Posts

Showing posts from November, 2023

அழைக்கிறான் , அழைக்கின்றான் ....எது சரி ..?

  அழைக்கிறான் , அழைக்கின்றான் ....எது சரி என அண்மையில் சகோதரி ஒருவர் கேட்டிருந்தார். இரண்டுமே சரிதான் . பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம் . ஒரு பதத்தைப் பகுக்கும்பொழுது பகுதி, விகுதி ,இடைநிலை ,சந்தி,சாரியை ,விகாரம் என அப்பதம் விரியும். ஒவ்வொரு பதமும் இவை அனைத்தையும் அல்லது ஒரு சிலவற்றைக் கொண்டு அமையும் . இவற்றுள் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை . இது, வினை இடைநிலையாக வரும் பொழுது முக்காலமும் காட்டும் . அவற்றுள் நிகழ்கால இடைநிலைகள் தான் கிறு, கின்று ஆநின்று ஆகியவை. "ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின் ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை" நன்னூல் : 143 அழைக்கிறான் : அழை + க் + கிறு + ஆன் அழை- பகுதி (ஏவலாக வரும்) க்- சந்தி கிறு - நிகழ்கால இடைநிலை ஆன்- ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி. அழைக்கின்றான் அழை + க் + கின்று + ஆன் அழை - பகுதி க்- சந்தி கின்று - நிகழ்கால இடைநிலை ஆன் - ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி. அழையா நின்றான் - ஆநின்று - எதிர்மறை இடைநிலை. இறந்த கால இடைநிலைகள் நான்கு. த், ட் ,ற், இன். "தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து இறந்த காலம் தரும் த...

9 மணி நேர ட்ராஃபிக் ஜாம்

 வயநாட்டுக்குத் தாமரசேரியில் இருந்து ஏறுவது என்றைக்குமே சலிக்காத விஷயம் ....அதுவும் மழைப்பொழுதுகள் என்றால் அந்தப் பயணம் அதியற்புதமாக இருக்கும். 60 நிமிடங்கள் எடுக்கும் 30 கிலோமீட்டர் நீளம் உள்ள மலைச்சாலை முழுவதுமே பேரழகு நிரம்பி வழியும்.  மாலை 3:30 மணிக்குத் தாமரசேரியிலிருந்து வலப்புறம் வயநாட்டை நோக்கித் திரும்பியாயிற்று . கருக்கல் கட்டிக் கொண்டிருந்த மேகம் மழையாக இறங்கத் தொடங்கியிருந்தது . ஜோரான தொடக்கம் என முழுமையாக மகிழ்ந்து முடியும் முன் நமக்கு முன்பாக வாகனங்கள் தேங்க ஆரம்பித்து அப்படியே நிற்கத் துவங்கின. ஒன்றிரண்டு காவலர்கள் தென்பட்டதும் ஏதோ டிராஃபிக் ஜாம் போல, பத்து நிமிடங்களில் சரியாகிவிடும் என நான் நினைக்கக் கடவுள் வேற ஒன்றை நினைத்திருந்தார். நம்புங்கள்... ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய அந்த மலைச்சாலையை நாங்கள் கடக்க 9 மணிநேரம் பிடித்தது.  விரைவில்‌ சரியாகி‌விடும் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே இரண்டு மூன்று கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து இருக்கும்போது மணி ஏழாகிவிட்டிருந்தது . திரிசங்கு நிலை.... இப்படியும் போக முடியவில்லை அப்படியும் போக...

அழுகிறானா ....அழுகுகிறானா?

 அழுகிறானா ....அழுகுகிறானா? தொழிற்பெயரான அழுதல் என்பது ஒரு செயல். அழுதான் அழுகிறான்  அழுவான் என்று சொல்லும் பெரும்பாலானோர் எதிர்மறையாகச் சொல்லும் போது, அழுகவில்லை, அழுக மாட்டான்,  இனிமேல் அழுகப்போவதில்லை என்றே சொல்கிறார்கள் . அழவில்லை  அழமாட்டேன்  அழப்போவதில்லை என்பது சரி. அழுகுதல் அழுகவில்லை  அழுகப்போவதில்லை  அழுக மாட்டேன் என்பதெல்லாம் பழங்களையோ காய்கறிகளையோ சொல்லும் போது பயன்படுத்தப்பட வேண்டியவை . அழுதல் வேறு அழுகுதல் வேறு அழுதது வேறு அழுகியது வேறு அழவில்லை வேறு அழுகவில்லை வேறு. 'அழுவான்' என்றால் துன்பம் தாங்காமல் அழுவான் எனப் புரிந்து கொள்ளலாம் .'அழுகுவான்' என்றால் அவன் இறந்த பிறகு அவனது பிணம் அழுகிப் போய்விடும் என புரிந்து கொள்ளலாம் . இதுவே தான் தொழுதலுக்கும். தொழுதல்  தொழவில்லை  தொழுவேன்  தொழ மாட்டேன்  தொழப் போகிறேன்  தொழச் சொன்னேன் ஆகியவை சரியான பயன்பாடுகள். தொழுகுதல் தொழுகவில்லை தொழுகுவேன் தொழுக மாட்டேன் தொழுகப் போகின்றேன் தொழுகச் சொன்னேன் ஆகியவை தவறான பயன்பாடுகள்.