வால்பாறை- மலக்கப்பாற- அதிரப்பள்ளி

சேருமிடம் முக்கியம் என்றாலும் பயணங்கள் தரும் பரவசம் அலாதியானது ஆர்ப்பரிக்கும் அழகு மிகுந்த அதிரப்பள்ளி அருவிக்கு வால்பாறை வழியே செல்ல வாய்ப்புக் கிடைத்தவர்கள் இதை முழுமையாக உணரலாம்.


ஜூன் ஜூலை மாதங்களில் வால்பாறை வழியே வருடத்துக்கு ஒருமுறை அதிரப்பள்ளி செல்வது வழக்கம். ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவ்வாண்டு பேறு வாய்த்தது.

அசாமி புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதுமே நான்கைந்து நாட்களாக மதியம் ஆனால் சுவிட்ச் போட்டதுபோல மழை வந்து விடுகிறது எனக் கேள்விப்பட்டதுமே வருகிற ஜூலை யில் திட்டமிட்டிருந்த ட்ரிப்பை சனிக்கிழமைக்கு பிரீபோன் செய்யலாம் என்று சடாரென முடிவெடுத்தோம்.

மழைச்சாரலில் அல்லது மழை பெய்து முடித்த இரண்டொரு நாட்களில் இவ்வழி செல்வது ஆகப்பெரும் இன்ப நிகழ்வாக இருக்கும்.

செவ்வாய்க் கிழமையே வால்பாறை நண்பர்கள் மழை பெய்து வருவதை உறுதி செய்தார்கள் . வலைத்தளங்களில் புதன்கிழமை சோதித்தபோது, சனிக்கிழமையன்று மழைக்கு 80% வாய்ப்பு என்றார்கள். அதுவே வியாழக்கிழமை 90% ஆகி ,வெள்ளி பிற்பகலில் செக் செய்தபோது 100% எனக் காட்டியது .Haze 80 சதவீதம் என வேறு குறிப்பிட்டுத் த்ரில்லைக் கூட்டினார்கள்.

சனிக்கிழமை அதிகாலையில் குளிரையும் இருளையும் கிழித்துக்கொண்டு குறுகுறுவென்ற மனதுடன் விடிந்தும் விடியாமலும் ஐந்தரை மணிக்கு ஆழியார் தாண்டிக் கவியருவி அருகில் யானைக் கூட்டத்தையும், ஒன்பதாம் வளைவில் வரையாடுகளையும் கண்டு இன்புற்று, கவரக்கல் பகுதியில் இரண்டு அடிக்கு முன்னால் நிற்பவர் கூடத் தெரியாத பனி மூட்டத்தில் மனம் சொக்கிக் காலார நடந்து மகிழ ,
மலப்புரத்திலிருந்து திருச்சூர் வழியாக சாலக்குடி, அதிரப்பள்ளி, வால்பாறை, பொள்ளாச்சி, பாலக்காடு மீண்டும் மலப்புரம் என ராயல் என்ஃபீல்ட் மீட்டியாரில் ரவுண்ட் ட்ரிப் வந்து, பனிப்பொழிவில் மெய்ம்மறந்து ஜென் நிலையில் நின்று கொண்டிருந்த இருவர் நமது மொபைலை வாங்கிப் புகைப்படங்களாகச் சுட்டுத்தள்ளி அன்பளித்தனர் .

வால்பாறையில் இட்லி, பூரி, தோசை,பொங்கல் வடை, ஆம்லெட் ,எனக் கலந்து கட்டி அடித்துச் சோலையாறு அணையை அடைந்த போது காலையில் மணி 10 ஆகியிருந்தது. மதகுகளுக்கு முன் நின்று பார்க்கும்போது 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் உச்சி கூடத் தெரியாத அளவுக்கு பனிப்புகை சூழ்ந்திருந்தது .


இந்தியாவில் ரோட் ட்ரிப் லவ்வர்ஸ் பெரும்பாலானோரின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மலக்கப்பாற - வாழச்சால் மலைச்சாலையில் இன்னும் அரை மணி நேரத்தில் காலடி வைத்து விடுவோம் என்ற குதூகலத்தில் இதமான கருந்தேநீர் தந்த உற்சாகத்தில் தமிழ்நாடு - கேரள எல்லையில் மலக்கப்பாற சோதனைச் சாவடியில் வண்டியை நிறுத்தினோம்.



அடுத்த ஐம்பத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவும் ஒரு கனவு போல இருக்கும்.இக்கனவினைப் பலமுறை கண்டிருந்தாலும் இம்முறையும் நெஞ்சம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

சோதனைச்சாவடியில் நமது விவரங்களை வாங்கிக்கொண்டு முழுவதுமாய்ச் சோதனையிட்டு அனுமதிச்சீட்டு வழங்குகிறார்கள். கட்டணம் கிடையாது. வாகனத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தையும் எண்ணி அனுமதிச் சீட்டில் குறித்து, வண்டி நுழையும் நேரத்தையும் 52 கிலோ மீட்டர் கடந்து வாழச்சால் செக்போஸ்டில் நாம் வெளியேற வேண்டிய நேரத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

வெளியேறும் இடத்தில் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கின்றனவா எனச் சோதித்து அனுப்புகிறார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் இரு முனைகளிலும் அனுமதி இல்லை.

வண்டியைக் கிளப்பியாயிற்று.

வெளியில் மழை பெய்கிறது.... இல்லை இல்லை.... சாரல் அடிக்கிறது.... நோ...... தூறல் போடுகிறது..... அதுவும் இல்லை.... மழை தூவுகிறது....... எப்படி அதை எழுத்தில் விளக்குவது எனத் தெரியவில்லை .... காரைவிட்டு இறங்கி நின்றால் நாங்கள் நனையவில்லை....அது போன்றதொரு பனிப்புகைக்கும்- மழைத்தூவலுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான பொழிவு அது.

ஆள் நடமாட்டமோ வீடுகளோ எதுவும் கிடையாது .இடையில் இறங்கி நிற்பதும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. காரை மெதுவாக இயக்கி வீடியோ போட்டோக்கள் எடுக்கலாம்.

அடர்ந்த காடுகளும், ஓங்கிய மலைகளும், ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், சலசலக்கும் ஓடைகளும் , வற்றாத ஆறுகளும், அழகழகான அருவிகளும், பிரித்தறிய இயலாத இன்னதென்று விளங்காத இனிய ஒலிகளும், பசிய மழைக்காட்டின் மயக்கும் நறுமணத்துடன் கலந்து மாறி மாறி வரும் விதவிதமான சூழலும், நிலவமைப்பும் பேரின்பம் என்பேன்.

அதிலும் அவ்வப்போது சிணுங்கலாகக் கொஞ்சும் மழைத்துளிகளும், செல்லமாக எட்டிப்பார்க்கும் சூரியக்கதிர்களும் இந்த ரம்மியமான சூழலில் சேரும்பொழுது விழிகள் இமைக்கும் இம்மியளவு நேரம்கூட இனிமையை உணர முடிகிறது. கண்களை மூடித் திறக்கும் அந்த ஒரு மாத்திரைக் கால அளவிலும் கூட அழகை அனுபவிக்க முடிகிறது.

லோயர் சோலையார் அணைக் காட்சி அப்பர் சோலையார் எனத் தொடர்ந்து முன்னேற அத்துவானக் காட்டில் அப்பர் சோலையார் மின்னேற்ற அணைப் பகுதிக்கு மேல் எழும்பிச் செல்லும் சாலையை மின் வேலியிட்டுப் பூட்டிக் காவலர் இருவர் காக்கின்றனர் .
அவர்களுக்கு மிக உறுதியான ஒரு கோபுரமும், உயரத்திக் அறையும் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. அந்த இடம் இரவில் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்வதே அலாதியாக இருக்கும். செல்பேசியில் ஆஃப்லைனில் பாட்டுக் கேட்கலாம். வேறு ஒரு டீவியேஷனும் கிடையாது. காவலர்கள் சுழற்சிமுறையில் பணியமர்த்தப் படுகிறார்கள். நிச்சயம் அவர்களது இரவுகள் வேறு வடிவத்திலும், நிறத்திலும் அடர்த்தியிலும் இருக்கும்.

குறுகலான சாலையென்பதால் சற்றுக் கவனத்துடன் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

வாழச்சால் செக்போஸ்ட்டுக்குச் சற்று முன்னர் புலியிலப்பாற என்ற இடம் வருகிறது . நீண்ட நேரம் கழித்து ஒரு சில மனிதர்களையும் ஒரு சில கட்டடங்களையும் பார்க்க முடிந்தது. பிற்பகல் இரண்டரை மணிக்கு புலியிலப்பாறயில் வழக்கமாக உண்ணும் ஹோம்லி மெஸ்ஸில் தஞ்சம் அடைந்தோம் .

கொழுகொழுத்த மட்டை அரிசிச் சோற்றில் மீன் குழம்பையும் மோர்க்குழம்பையும் ஊற்றிப் பிசைந்து, பொரித்த மீன் துண்டுகளையும், சுள்ளென்று உறைக்கும் ஊறுகாயையும், துவரனையும் தொட்டுக்கொண்டு உண்டு களித்தோம். திவ்யமான மதிய உணவு!

பத்து நிமிடங்களில் வாழச்சால் சோதனைச்சாவடியில் சோதனைகளை முடித்து வெளியேறி அங்குள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி டிக்கெட் வாங்கி வாழச்சால் அருவியைப் பார்க்க உள்ளே நுழைந்தோம்.

500 மீட்டர் நடந்ததும் பாய்ந்து தெறித்துக் கொண்டிருந்த சாலக்குடி ஆற்றின் ஓரமாக நீண்ட தொலைவுக்கு நடைபாதையும் , உறுதியான கம்பி வேலியும் ஆங்காங்கு ஓய்வெடுக்கும் இடமும் அமைத்திருக்கிறார்கள்.

சரிவான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு அருவியாக கொட்டித் தீர்த்து வேகமெடுக்கிறது .....பிரம்மாண்டமான அழகு.....!

மிகத் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். 4-5 பணியாளர்கள் இடைவிடாமல் கூட்டிப் பெருக்கிக்கொண்டே இருக்கிறார்கள். வனச்சரக அலுவலகத்தை மாளிகையைப் போலக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
சிற்றுண்டியகமும் உண்டு.

அங்கிருந்து ஐந்து கிலோமீட்டரில் இந்தியாவின் நயாகராக்களுள் ஒன்று எனப் புகழப்படும் அதிரப்பள்ளி அருவி அமைந்திருக்கிறது .வாழச்சாலில் வாங்கிய டிக்கெட்டே இங்கும் போதுமானது.

80 அடி உயரத்தில் ஏறத்தாழ 200 அடி அகலத்தில் ஆக்ரோஷமாக நுரைக்க நுரைக்கச் சலிப்பின்றிக் கொட்டி முழங்கிப் பிரவகித்துப் பாய்கிறது சாலக்குடியாறு. அதிரப்பள்ளி அருவியின் மேல்தளத்தில் குளித்து உய்யலாம் . நடக்க முடியாதவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என நுழைவாயிலிலேயே அமர்ந்து கொள்வது நலம்.

முன்பொருமுறை அதிரப்பள்ளிக்கு முதல்முறையாக என்னுடன் வந்தவர் அருவியில் குளித்தே தீருவேன் என வீட்டிலிருந்தே துண்டு, ஷார்ட்ஸ் என எடுத்துக் கையில் மூட்டை கட்டிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே வந்தார்.
மேலுள்ள ஆற்றில் குளிக்கலாம் ஆனால் கீழிறங்கி அருவியில் குளிக்க முடியாது...பார்க்க மட்டுமே முடியும் என எவ்வளவோ அவருக்குப் புளியிட்டு விளக்கியும் புரிந்துகொள்ளவில்லை அவர்.
அதெப்படி அருவியில் குளிக்க முடியாமல் போகும் என ஆர்கியூ செய்து கொண்டே வந்தவர் மேலிருந்து கீழே இறங்கி அருகில் போய்ப் பார்த்ததும் வெட்கத்தில் ஒரு சிரிப்புச் சிரித்தார் பாருங்கள்.... இப்பிறவியில் மறக்க இயலாது...!

பார்வையிட அதிரப்பள்ளிக்கடுத்து தும்பூர்முழி, ஏழாட்டுமுகம் என இரண்டு அற்புதமான இடங்கள் இருக்கின்றன. அதிரப்பள்ளிக்கு முன்பு பெரிங்கல்குத்து என்றோர் இடம் இருக்கிறது . ஏராளமான ரிசார்ட்டுகள் எல்லா விலைகளிலும் கிடைக்கின்றன.

திரும்ப வரும்போது 30 கிலோ மீட்டரில் சாலக்குடியை அடைந்து அங்கிருந்து மூன்று மணி நேரத்தில் நான்கு வழிச் சாலையில் கோயம்புத்தூரை அடைந்துவிடலாம் .

வாய்ப்பு இருப்பவர்கள் பயணித்துப் பாருங்கள்.... வாழ்வின் பொருள் உணர்வீர்கள்...! கடவுளுக்கோ இயற்கைக்கோ உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நன்றி பகல்வீர்கள்....!!

கோழிக்கோடு -சுல்தான் பத்தேரி, மங்களூர் -கொச்சி,
மூணார் -தேக்கடி
கொச்சி- மூணார்
பத்தனம்திட்ட- தேக்கடி
தேக்கடி - ஆலப்புழ என இன்னும் ரோட்- ட்ரிப் பிரியர்களுக்கு க்யூட் ரோடுகள் இருக்கின்றன. அடுத்த பதிவுகளில் அறிமுகப்படுத்துகிறேன் .

அடங்காத ஆர்வத்துடன் பயணித்து,
மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள்
திரு. கணேசன்,
திரு. முகமது ரஃபி,
திரு .ஜான் போஸ்கோ
ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....!

அன்புடன்,
ரஜினி பிரதாப் சிங்.

படங்கள் மற்றும் காணொளிகள் விரைவில் இன்ஸ்டா மற்றும் யூட்யூபில் பகிரப்படும்.

Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?