Silent Valley - சைலண்ட் வேலி - ஆர்ப்பரிக்கும் அமைதி

கோயம்புத்தூரில் இருந்து எட்டிப் பிடிக்கும் தூரத்தில் அமைந்துள்ள சைலன்ட் வேலி (Silent Valley) யில் இயற்கையின் பிரமாண்டத்தைத் திகட்டத் திகட்ட அனுபவிக்கலாம். விடுவோமா நாம்....
வானம் இளமழையைத் தூவிக்கொண்டிருந்த விடிகாலை ஒன்றில் வண்டியைக் கிளப்பினோம்.

கோவையிலிருந்து தடாகம் சாலையில் மாநகராட்சி எல்லை முடிந்து புறநகர்ப் பகுதி கடந்ததும் V வடிவத்தில் விரிந்து கிடந்த மலைத் தொடர்களுக்கு நடுவில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் சூழப் பயணிக்க,மாங்கரை செக்போஸ்ட் வருகிறது. அதனைக் கடந்ததுமே மலைச்சாலை தொடங்கிவிடுகிறது.பசுமை சூழ வளைந்து செல்லும் சாலையில் காற்றின் புத்துணர்ச்சியை நுகர்ந்து கொண்டே செல்ல வழியில் உலகப் புகழ்பெற்ற சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Salim Ali International Ornithology Center ) மலைச் சாலையில் இருந்து விலகி உள்ளடங்கிப் பெருமிதத்துடன் நிற்கிறது.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அலுவல் நிமித்தமாக ஒருமுறை அடியேனுக்கு உள்ளே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது .வேறோர் உலகத்தில் இருந்தது போலத் தோன்றிய புதுமையான அனுபவம் அது.

15 நிமிடங்களில் ஆனைகட்டியை அடைகிறோம். தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மலைவனச் சிற்றூர்களுக்கு இது தான் டவுன். இங்கிருந்து அந்தப்புறம் மன்னார்க்காடு மற்றும் பாலக்காட்டுக்கும் இந்தப்புறம் கோவை காந்திபுரத்துக்கும் தொடர்ச்சியான பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது. மலைகளின் ஊடாகப் பயணிக்க அடுத்தடுத்து கோட்டத்துறை,அகளி,தாவளம் ,கல்கண்டி என்ற ஊர்களைக் கடக்கிறோம் .
சாலையின் வலப்புறமாக
நீலகிரி மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கிண்ணக்கோரை ,இரியசீகைப்‌ பகுதிகளை இங்கிருந்து பார்க்க முடிகிறது.
சென்ற அவலாஞ்சி- மஞ்சூர்ப் பயணத்தில் நள்ளிரவு சஃபாரியில் கிண்ணக்கோரைப் பகுதியிலிருந்து வெளிச்சப் புள்ளிகளாக இப்பொழுது நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இடங்களைப் பார்த்து வியந்தது நினைவுக்கு வருகிறது .
காரமடையில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளிகூர் வழியாகவும் இந்த இடத்துக்கு வர முடியும் .வனத் துறையின் அனுமதியுடன் வார இறுதிகளில் பிற்பகலில் பவானி ஆற்றங்கரைகளில் லஞ்ச் கட்டிக் கொண்டு வந்து உண்டு களித்துக் குளித்துச் செல்லும் கோவை வாசிகள் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்.
அத்திக்கடவு அணையிலிருந்து கூடபட்டி என்ற அதியற்புத வனச்சிற்றூரின் வழியாகவும் கோட்டைத்துறைக்கு வர முடியும். ஓர் அழகிய ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது சிற்றோடை யின் குறுக்கே ஒவ்வொரு சக்கரமாகத் தூக்கிவைத்துக் கடந்து சென்றதும், கூடபட்டியில் பவானி ஆற்றை நோக்கிச் செல்லத் திரும்புகையில் இரண்டு மூதாட்டிகள் ஓடிவந்து யானைகள் கூட்டமாக நிற்பது குறித்து எச்சரித்துத் திருப்பி அனுப்பியதும் நீங்காத நினைவுகள்.

நிற்க ....கோட்டைத்துறையில் காலை உணவை முடித்து விடலாம் எனக் காரை நிறுத்துகிறோம். வெண் அப்பங்களும்,நூலப்பங்களும், மீன்- கோழி- கடலை- முட்டைக் கறிகளுமாகக் காலைச் சிற்றுண்டி கனஜோராக நிறைவுறுகிறது. சிற்றுண்டி என்பது பிழை ....பேருண்டி எனலே பொருந்தும் .

சிறுவாணி நீர் குறுக்கிடும் பாலத்தில்‌ சில செல்ஃபிகளுடன் அட்டப்பாடி மலை வனப்பகுதியில் முக்காலி என்ற இடத்தை அடைகிறோம்.
கோவை -ஆனைகட்டி- மன்னார்க்காடு- கோழிக்கோடு நெடுஞ்சாலையில் உள்ள முக்காலி என்ற இந்த இடத்தில்தான் வலப்புறமாக சைலன்ட் வேலி செல்லும் பாதை பிரிகிறது . சைலன்ட் வேலிக்குள் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். தொலைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் .மிகக் குறைந்த அளவே பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள்.காலை 08:30 மணியிலிருந்து நண்பகல் 01:00 மணி வரைதான் அனுமதி .அதற்குப் பிறகு உள்ளே சென்றால் இருட்டுவதற்குள் வெளியேற இயலாது என்பதால் அனுமதி கிடையாது.

மெயின் ரோட்டில் இருந்து வலப்புறமாகத் திரும்புகிறோம். வனத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி உள்ளது .இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ளடங்கிய மலைச்சாலையில் வனத்துறையின் ஜீப் மூலம் சைலன்ட் வேலியை அடையலாம்.
ஐந்து பேருக்கு 3250 ரூபாய் கட்டணம். கைடும் டிரைவருமான ஒருவர் நம்முடன் வருகிறார். 50 கிலோ மீட்டர் தூரமும் ஐந்தாறு மணி நேரமும் ஆகும் என்பதை விட வேறு மனித நடமாட்டம் என்பது அரிதாக த்தான் இருக்கும் என்பதுதான் இங்கு ஹைலைட்..அதுவும் நம்மைப் போல வரும் பார்வையாளர்கள் தவிர வேறு யாரையும் அங்கு பார்க்க முடியாது .பார்வையாளர்களும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 பேர்கள்தான் வருவார்கள். எனவே ,குடிநீர், ஸ்னாக்ஸ் போன்றவற்றை முக்காலியிலேயே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. 5 பேர் அமரக்கூடிய ஜீப்புகளும் , 15 பேர் குழுவாக வந்தால் செல்ல இரண்டு மினி பஸ்களுமாக வாகன வசதி உள்ளது.

ஜீப்பில் ஏறிக் கிளம்பியதுமே செக்போஸ்ட் வருகிறது. அதிலிருந்து உள்ளே கரடுமுரடான சாலையில் காட்டைக் கிழித்துக்கொண்டு மலைச்சாலையில் நம்மைச் சுமந்து செல்கிறது ஜீப்‌. பசுமைச்செறிவு காற்றில் கூடக் கலந்துள்ளது போன்றதொரு பிரமை ஏற்படுவது உண்மை .
பழங்குடியினருக்கான ஏற்படுத்தப்பட்ட செட்டில்மென்ட் பகுதியும் அவர்களுக்கான காபி எஸ்டேட்டும் தாண்டிய பிறகு பெயர் தெரியாத பல விதமான மரங்கள், செடிகள், கொடிகள் வழியெங்கும் அடர்ந்து கிடக்கின்றன. அடுத்த ஒன்றரை மணிநேரம் எங்கும் நிறுத்தவில்லை. வனவிலங்கு நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் 360 டிகிரி கோணத்திலும் கவனமாகக் கண்கணித்தபடியே ஓட்டுகிறார் டிரைவர் . செல்ஃபி.....?என்றதும் மூச்ச்ச்.......! என அதட்டுகிறார்.
ஏன் என்று கேட்டதும் ராஜநாகம் வாக்கிங் வரும் பகுதி இது என வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.வால் நுனியில் நின்றபடி நமக்கு முகத்துக்கு நேராகத் தலையைக் கொணர்ந்து ராஜநாகப்பாம்பு பீய்ச்சியடிக்கும் நச்சானது அங்கிருந்து யூ- டர்ன்‌ அடித்துத் திரும்பி முக்காலி வருவதற்குள் வேலையைக் காட்டி விடும் என்கிறார்.
முக்காலியில் இருந்து பாலக்காடு அல்லது கோயம்புத்தூருக்கு மருத்துவமனை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் ஆன்மா மேலுலகம் சென்று சேர்ந்துவிடும் என்று அசால்டாகச் சிரிக்கிறார் .
ராஜநாகம் குளிர்ச்சியான பகுதியில் தான் வாழும் என்பதால் 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில்தான் வேறு இடங்களில் பிடிபடும் ராஜ நாகங்களையும் கொண்டுவந்து வனத்துறையினர் விடுவதாகச் சொல்கிறார்.

ராஜநாகத்துடன் விளையாட்டு வேண்டாம் என்று ஏகமனதாகப் பெருந்தன்மையுடன் முடிவெடுத்து விட்டு ஜீப்பில் அமர்ந்தபடியே காட்டைக்‌ கண்டுகளித்தபடி வந்து கொண்டிருக்கிறோம் .

பளிங்கு போலத் தெளிந்த நீரோடைகளும் ,சிற்றருவிகளும்‌,மரகதம் போல ஒளிரும் பச்சை பொங்கும் தாவரங்களும், மண்வாசனையும் ,மலை வாசனையும் ,மழை வாசனையும் அந்தப் பகுதியை அப்பழுக்கற்ற தூய்மையான மாசுமறுவற்ற இடமாகத் துலக்குகின்றன.

பிளாஸ்டிக் பைகளையும் உணவுகளையும் வெளியில் எறிந்துவிட வேண்டாம் என கைடு அடிக்கடி நினைவூட்டுகிறார் .

சற்று முன் தான் யானைகள் கடந்து சென்றிருக்க வேண்டும் என்பதற்கான அடையாளமாகச் சாலையில் கிடக்கும் யானைச்சாணக் குவியல்கள், யானைகள் செய்த அட்டகாசத்தில் சிதைந்து கிடந்த மரஞ்செடி கொடிகள் ஆகியவை
தென்படுகின்றன.

வாட்ச் டவர் இருக்கும் பகுதி வந்து சேர்கிறது. இங்கு சுழற்சி முறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் வனத்துறையினருக்குமான விடுதிக் கட்டிடம் தவிர மனிதன் உருவாக்கிய வேறெதுவும் இல்லை. அழகான சிறிய பூங்கா ஒன்றும் இருக்கிறது .
வாகனத்தை விட்டு இறங்கி 100 அடி உயரமுள்ள கோபுரத்தின் மீது ஏற ஆரம்பிக்கிறோம் . ஒவ்வொரு தளத்திலும் சிறிய கண்ணாடி அறை ஒன்று இருக்கிறது. கருவுற்ற பெண்கள், ரத்த அழுத்தக் கோளாறு உள்ளவர்கள், உயர ஒவ்வாமை உடையவர்கள் தவிர்த்துவிடுவது நல்லது.

வாட்ச் டவரை அண்ணாந்து பார்த்துத் திரும்பி, "எப்படியும் சாயந்தரத்துக்குள் மேல ஏறிடணும்....!" என கணேசன் அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் நமது டீமில் எப்பொழுதும் புயல் வேகத்தில் மலையேறும் சதாசிவம் அவர்கள் பாதி உயரம் ஏறி நின்று நம்மைப் பார்த்துப் கையசைத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கோபுரத்தில் யானை ஏறி வராது ...ஆனால் புலி ஏறி வர வாய்ப்பிருக்கிறது... கோப்ராவுக்குக் கோபுரம் பிடிக்குமா பிடிக்காதா ....என நாங்கள் கீழே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அவர் அடுத்த தளத்தில் நுழைந்து செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக மேலே ஏற ஆரம்பித்தாயிற்று. மேலேறி உச்சிக்கு வந்து மூச்சு வாங்கி நாலாப்புறமும் பார்க்கிறோம் .சொற்களால் விளக்க இயலாத அழகின் பிரம்மாண்டத்தையும், குளுமையையும், பசுமையையும் ,கோபுரத்தின் சன்னமான அதிர்வையும் இன்னும் எங்களால் உணர முடிகிறது ..ஓர் அரை மணி நேரமாவது தன்னிலை மறந்து நிற்க முடிகிற இடம் இது. முன்பொருமுறை வந்த போது ஒன்றரை மணி நேரம் கோபுர உச்சியிலேயே அமர்ந்து கிடந்தது நினைவுக்கு வருகிறது.

எட்டுத்திக்கும் கொட்டிக்கிடந்த பசுமை போர்த்திய மலைத் தொடர்களின் ஊடாகக் குந்தி ஆறு வெண்மை ததும்பி நுரைக்க நுரைக்கத் தாவிக் குதித்து ஓடி வருவது உச்சியிலிருந்து பார்க்க அற்புதமாக இருக்கிறது.

"இருள் என்பது மிகக் குறைந்த ஒளி" என்பார் பாரதியார். இங்கு அமைதி என்பது மிகக் குறைந்த ஒலியாக இருக்கிறது .
மிக மெல்லியதாகக் கேட்கும் குந்தியாற்றின் ஒலியைத் தவிர வேறு எதுவும் இங்கு செவிகளுக்குப் புலனாகவில்லை. பொதுவாக மலைக்காடுகளில் கேட்கும் உயிரினங்களின் பல்வேறு விதமான குரலொலிகளும் ரீங்காரங்களும் இங்கு இல்லை. குறிப்பாக கிரீச் கிரீச் எனத் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் சில்வண்டு என்று நாம் அழைக்கும் சுவர்க் கோழி இங்கு இல்லை. நள்ளிரவுகளில் சுவர்க்கோழிகளின் ஓயாத குரலொலிகளைக் கேட்காமல் நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எங்கும் போகமுடியாது .ஆங்கிலத்தில் CICADA எனப்படும் இவ்வகை வண்டினங்கள் இங்கு இல்லாததே இங்கு உறைந்து கிடக்கும் பேரமைதிக்கு மிகப்பெரும் காரணம் . சைலன்ட் வேலி என்னும் பெயர் வர இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

உலகின் மிகப் பழைமையான மழைக்காடுகளில் ஒன்றான இப் பள்ளத்தாக்குப் பகுதி சைரந்திரி மலை என வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் ஜீப் சஃபாரி செல்லும்பொழுது சைரந்திரி என்று எழுதப்பட்ட மைல்கற்களைப் பார்க்கலாம். பாண்டவர்களுடன் திரௌபதி இங்கு சிலகாலம் வனவாசம் இருந்ததன் அடையாளமாகத் திரவுபதியின் மற்றொரு பெயரான சைரந்திரி என்ற பெயரால் இப்பகுதி அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது . அதுவே நாட்பட மருவி ஆங்கிலேய நாவுகளால் சைலன்ட் வேலி ஆனது எனவும் கூறப்படுகிறது.

அரிதான உயிரினமான சிங்கவால் குரங்குகள் ( Macaca silenus) வாழும் பகுதி என்பதால் அவற்றின் உயிரியல் பெயரான
Macaca silenus என்பதிலிருந்தும் இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

தேசியப்பூங்காக்கள், வனவிலங்கு உய்வகங்கள், புலிகள் காப்பகங்கள், வனவிலங்குச் சரணாலயங்கள் பலவற்றை உள்ளடக்கி ,தமிழ்நாடு, கேரளா கர்நாடகா என மூன்று மாநிலங்களில் கிட்டத்தட்ட 6000 சதுர கிலோ மீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் நீலகிரிப் பல்லுயிர் வலயம் என்கிற நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் (Nilgiri Biosphere Reserve) ஒரு பகுதிதான் அமைதிப் பள்ளத்தாக்குத் தேசியப் பூங்கா என அழைக்கப்படும் இந்த சைலன்ட் வேலி நேஷனல் பார்க். ( Silent Valley National Park ).
பல நூறு வகையான அரிய விலங்குகள்‌,பறவைகள்‌,பூச்சிகள்,தாவரங்களைக் கொண்டுள்ள இப்பகுதியில் பவானி ஆறும் ,குந்தியாறும் பாய்கின்றன .
புலி,யானை,சிறுத்தை,காட்டெருமை உட்படப் பலவிதமான விலங்குகள் நிறைந்த பகுதி இது.

கோபுரத்தின் உச்சியில் இருந்து தட்டுத் தடுமாறிக் கீழே இறங்கி அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் அழைத்துப் போகிறார்கள். மேலே இருந்து பார்த்த குந்தியாற்றங்கரையின் விளிம்பு வரை செல்ல முடிகிறது.
டிக்கெட் கவுண்டர் வளாகத்தில் மாட்டப்பட்டிருந்த பல்வேறு புகைப்படங்களில் ஒன்று எல்லோர் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டு இருந்தது .ஒரு புலி முழு யானையையும் அடித்து ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிட்ட புகைப்படம் அது. ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்த பிறகு ஓர் இடத்தைக் காட்டி இதுதான் சம்பவம் நடந்த இடம் என்றார் கைடு. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் .
சிசிடிவி கேமராவில் சிக்கிய சம்பவம் அது. புலி இடத்தைக் காலி செய்யும் வரை இப்பகுதி பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது.

குந்திப் புழயின் கரையைத் தொட்டுத் திரும்பி வரும்வரையில் வனப்பும் வியப்பும் திகிலும் திரில்லும் கூடவே வருகின்றன.

ஜீப்பில் திரும்பத் தொடங்குகிறோம்.காலை 9:30 மணிக்கு ஆரம்பித்த சஃபாரி பிற்பகல் 02:30 மணிக்கு நிறைவுறுகிறது.

முக்காலியில் உள்ள உணவகம் ஒன்றில் கறிச்சோற்றுடன் மதிய உணவை முடித்துக்கொண்டு மன்னார்க்காட்டை நோக்கித் திரும்புகிறோம் .அடுத்து 20 கிலோமீட்டர் தூரம் கொண்டை ஊசி வளைவுகள் நிரம்பிய சாலை . மாலை 4 மணிக்கே பெரும்பாலும் எதிரில் இருபதடி தூரத்தில் இருப்பது கூடத் தெரியாத அளவு பனி சூழ்ந்த பகுதி இது . இரவு நேரங்களில் ஆனைகட்டியில் இருந்து மன்னார்க்காடு வரை பயணிப்பது ஆகப்பெரும் திரில்லாக இருக்கும். பாலக்காடு- கோழிக்கோடு நெடுஞ்சாலையில் மன்னார்க்காட்டில் இணைந்து பாலக்காட்டை நோக்கித் திரும்புகிறோம்.

பல நூறு கிலோ மீட்டர் தூரம் நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையானது பாலக்காட்டில் சற்று இடைவெளிவிட்டுத் தொடங்குகிறது.ஏறத்தாழ 32 கிலோ மீட்டர் அகலமுள்ள இந்த இடைவெளிதான் உலகின் முக்கியக் கணவாய்களில் ஒன்றான பாலக்காட்டுக் கணவாய் ஆகும். மன்னார்க்காட்டிலிருந்து மலைத்தொடரின் அருகிலேயே கணவாயை நோக்கித் தொடரும் இந்த முப்பது கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் இடதுபுறம் எந்த ஊரில் திரும்பினாலும் ஏதேனும் ஒரு பிக்னிக் ஸ்பாட் இருக்கிறது.

சிறுவாணி அருவி, சிறுவாணி அணை, அட்லஅருவி, தோணி அருவி, காஞ்சிரப்புழ அணை, கார்டன்,மீன் வல்லம் அருவி, முத்திக்குளம் அருவி, மலம்புழ அணை, அணைத் தோட்டம், கவத் தீவுத் திட்டுகள், பாம்புப்பண்ணை, குண்டம்பொட்டி அருவி ,வட்டப்பாற அருவி,வாட்டர் தீம் பார்க் என வீக் என்ட் விஸிட்டிங் ஸ்பாட்டுகள் நிறைய உண்டு. நாம் தேர்ந்தெடுத்தது இம்முறை காஞ்சிரப்புழ அணையை .தச்சம்பாற என்ற இடத்தில் நெடுஞ்சாலையிலிருந்து இடப்புறம் திரும்பினால் எட்டுக் கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது.

இவ்வணை மலைகள் சூழ்ந்து விளிம்புவரை நீர் நிரம்பி இருக்கிறது. அணையின் மதகுகள் அனைத்தும் திறக்கப்பட்டு நீர் இரைச்சலுடன் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. வெளியேறும் நீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

அணைக்கு முன்பு அமைந்திருக்கும் கார்டனில் நிச்சயம் அரை நாள் செலவு செய்யலாம். விளையாட்டுப் பூங்கா நிறையப் புதிய வகைச் சாதனங்களுடன் குழந்தைகளை ஈர்க்கிறது. மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் கார்டன் ரம்மியமாக இருக்கிறது .பூங்காவின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள மிக நீளமான புல்தரை நிச்சயம் யாரையும் கவரும்.
அமைதியான, அழகான, நிறைவான கார்டன் இது.
அங்கிருந்து பாலக்காட்டை அடைந்து நான்கு வழிச்சாலையில் கோவையை வெகுவிரைவில் அடைந்துவிடலாம். ஒரு நாள் முழுவதும் பசுமைக்குள்ளாகவே வாழ்ந்ததில் சுவாசிக்கும் காற்றுக் கூடப் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

நொடிகளையும் நிமிடங்களையும் பயணங்கள்தான் எவ்வளவு அழகாக ஆக்குகின்றன என ரசித்தவாறே அடுத்த பயணத் திட்டத்தை ஆலோசித்த படி இரவு உணவுக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

நன்றிகள் :-

பயணம் முழுக்க டைமிங்கில் ரைமிங்காகப் பஞ்ச் டயலாக்குகளாகக் கொட்டி ட்ரிப்பைக் கலகலப்பாக வைத்திருந்த கணேசன் அவர்களுக்கு...!

ஒவ்வொன்றையும் ஷார்ப்பாக அப்சர்வ் செய்து அதைப் பல்வேறு விஷயங்களுடன் பொருத்தி அனலைஸ் செய்து சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் வாய்ப்புகள் கொடுத்துக்கொண்டே வந்த ரவி சாருக்கு....!

நுணுக்கமான தகவல்களை அப்பொழுது கூறி வந்ததுடன் நமது யூடியூபில் வெளியிட அனைத்து இடங்களையும் சலிப்பின்றி வீடியோவாக ஷூட் செய்த முகம்மது ரஃபி அவர்களுக்கு......!

அனைவரையும் அழகான ஃபோட்டோக்களாகச் சுட்டுத்தள்ளி, ஆக்டிவாக நாள்முழுவதும் இருந்ததுடன் அனைவரையும் எனர்ஜி குறையாமல் பார்த்துக் கொண்ட சதாசிவன் அவர்களுக்கு.....!


Comments

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?