன். தமிழில் நள் என்பது நடு என்பதையும், செறிவுற்ற என்பதையும் நள்ளென் கங்குல் என்பது இருளையும், இரவையும் குறிக்கும். பள்ளி நாள்களில் இருந்து சுவையான சங்கப்பாடல்கள் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருக்கும். அவற்றுள் ஒன்றுதான் 'நள்ளென் கங்குல் என்ற பதப் பயன்பாடு. சான்றுக்குச் சில பகிர்கிறேன்.... நள்ளிரவு நேரத்தில் மலைநாட்டு முள்ளூர்க் காட்டிலுள்ள நறுமணம் வீசும் மலர்களைச் சூடித் தலை...

குமரகம் - ஆலப்புழ சொகுசுப் படகுவீடு

 ஒரு முறையாவது சென்று வந்தே தீர வேண்டும் என்பதில் கோவாவுக்கு அடுத்தபடியாகக் குமரகம் ஹவுஸ் போட் (kumarakom-houseboat ) பெரும்பாலானோரின் பட்டியலில் இருக்கும். இதற்கு முன்பு இரண்டு முறையும் சுள்ளென்ற வெயில் காலத்தில் போய் வந்ததால், இம்முறை அருமை அண்ணன் லட்சுமணசாமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மழைக்காலத்துக்  காலையொன்றில் வேம்பநாட்டு ஏரியை நோக்கி வண்டியைக் கிளப்பினோம். வேம்பநாடு ஏரி என்பது கேரள மாநிலத்தின் ஆலப்புழ, எர்ணாகுளம் , கோட்டயம் மாவட்டங்களில்  100 கிலோ மீட்டர் நீளத்திலும் 20 கிலோ மீட்டர் அகலத்திலும் பரந்து விரிந்து 5  கிலோ மீட்டர் தூரத்தில் கடலைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் பிரும்மாண்டமான ஏரி ஆகும். இவ்வேரியின் மேற்குக்கரையில் ஆலப்புழயும்  கிழக்குக் கரையில் குமரகமும் ஹவுஸ்போட்களுக்குப் புகழ்பெற்ற இடங்களாகும் . ஆலப்புழயானது இந்தியாவின் வெனிஸ் என்று  புகழப்படுகிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொதுப் போக்குவரத்துக்குப் படகுகளைப்  பயன்படுத்துகிறார்கள் . பஸ் ஸ்டாப்புகளை போலப் படகுகள் நின்று ஆள் இறக்கி ஏற்றிச் செல்லும் இடங்கள்  போட் ...

நப்பீட்டியா

இத்தலைப்பைப் படித்ததுமே நமீபியா, ஜாம்பியா போல ஏதோ ஆப்பிரிக்க நாடொன்றின் பெயர் எனவும். பாட்ரீஷியா, மக்டலீனா போலப் பெண்பால் பெயர் எனவும் நினைக்கத் தோன்றும். நம்புங்கள்.... இஃதொரு தமிழ்ச் சொல், நாற்பது நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டோரிடையே இன்னமும் கொங்குப் பகுதியில் புழங்கும் வட்டார வழக்கு இது. நிரப்பி விட்டாயா என்பதன் பேச்சுவழக்கு தான் "நப்பீட்டியா..... !" உதாரணம், குடுவையிலோ குடத்திலோ நீர் நிரப்பச் சென்றவரிடம் 'நப்பீட்டியா?' எனக் கேட்பது இன்னும் சிற்றூர்ப் பகுதிகளில் நிலவி வருகிறது . நெப்பீட்டியா என்று கேட்பவர்களும் உண்டு. "நிரப்பி விட்டாயா...?' என்பதை "நப்பீட்டியா...?" என்று கேட்பதைப் போல "நிரம்பி விட்டதா?" என்பதை "நம்பீருச்சா ?" என்கிறார்கள் . "நெம்பீருச்சா என்பவர்களும் உண்டு . தமிழகத்தின் நடு மற்றும் வட பகுதிகளில் "ரொப்பிட்டியா?' என்று இச்சொல் புழங்கி வருகிறது. ரொம்புதல் - நிரம்புதல் ரொப்புதல் - நிரப்புதல். நப்பீட்டியா, நப்பி வெய்யி, நப்பவே இல்ல , நப்பு ,நப்பாத , நெப்பீட்டியா,நெப்பி வெய்யி , நெப்பவே இல்ல...