யாப்பருங்கலக்காரிகை (YAAPPARUNGKALAK KAARIKAI) நூலறிமுகம்

பழம்பெரும் மொழியான தமிழின் பண்டைய இலக்கியங்களை நோக்குங்கால், அவற்றுக்கும் முன்னரே எத்தனை ஆண்டு காலமாய் இம்மொழி வழக்கிலிருந்து வந்திருக்க வேண்டும், பண்பட்ட மொழிக்குச் செம்மையான இலக்கணங்கள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை நினைக்க வியப்புப் பெருகுகிறது.அக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்கள் இன்று கிடக்கப் பெறவில்லையெனினும்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அவை இல்லாமல் இன்று கிடைக்கப் பெற்றிருக்கிற பழந்தமிழிலக்கியங்கள் வடிக்கப்பட்டிருக்க முடியாதெனத் துணியலாம்.
   நாமறியும் அகத்தியரே கூட செய்தாரெனக் கொளினும் , அவரும் அவர் காலத்துக்கு முன்பிருந்த இலக்கண நூல்களையெல்லாம் ஆராய்ந்துதானியற்றியிருப்பாரென்பது தெளிவு.எழுத்து . சொல். பொருள், யாப்பு , அணி என்னும் ஐந்திலக்கணத்தில் அகத்தியத்தில் விரிவாய்க் கண்ட செய்யுளிலக்கணத்தையே தொல்காப்பியர் தொகுத்தும், பல்காப்பியர் பகுத்தும் தந்தனர் என்பார் உச்சிமேற் புலவர் நச்சினார்க்கினியர்.பல்காப்பியருக்கு முன்பே பல்காயனார் போன்றோரும் , பின்பு காக்கை பாடினியார் , சிறுகாக்கைபாடினியார் , அவினயர்,நக்கீரனார், நத்தத்தனார், மயேச்சுரர் முதலானோரும் செய்யுளிலக்கணஞ் செய்தாலும் அவையாவும் இன்றில.
  ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியமே இன்றும் வழங்கி வருகிறது. ஆயினும் நாமிங்கு எடுக்த்தாராயும் யாப்பருங்கலக்காரிகையென்னுஞ் செய்யுளிலக்கண நூல் தொல்காப்பியத்தின் வழி வந்ததன்று. தொல்காப்பியத்தையடியொற்றிய காக்கைப்பாடினியத்தைப் பின்பற்றியெழுந்த யாப்பருங்கலத்தின் வழிப்பட்டதாம்.இன்று இலக்கணமறிய, எழுத்துக்குஞ் சொல்லுக்கும் நன்னூலும், பொருளுக்குத் தொல்காப்பியமும், வெண்பாமாலையும், யாப்பு எனுஞ் செய்யுளுக்கிந்த யாப்பருங்கலக்காரிகையும், அணிக்குத் தண்டியலங்காரமுமே மிகுதியாகக் கற்கப்படுகின்றன.
  எளிமையான இலக்கண நூலான யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலத்தின் அங்கமாய் , அலங்காரமுடைத்தாகச் செய்யப்பட்டமையினிப் பெயர் பெற்றது. காரிகை என்பது பெண்ணைக் குறிப்பதால் , மகடூஉ முன்னிலையில் யாப்பருங்கலத்துக்கு அங்கமாய்ப்  பாடப் பெற்றமையினிப் பெயர் வந்திருக்கலாம். அதேபோல், காரிகையென்னும் கட்டளைக் கலித்துறையானமந்தமையானுமிப் பெயர் பெற்றிருக்கலாம். பொதுவாக, யாத்தல்-கட்டுதல் என்பதிலிருந்து யாப்பு- செய்யுள் என்றாகி அதனுடன் அணிகலனெனும் பொருளில் அருங்கலமும் பின்னூலில் காரிகையும் சேர்ந்து பெயர் தந்தனவெனக் கொள்ளலாம்.

 "சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொல்ஞான
மெல்லம் விளக்கி யிருளகற்றும்-நல்யாப்
பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி 
ஒருங்கறிய வல்லா ருணர்ந்து "

 எனும் வெண்பா யாப்பருங்கலத்தின் பெருமையினைப் புலப்படுத்தும் இதன் வழிப்பட்ட காரிகையையும், இதனையும் ஒருவரே செய்தாரென்பதையும் அவரைக் குறித்துமினி வருமிடுகைகளிற் காண்போம்.

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி