பழம்பெரும் மொழியான தமிழின் பண்டைய இலக்கியங்களை நோக்குங்கால், அவற்றுக்கும் முன்னரே எத்தனை ஆண்டு காலமாய் இம்மொழி வழக்கிலிருந்து வந்திருக்க வேண்டும், பண்பட்ட மொழிக்குச் செம்மையான இலக்கணங்கள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை நினைக்க வியப்புப் பெருகுகிறது.அக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்கள் இன்று கிடக்கப் பெறவில்லையெனினும்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அவை இல்லாமல் இன்று கிடைக்கப் பெற்றிருக்கிற பழந்தமிழிலக்கியங்கள் வடிக்கப்பட்டிருக்க முடியாதெனத் துணியலாம். நாமறியும் அகத்தியரே கூட செய்தாரெனக் கொளினும் , அவரும் அவர் காலத்துக்கு முன்பிருந்த இலக்கண நூல்களையெல்லாம் ஆராய்ந்துதானியற்றியிருப்பாரென்பது தெளிவு.எழுத்து . சொல். பொருள், யாப்பு , அணி என்னும் ஐந்திலக்கணத்தில் அகத்தியத்தில் விரிவாய்க் கண்ட செய்யுளிலக்கணத்தையே தொல்காப்பியர் தொகுத்தும், பல்காப்பியர் பகுத்தும் தந்தனர் என்பார் உச்சிமேற் புலவர் நச்சினார்க்கினியர்.பல்காப்பியருக்கு முன்பே பல்காயனார் போன்றோரும் , பின்பு காக்கை பாடினியார் , சிறுகாக்கைபாடினியார் , அவினயர்,நக்கீரனார், நத்தத்தனார், மயேச்சுரர் முதலானோரும் செய்யுளிலக்...